தமிழ்நாடு

"பெரியார் சிலைக்கு திருநூறு, குங்குமம் அணிவித்து அவமதித்த கும்பல்” - ஆளுங்கட்சி துணையோடு அராஜகம்!

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நெற்றியில் விபூதி, குங்குமப் பொட்டு வைத்து அவமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பெரியார் சிலைக்கு திருநூறு, குங்குமம் அணிவித்து அவமதித்த கும்பல்” - ஆளுங்கட்சி துணையோடு அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க தயவோடு தமிழகத்தில் இயங்கும் அ.தி.மு.க ஆட்சியில் பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை அவமதிக்கும் போக்கு தொடர்ந்து வருகிறது. ஆளுங்கட்சியின் துணையோடு பெரியார் சிலைக்கு காவி வேடமிடும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி துணை போலிஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே பெரியார் சிலை உள்ளது. இந்த சிலைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நெற்றியில் விபூதி, குங்குமப் பொட்டு வைத்து அவமதிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலிஸார் உடனடியாக அங்கு சென்று பெரியார் சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த மாலைகளை அகற்றி, விபூதி, குங்குமம் ஆகியவற்றை அழித்து சிலையை சுத்தம் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தந்தை பெரியாரின் சிலையை அவமதிப்பது என்பது பா.ஜ.க.வை வழிகாட்டியாகக் கொண்ட அ.தி.மு.க ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. சில நாட்களுக்கு முன் ஒரத்தநாட்டில் இந்த அவமதிப்பு நடந்தது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளியை இதுவரை கண்டுபிடிக்கவில்லை; அந்த ஈரம் காய்வதற்கு முன் சீர்காழியில் தந்தை பெரியார் சிலை சிறுமைப்படுத்தப்பட்டு உள்ளது.

நெற்றியில் திருநீற்றுப் பட்டைப் போட்டு, குங்குமத்தையும் அப்பி, கீழ்த்தரமான புத்தியைக் காட்டியுள்ளனர். இதில் என்ன கொடுமையென்றால், காவல் நிலையம் எதிரிலேயே தந்தை பெரியார் சிலைக்கு இந்த அவமரியாதை நடந்திருக்கிறது என்பதுதான்.

வழக்கம்போலவே மனநலம் பாதிக்கப்பட்டவர் இந்த வேலையைச் செய்துவிட்டான் என்று கூறி, கோப்பை முடித்துவிடப் போகிறார்களா?

தமிழகம் தழுவிய அளவில் - தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுவதையும், காவல்துறையின் அலட்சியத்தையும் கண்டித்து அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய அளவில் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று அ.தி.மு.க அரசு எதிர்பார்க்கிறதா?

தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம்பெறும்

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர் சிலைகள் அ.தி.மு.க. ஆட்சியில் அவமதிக்கப்படுவதும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் அலட்சியம் காட்டுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம்பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு - எச்சரிக்கை!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories