தமிழ்நாடு

“மக்களிடையே தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கையை உறுதிசெய்ய வேண்டும்” - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு!

முகக்கவசம் கட்டாயம்; தகுதியானவர்களுக்கு தடுப்பூசி அவசியம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு தமிழக அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

“மக்களிடையே தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கையை உறுதிசெய்ய வேண்டும்” - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது மீண்டும் நாளொன்றுக்கு நோய்த் தொற்று 7,000-ஐ நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழக முதல்வர் தலைமையில் மருத்துவ வல்லுநர் குழுவுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவையாவன:

1. பரிசோதனைகளை அதிகப்படுத்தி நாளொன்றுக்கு நோய்த் தொற்றின் விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழ் கொண்டுவர வேண்டும். ஆர்டி-பிசிஆர்

சோதனைகளை நாளொன்றுக்கு 90,000 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளுக்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். மேலும் பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்த வேண்டும்.

2. நோய்த் தொற்று ஏற்பட்டவரின் உடன் இருப்பவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்தபட்சமாக 25 முதல் 30 நபர்களை விரைவாக கண்டறிந்து பரிசோதனை செய்யப்பட வேண்டும். நோய்த் தொற்று இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

3. தமிழ்நாடு முழுவதும் தேவையான அளவில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து சளி, மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. தமிழ்நாட்டில் ஏப்ரல் 10 அன்று 1,309 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட தெருக்கள் மற்றும் குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு, மூன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்தப் பகுதி நோய் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

5. கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து தொற்றின் வீரியத்திற்கு ஏற்றவாறு கோவிட் கவனிப்பு மையம் அல்லது பிரத்தியேக கோவிட் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

6. கோவிட் தொற்றினை தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்களுக்கு மீண்டும் வலியுறுத்த வேண்டும். நிலையான வழிபாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

7. கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மக்களிடையே இத்தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.

8. அந்தந்த தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பணியிடங்கள், சந்தைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில், சம்பந்தப்பட்ட அமைப்புகள், பெருநகர சென்னை மாநகராட்சி/ மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கோவிட் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் அதிக நபர்களுக்கு தடுப்பூசி போட இயலும். குறிப்பாக, களப்பணி ஆற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும், அடுத்த இரு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

9. கோவிட் தொற்றினால் ஏற்படும் மரணங்களை குறைக்க அரசு வெளியிட்டுள்ள நிலையான சிகிச்சை நெறிமுறைகளை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும்.

10. மேலும், பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பாட்டில் வைக்கப்பட வேண்டும்.

மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள, ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

தனி மனித இடைவெளியை (6 அடி இடைவெளி) கடைபிடிக்க வேண்டும். முறையாக சோப்பு போட்டு, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். திருமணங்களில் 100 நபர்கள் மற்றும் துக்க நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல், வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

திரையரங்குகள், காய்கனி சந்தைகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என இந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகைய இடங்களில் பணிபுரிபவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம்.

நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்றவேண்டும்.

இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories