தமிழ்நாடு

“இன்று பெண்கள் பாதுகாப்பு தினமா? அ.தி.மு.கவிடம் இருந்து பெண்களை பாதுகாக்கும் தினமா?”- ஆர்.ஈஸ்வரன் கேள்வி!

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டி.ஜி.பி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

“இன்று பெண்கள் பாதுகாப்பு தினமா? அ.தி.மு.கவிடம் இருந்து பெண்களை பாதுகாக்கும் தினமா?”- ஆர்.ஈஸ்வரன் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் போக்குத் தொடர்ந்தால் தி.மு.க மாபெரும் போராட்டத்தில் இறங்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பெண் எஸ்.பி கூறிய பாலியல் புகாரை விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை இல்லாததன் விளைவே, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு சிறப்பு டி.ஜி.பி பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் சம்பவம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண்கள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு கொண்டாடும் நிலையில் ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு சிறப்பு டி.ஜி.பி பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி இருப்பது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக உயர் பதவியில் இருக்கிறோம் யார் என்ன செய்து விட முடியும் என்ற தைரியத்தில் பாலியல் சீண்டல்களை பெண்களுக்கு எதிராக சர்வ சாதாரணமாக செய்ய துணிகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸே ஒரு பெண் காவல்துறை அதிகாரியிடம் அருவருப்பான செயலில் அத்துமீறி ஈடுபட்டிருப்பது தமிழக காவல்துறையையே களங்கப்படுத்தி இருக்கிறது. சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்களில் அதிகார மையத்தில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல் மென்மையான போக்கை கடைபிடித்து குற்றவாளிகளை காப்பாற்றுவதே இதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணம்.

“இன்று பெண்கள் பாதுகாப்பு தினமா? அ.தி.மு.கவிடம் இருந்து பெண்களை பாதுகாக்கும் தினமா?”- ஆர்.ஈஸ்வரன் கேள்வி!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குற்றங்கள் குறையும், கயவர்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்க முடியும். பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயன்ற சிறப்பு டிஜிபி மீது கடுமையான நடவடிக்கையை தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் உடனடியாக எடுக்க வேண்டும்.

தமிழக அரசு அமைத்திருக்கும் விசாகா கமிட்டி இந்த குற்றச்செயலை நீர்த்துப் போக செய்து குற்றவாளியை காப்பாற்றி விடக்கூடாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் எச்சரிக்கின்றோம். இன்று பெண்கள் பாதுகாப்பு தினமா அல்லது அ.தி.மு.கவிடம் இருந்து பெண்களை பாதுகாக்கின்ற தினமா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories