தமிழ்நாடு

கண்ணன் சஸ்பெண்ட்.. பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது நடவடிக்கை இல்லை - யார் தயவால் தப்பிக்கிறார் ராஜேஷ்தாஸ்?

ராஜேஷ்தாஸ் தப்பிக்க, அவரால் ஏவப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, தம் கைகள் சுத்தம் எனக் காட்டிக்கொள்ள முயல்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு.

கண்ணன் சஸ்பெண்ட்.. பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது நடவடிக்கை இல்லை - யார் தயவால் தப்பிக்கிறார் ராஜேஷ்தாஸ்?
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பியாக இருந்த ராஜேஷ்தாஸ், அண்மையில் முதல்வர் பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் சென்றபோது உடன் சென்றார். அப்போது மாவட்ட எஸ்.பியான பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிப்புக்குள்ளான பெண் எஸ்.பி டி.ஜி.பி திரிபாதியிடம் புகார் அளிப்பதற்காக தனது காரில் சென்றபோது, பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் வழிமறித்து, சிறப்பு டி.ஜி.பி குறித்து புகார் செய்ய வேண்டாம், இதனால் தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்று மிரட்டினார்.

செங்கல்பட்டு டி.எஸ்.பி மூலமாக பெண் எஸ்.பியின் கார் சாவியையும் பிடுங்கி வைத்துக்கொண்டார். இதனால் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன், அவருடன் இருந்த டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

இந்நிலையில், பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் அத்துமீறிச் செயல்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீது ஐ.பி.சி பிரிவு 354 A (2), 341, மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.பி கண்ணனை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர், தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து, செங்கல்பட்டு எஸ்.பி., கண்ணனை சஸ்பெண்ட் செய்யுமாறும், அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழக தலைமைச் செயலாளருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால், பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ராஜேஷ்தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, அவர் மீது சி.பி.சி.ஐ.டி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதோடு நிற்கிறது.

பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு மட்டுமல்லாமல், புகார் அளிக்கச் சென்ற பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை தமக்கு நெருக்கமான அதிகாரிகளை அனுப்பி மிரட்டி, அச்சுறுத்தலுக்குள்ளாகிய ராஜேஷ் தாஸை இன்னும் கைது கூட செய்யாமல் பாதுகாத்து வைத்திருக்கிறது அ.தி.மு.க அரசு.

வழக்கம்போல், அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பவர்களுடான நெருக்கம் காரணமாக ராஜேஷ்தாஸ் கடும் நடவடிக்கைகள் இன்றி தப்பிக்க, அவரால் ஏவப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, தம் கைகள் சுத்தம் எனக் காட்டிக்கொள்ள முயல்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு.

banner

Related Stories

Related Stories