தமிழ்நாடு

“காரிலேயே கைகளில் முத்தமிட்டார்” - ராஜேஷ் தாஸ் மீதான எஃப்.ஐ.ஆர் மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பெண் அதிகாரி அளித்த பாலியல் புகாரில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“காரிலேயே கைகளில் முத்தமிட்டார்” - ராஜேஷ் தாஸ் மீதான எஃப்.ஐ.ஆர் மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி-யாக பொறுப்பு வகித்து வந்த ராஜேஷ் தாஸ், பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், தரமிறக்கம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் மீதும் சி.பி.சி.ஐ.டி வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாலியல் புகார் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரில், “முதல்வரின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வரும் வழியில் ராஜேஷ் தாஸை வரவேற்க மாவட்ட எல்லைகளில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் காத்திருந்தபோது குறிப்பிட்ட பெண் எஸ்.பியிடம் சட்டம் ஒழுங்கு குறித்து பேசவேண்டும் என்று தனது காரில் ஏறும்படி கூறியுள்ளார்.

கார் உளுந்தூர்பேட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, பெண் ஐ.பி.எஸ் அதிகாரி வசதியாக அமருவதற்காக காரில் headrest தலையணையை சரிசெய்து அவருக்கு சில திண்பண்டங்களையும் ராஜேஷ்தாஸ் வழங்கியுள்ளார். ஆனால் அவற்றை ஏற்க பெண் ஐ.பி.எஸ் அதிகாரி மறுத்துள்ளார்.

பின்னர், அவரது கையை பிடித்த ராஜேஷ் தாஸ் அவரிடம் பாட்டு பாடச் சொல்லி கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே, பாடுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் தானே ஒரு பாடலைப் பாடியுள்ளார். அவரது செயல்களால் பெண் அதிகரி சங்கடமான போதும் கைகளைக் கோர்த்துக்கொண்டு இம்சித்திருக்கிறார் ராஜேஷ் தாஸ்.

பின்னர், டிரைவரின் கண்ணாடியை மேல்நோக்கி திருப்பச் சொல்லிவிட்டு, ஐ.பி.எஸ் அதிகாரியின் கைகளில் முத்தமிட்டுள்ளார் ராஜேஷ் தாஸ். இதனால் பதறிப்போன பெண் அதிகாரி கைகளை உதறி தடுக்க முயன்றுள்ளார். சிரித்தபடி கைகளை விட்ட ராஜேஷ் தாஸ், மீண்டும் அவரது கைகளைப் பிடித்து ”5 நிமிஷம்தான்” எனக் கூறியிருக்கிறார்.

“காரிலேயே கைகளில் முத்தமிட்டார்” - ராஜேஷ் தாஸ் மீதான எஃப்.ஐ.ஆர் மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பதட்டத்தில் பெண் அதிகாரிக்கு வியர்த்துக் கொட்டவே, துடைத்துக்கொள்ள துண்டையும் எடுத்துக் கொடுத்திருக்கிறார் ராஜேஷ் தாஸ். மேலும், பல விஷயங்கள் குறித்துப் பேசிக்கொண்டே பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாதுகாப்பு பணியில் இருந்தபோது அவருக்கே தெரியாமல் எடுத்த புகைப்படத்தையும் காட்டியிருக்கிறார் ராஜேஷ் தாஸ்.

அடுத்த சில நிமிடங்களில் அடுத்த மாவட்ட எல்லைகளில் மற்ற காவல்துறை அதிகாரிகளை கண்டதும் பெண் அதிகாரியின் கையை விட்டிருக்கிறார். இதனையடுத்து வேகமாக காரை விட்டு இறங்கிய பெண் அதிகாரி உடனடியாக அங்கிருந்த ஜியா-உல்-ஹக் என்ற ஐ,பி.எஸ் அதிகாரியின் காரை கேட்டு வாங்கி வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

நடந்த சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் மற்றும் வட மாநிலத்தில் பணியாற்றும் தனது கணவரிடமும் தெரிவித்துள்ளார். மறுநாளே ராஜேஷ் தாஸ் மீது புகாரளிக்க சென்னைக்கு செல்வதாக ஐ.ஜி ஜெயராமனிடம் தெரிவித்துள்ளார் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி.

அப்போது எஸ்.பிக்கள் ஜியா-உல்-ஹக், திஷா மிட்டல், அபினவ் ஆகியோர் ராஜேஷ் தாஸுக்கு எதிராக புகார் அளிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். பெண் அதிகாரி அவர்களைப் பொருட்படுத்தாத நிலையில், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் உள்ளிட்ட போலிஸ் அதிகாரிகள் வாகனத்தை மறித்துள்ளனர். கார் சாவியை எடுத்துக்கொண்டு, ராஜேஷ் தாஸிடம் பேசுங்கள் என மிரட்டியுள்ளனர்.

வேறு வழியின்றி போனை வாங்கிய பெண் அதிகாரியிடம், “காலில் விழுகிறேன்; புகார் அளிக்க வேண்டாம்” எனக் கெஞ்சியுள்ளார். ராஜேஷ் தாஸிடம் பேசிய பின்னரே, அங்கிருந்து பெண் அதிகாரியின் கார் கிளம்ப அனுமதித்துள்ளனர்.

இந்தப் பாலியல் தொல்லைச் சம்பவம் குறித்து அறியாத பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் மாமனாரிடமும் சமாதானம் பேசுவதற்கு ராஜேஷ் தாஸ் முயன்ற தகவலும் எஃப்.ஐ.ஆர் மூலம் வெளியாகி உள்ளது.

எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் 3 மாவட்ட எஸ்.பிக்கள் உட்பட 15 போலிஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories