தமிழ்நாடு

”அதிகார வெறியால் எங்களை படாதபாடுபடுத்தினார்” - ராஜேஷ் தாஸ் டார்ச்சரால் அவதியுற்ற போலிஸார் நிம்மதி!

அ.தி.மு.க அரசின் ஏகபோக ஆதரவு பெற்றவர் என்பதால், தனது அதிகாரப்பசியால் காவல்துறையினரையும் வதைத்து வந்துள்ளார் ராஜேஷ் தாஸ்.

”அதிகார வெறியால் எங்களை படாதபாடுபடுத்தினார்” - ராஜேஷ் தாஸ் டார்ச்சரால் அவதியுற்ற போலிஸார் நிம்மதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி-யாக பொறுப்பு வகித்து வந்த ராஜேஷ் தாஸ், பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், தரமிறக்கம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ராஜேஷ்தாஸ் மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றியபோதே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல பெண் அதிகாரிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பாலியல் குற்றச்சாட்டுகள் தவிர வேறு பல புகார்களும் ராஜேஷ் தாஸ் மீது உள்ளன. தென்மண்டல ஐ.ஜி-யாக பணியாற்றியபோது, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மிரட்டியதாக ராஜேஷ் தாஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

கூடங்குளம் போராட்ட பிரச்னையில் தடியடி உள்ளிட்ட பெரும் சர்ச்சைகளுக்கு காரணமானவர் ராஜேஷ் தாஸ். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜையின்போது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டபோது அங்கு பணியிலிருந்தவர் ராஜேஷ் தாஸ்.

ராஜேஷ் தாஸ் குறித்து காவல்துறை வட்டாரத்தில் கேட்டால், குமுறுகின்றனர் அதிகாரிகள். அ.தி.மு.க அரசின் ஏகபோக ஆதரவு பெற்றவர் என்பதால், தனது அதிகாரப்பசியால் காவல்துறையினரையும் வதைத்து வந்துள்ளார் ராஜேஷ் தாஸ்.

ராஜேஷ் தாஸ் காலையில் சைக்கிளிங் செய்வதற்காக அவர் செல்லும் மாவட்டங்களுக்கு அவரது உத்தரவின்பேரில் சென்னையில் இருந்து சைக்கிளும் அனுப்பப்படுமாம். ஆனால் சைக்கிளில் ஒரு கி.மீ தூரம் கூட பயணிக்கமாட்டாராம். மீண்டும் அவரது சைக்கிளை சென்னைக்கு அனுப்பும் பொறுப்பையும் அதிகாரிகளே ஏற்க வேண்டுமாம். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியவர்களை சைக்கிளை பாதுகாக்க வைக்கிறாரே என அதிகாரிகள் புலம்பியுள்ளனர்.

மேலும், பாதுகாப்பிற்குச் செல்லும் இடங்களில் தன்னை விட மூத்த அதிகாரிகள் வாகனம் நிறுத்தும் இடங்களில் நிறுத்தி தனது அதிகாரத்தைக் காட்டுவாராம் ராஜேஷ் தாஸ். தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளை மரியாதைக் குறைவாக அடிமையைப் போல நடத்துவார் என்றும் போலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூத்த அதிகாரிகளைக் கூட ஆலோசிக்காமல் அவசரகதியில் நள்ளிரவு நேரங்களில் உத்தரவுகளைப் பிறப்பித்து காவல்துறையினரை பாடாய்ப்படுத்துவார் என்றும் குமுறுகின்றனர் அதிகாரிகள். இவ்வாறு காவல்துறையை கபளீகரம் செய்திருந்த ராஜேஷ் தாஸ் சிக்கியதில் போலிஸார் நிம்மதியடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories