தமிழ்நாடு

’லஞ்சம் வாங்காமல் பணி செய்தால் என்னுடைய நிலைமைதான் வரும்’ : வீடியோவில் கதறிய சிறப்பு எஸ்.ஐ

காவல்துறை சீருடையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காவல்துறையினர் மீதே புகார் தெரிவித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

’லஞ்சம் வாங்காமல் பணி செய்தால் என்னுடைய நிலைமைதான் வரும்’ : வீடியோவில் கதறிய சிறப்பு எஸ்.ஐ
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மருத்துவ விடுப்பு ஏற்றுக்கொள்ளப்படாததால் பணியில் இருந்து விலகிக் கொள்வதாக காவல்துறை சீருடையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தெரிவித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர் மணிமுத்து. இவர் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவரிடம் கையொப்பம் பெற்று மருத்துவ விடுப்பு எடுத்து அதனை தபால் மூலம் எடையூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்த நிலையில் எடையூர் காவல் நிலைய ஆய்வாளர் அதனைப் பெற மறுத்து திருப்பி அனுப்பி உள்ளார்.

மருத்துவ விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய மணிமுத்து இதுதொடர்பாக வருகை பதிவேட்டில் பார்த்தபோது மருத்துவ விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பணிக்கு வரவில்லை என்று எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக எடையூர் காவல் ஆய்வாளரிடம் கேட்டபோது டி.எஸ்.பி கூறினால்தான் மருத்து விடுப்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறினார். மேலும் இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி துரையை சந்தித்து புகார் தெரிவித்த போதும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த மணிமுத்து பணியிலிருந்து தான் விலகி கொள்வதாக மிகுந்த மன வேதனையுடன் காணொளி ஒன்றை பதிவிட்டு அந்தக் காணொளியை தமிழக முதல்வர், காவல்துறை இயக்குனர், திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலருக்கு அனுப்பி உள்ளார்.

மக்களுக்கு சேவை செய்வதற்காக காவல்துறை பணியில் சேர்ந்து லஞ்சம் எதுவும் வாங்காமல், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் பணியாற்றிவரும் தனக்கு இந்த செயல் மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும் உடனடியாக காவல்துறை பணியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் மிகவும் மண வேதனையுடன் எடையூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமுத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது குடும்பத்தினருடன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் எடையூர் காவல் நிலையத்தில் காவலர் பற்றாக்குறை நிலவுவதாகவும், பலருக்கு ஒரே நேரத்தில் பல இடங்களில் பணி ஒதுக்கப்படுவதால் காவல்துறையினர் மிகுந்த மனவேதனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை சீருடையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காவல்துறையினர் மீதே புகார் தெரிவித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories