தமிழ்நாடு

“சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவத்தை காக்கும் அரசாக தி.மு.க அரசு அமையும்”: மு.க.ஸ்டாலின் உறுதி!

‘சாமான்யம், சாமான்யன்’ என்று சொல்லிக் கொண்ட கலைஞர் அவர்கள் தான் சாமானியர்களுக்காக ஆட்சி நடத்தினார் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவத்தை காக்கும் அரசாக தி.மு.க அரசு அமையும்”: மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்புக்காக திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்ட சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது; அதைக் காக்கும் அரசாக தி.மு.க. அரசு அமையும்"

"அனைத்துத் தரப்பு மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள அரசாக அ.தி.மு.க. அரசு மாறிவிட்டது: இந்த அச்சத்தைப் போக்கி வளர்ச்சியில் உச்சத்தைத் தொடும் அரசாக தி.மு.க. அரசு அமையும்"

- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

இன்று (15-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், அரியலூர் மாவட்டம், கொல்லாபுரம் பகுதியில் நடைபெற்ற, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் பேசியதன் விவரம் வருமாறு:

சித்ரா என்பவர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

அவர்கள் மனுவை படித்து பார்த்தேன். அவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். மாற்றுத்திறனாளி என்று அவர்களே சொன்னார்கள். சித்ராவிற்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் ஆதரவு இல்லாத காரணத்தினால் இந்த கூட்டத்தை நாடி வந்திருக்கிறார்கள். நம்மை நாடி வந்திருக்கிறார்கள். நம்மை நம்பி வந்திருக்கிறார்கள். உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது. நம்முடைய கழக ஆட்சி வந்தபிறகு இடஒதுக்கீடு, உங்கள் படிப்புக்கேற்ற வேலை நிச்சயமாக கிடைக்கும். உங்களுடைய மண வாழ்க்கை நல்லபடியாக அமைய என்னுடைய வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

“சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவத்தை காக்கும் அரசாக தி.மு.க அரசு அமையும்”: மு.க.ஸ்டாலின் உறுதி!

முருகேசன் என்பவர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

நீங்கள் பேசியதை கேட்டேன். உங்கள் மனுவையும் படித்து பார்த்தேன். அறிவித்து 25 ஆண்டுகள் ஆகியும் ஜெயங்கொண்டம் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி இந்தப் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வந்தார். அப்போது இந்த பிரச்சினை பற்றி என்னிடம் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 14 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. திட்டமும் தொடங்கப்படவில்லை. நிலமும் திரும்பும் தரப்படவில்லை. பட்டாவும் இல்லாமல் நீங்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகியிருக்கிறீர்கள். நிச்சயமாக 3 மாதத்தில் வரவிருக்கும் கழக ஆட்சியின் மூலமாக உங்களுக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

செல்வகுமார் என்பவரது கோரிக்கைக்கு பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

அரசு ஆலைக்கு நிலம் கொடுத்தோர் சங்க உறுப்பினர் செல்வக்குமார் - அரசு தனக்கு உறுதியளித்தபடி பணி இன்னும் வழங்கப்படவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். பல ஊர்களில் இதுபோல நிலம் கையகப்படுத்தும்போது கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை. 3 வருடங்களாக பணிக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிருக்கிறார். கவலைப்படாதீர்கள். உங்கள் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை நிச்சயம் நமது அரசு எடுக்கும்.

இந்த அரியலூர் தொகுதியின் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர், அவரைப்பற்றி என்ன சொல்லலாம் என்று யோசனை செய்து கொண்டிருந்தபோதே அண்மையில் தினமலர் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஒரு ரகசிய தகவல் வந்தது. அதாவது ஆளுங்கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதனால் உடம்பு சரியில்லை என்று படுத்துக் கொண்டு நடித்திருக்கிறார். சமீபத்தில் அமைச்சர் ஒருவர் இறந்து போனார். அவரும் இப்படிதான், அவரிடம் பணம் கொடுத்து வைத்திருந்ததாகவும், அதை திரும்ப பெறுவதற்காக அவரது பினாமிகளை மிரட்டப்பட்டதாகவும் செய்திகள் வந்தது. கவலைப்படாதீர்கள். ஆட்சி மாறியதும் இது போன்ற ஏராளமான உண்மைகள் வெளிவரும். வெளிவந்து அவர்களுக்கு உரிய தண்டனையை நிச்சயமாக நம் கழக ஆட்சியின் மூலமாக வழங்குவோம் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

“சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவத்தை காக்கும் அரசாக தி.மு.க அரசு அமையும்”: மு.க.ஸ்டாலின் உறுதி!

சாவித்ரி என்பவர் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

கணவர் இல்லை. 2 பெண் குழந்தைகள் எனக்கு இருக்கிறது. விதவையாக இருக்கிறேன். எனக்கு அரசு எந்த இழப்பீடும் தரவில்லை. உதவித்தொகை வழங்க வில்லை. எனக்கு ஒரு மறுவாழ்வு வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயமாக நம்முடைய ஆட்சி வந்த பிறகு உங்களுடைய மனு விரைவில் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கவலைப்படாதீர்கள். தைரியமாக இருங்கள்.

இப்போது தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தி.மு.க. தான் ஆட்சிக்கு வரப்போகிறது, அ.தி.மு.க. வரப்போவதில்லை என்பது ஆளுங்கட்சியில் இருக்கும் அத்தனை பேருக்கும் தெரிந்து விட்டது. அதனால் இப்போது முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் அவசர அவசரமாக பல டெண்டர்கள் விட்டுக் கொண்டிருக்கிறார். 3 வருடம் கழித்து முடியும் பிரச்சினைகள், 4 வருடம் கழித்து முடியும் பிரச்சினைகளுக்கு இப்போது அவசரமாக டெண்டர் விட்டுக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் ஆட்சியில் இருக்கப்போவதில்லை. அதனால் டெண்டர் விட்டு கமிஷன் வாங்கி விடலாம் அல்லவா, அதற்காக அவ்வாறு டெண்டர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே ஆளுநரிடம் ஒரு புகார் கொடுத்திருக்கிறோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலந்தூர் பாரதி அவர்கள் மூலமாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறோம். முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் தன்னுடைய சம்பந்திக்கு, சம்பந்தியின் சம்பந்திக்கு கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விட்டு அதில் கமிஷன் வாங்கியிருக்கிறார். சட்டத்தை மீறி கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்று புகார் கொடுத்திருக்கிறோம்.

அதனை நீதிமன்றம் விசாரித்து ‘இதில் உண்மை இருக்கிறது. எனவே இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் வேண்டும்’ என்று உத்தரவு போட்டது. சி.பி.ஐ. விசாரிக்க ஆரம்பித்து விட்டால் பழனிசாமி முதலமைச்சராக இருக்க முடியாது. ராஜினாமா செய்ய வேண்டும். அதனால் அவர் என்ன செய்தார் என்றால் சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கி வைத்திருக்கிறார்கள். உண்மையாக தைரியமிருந்திருந்தால் ராஜினாமா செய்துவிட்டு, சி.பி.ஐ. விசாரணையை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் சென்று தடை வாங்கி வைத்திருக்கிறார். அவ்வாறு முதலமைச்சர் தடை வாங்காமல் இருந்திருந்தால் அவர் இப்போது வெளியில் இருக்க முடியாது. முதலமைச்சராக இருக்க முடியாது. முதலமைச்சராக மட்டுமல்ல, சிறையில்தான் இருக்க வேண்டும். அதுதான் உண்மை. 10 நாட்களுக்கு முன்பு ஒரு அக்கிரமம் நடந்து இருக்கிறது. அந்த செய்தியை சன் டி.வி. ஆதாரத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள். தேர்தல் நெருங்கி வருகின்ற நேரத்தில் 3,384 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விட்டு கடைசிநேர வசூல் செய்திருக்கிறார்கள்.

இதுவரை அடித்த கொள்ளைகள் போதாதென்று புதிதாக இன்னொரு கொள்ளை அடித்திருக்கிறார்கள். எதற்காக இந்த டெண்டர் என்றால் தஞ்சை - நாகை மாவட்டங்களில் காவிரி நீர் பாசன திட்ட பராமரிப்பிற்கு 3,384 கோடி ரூபாய் செலவில் திட்டம் போட்டிருப்பதாக பொதுப்பணித் துறையால் டெண்டர் விட்டுள்ளார்கள். வழக்கமாக 1 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்களை, டெண்டர் வழங்கும் குழு தான் முடிவு செய்யும். அந்தக் குழு, பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் தலைமையில் செயல்படும்.

அதில் நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்டோரும் அந்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். அந்த நடைமுறையை திருத்தம் செய்து இருக்கிறார்கள். அவசர அவசரமாக திருத்தம் செய்து விட்டு 2 நாட்களில் டெண்டர் விட்டிருக்கிறார்கள். கடந்த ஜனவரி 31ம் தேதி விதியை திருத்தி 2 நாட்களில் டெண்டர் விட்டிருக்கிறார்கள். 3384 கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகளை துணிச்சலாக செய்கிற ஆட்சிதான் இந்த ஆட்சி. எனவே அதைப்பற்றி இப்போது ஒரு வீடியோ குறும்படம் உங்களுக்கு போட்ட காட்டப்போகிறோம். அதையும் நீங்கள் பாருங்கள். இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து உரையாற்றினார்.

“சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவத்தை காக்கும் அரசாக தி.மு.க அரசு அமையும்”: மு.க.ஸ்டாலின் உறுதி!

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வின் நிறைவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எந்த உயர்வு தாழ்வும் இல்லை! பொருளாதார ரீதியாக ஏழை - பணக்காரர் என்ற வேறுபாடும் இருக்கக் கூடாது! ஆணும் பெண்ணும் சமம்! யாருக்கும் யாரும் அடிமை அல்ல! எல்லார்க்கும் எல்லாம்!

- இத்தகைய உன்னதமான நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது தான் திராவிட இயக்கம். இந்த இயக்கத்தை தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள், இதனை சமூகசீர்திருத்த இயக்கமாகத் தான் தொடங்கினார். இத்தகைய சமூகசீர்திருத்த சிந்தனைகளை சட்டமாக ஆக்குவதற்கு அரசியல் அதிகாரம் தேவை என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சிந்தித்தார்கள். இதனைத் தேர்தல் இயக்கமாக மாற்றினார்கள். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். இரண்டே ஆண்டுகளில் பேரறிஞர் அண்ணாவை இழந்தோம். அதன்பிறகு ஐம்பதாண்டு காலம் இந்த இயக்கத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழிநடத்தினார்கள்.

ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி செலுத்தி இருக்கிறோம். ஐந்து முறையும் அமைந்த கழக அரசு என்பது கொள்கை அரசாக - கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக - அதே நேரத்தில் மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக அமைந்திருந்தது.

சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் – பெண்ணுரிமை - மாநில சுயாட்சி - இளைஞர் நலன் - உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் ஆட்சியாக அமைந்திருந்தது.

கழக ஆட்சி என்றால் கொள்கை அரசாகவும் - மக்களுக்கு சேவையாற்றும் அரசாகவும் அமையும் என்ற இலக்கணத்தை பேரறிஞர் அண்ணா அவர்களும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் ஒரு பாதையை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். இன்னும் மூன்றே மாதத்தில் அமைய இருக்கும் கழக அரசும் கொள்கை அரசாகவும்- மக்களுக்கு சேவை ஆற்றும் அரசாகவும் தான் அமையும்!

இன்றைக்கு அனைத்து தரப்பு மக்களும் அச்சத்தில் இருக்கிறார். வேளாண்மையை நம்பி இருக்கும் விவசாயிகளா? மூன்று வேளாண் சட்டங்களால் அச்சமடைந்து இருக்கிறார்கள். நிலம் பாதுகாக்கப்படுமா என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். விவசாய சலுகைகள் நீடிக்குமா? இலவச மின்சாரம் தொடருமா? என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்குமா என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

நெசவாளப் பெருமக்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்குமா? பருத்தி, நூல்கள், தயாரிக்கும் துணிகளுக்கு உரிய விலை கிடைக்குமா என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் அச்சத்தில் இருக்கிறார். அரசு ஊழியர்கள் மிரட்டப்படுகிறார்கள், போராடும் ஊழியர்கள் மீது வழக்குகள் பாய்கிறது, சம்பளம் மற்றும் இதர சலுகைகள் பறிக்கப்படுகின்றன. ஓய்வூதியதாரர்கள் நலன்கள் மொத்தமாக ரத்து செய்யப்படுகிறது. எனவே, 'அரையணா காசாக இருந்தாலும் அரசாங்க காசு' என்ற நம்பிக்கையோடு வேலையில் சேர்ந்தவர்கள் அச்சப்படுகிறார்கள்.

“சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவத்தை காக்கும் அரசாக தி.மு.க அரசு அமையும்”: மு.க.ஸ்டாலின் உறுதி!

அரசு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் ஏராளமான முறைகேடுகள் தலை தூக்கிவிட்டது. தகுதியானவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள்.

படித்து முடித்த இளைஞர்களுக்கு சரியான வேலைகள் கிடைப்பதில்லை. புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. உரிய ஊதியம் கிடைப்பது இல்லை! பெண்கள், சொந்தக் காலில் நிற்பதற்காக கழக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன, அவர்களுக்கு கடன்கள் தரப்பட்டன. ஆனால் அவை இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டு விட்டது. கிராமசபை கூட்டமாக இருந்தாலும், இது போன்ற கூட்டமாக இருந்தாலும் விரக்தி அடைந்த வாழ்க்கை நெருக்கடியைச் சந்திக்கும் ஏராளமான பெண்களை நான் பார்க்கிறேன்!

விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதியவர்கள், நோயாளிகள், யாருடைய ஆதரவும் இல்லாத மக்களின் முன்னேற்றத்துக்காக கழக அரசால் உருவாக்கப்பட்ட சமூகநலத் திட்டங்கள், இந்த அ.தி.மு.க. அரசால் சரியாக செயல்படுத்தப்படவில்லை. உரிய உதவிகள், சலுகைகள் அவர்களுக்கு போய் சேரவில்லை.

பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வேலைவாய்ப்புக்காக திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்ட மகத்தான கொள்கைதான் சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு. இன்று மத்திய அரசின் தவறான கொள்கையால் அந்த சமூகநீதிக் கொள்கைக்கு தடை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

''நான் சமுதாயத்தில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன். நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற காரணத்தால், பின் தங்கிய வகுப்பினர் நலனுக்காக என்னுயிரையே பணயமாக வைத்துப் போராடுவேன்'' என்று முதன் முதலில் முதலமைச்சர் ஆனபோது கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் சொன்னார்கள். ‘சாமான்யம், சாமான்யன்’ என்று சொல்லிக் கொண்ட கலைஞர் அவர்கள் தான் சாமானியர்களுக்காக ஆட்சி நடத்தினார்.

1969 ஆம் ஆண்டு முதல்முதலில் முதலமைச்சர் ஆன கலைஞர் அவர்கள் தான் ஆதிதிராவிடர் நலத்துறையையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையையும் உருவாக்கினார்கள். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார்கள். அந்தப் பரிந்துரைப்படி சமூகநீதியை அமல்படுத்தினார்கள்.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 18 சதவிகிதமும் - பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவிகிதமும் - பொதுப்பிரிவினருக்கு 51 சதகிதமும் வழங்கிய தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!

1987ம் ஆண்டு வன்னிய மக்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு இந்த வட்டாரத்தில் கடுமையான போராட்டம் நடந்தது. தி.மு.க. வெற்றி பெற்று கலைஞர் முதலமைச்சர் ஆன 43-வது நாள் வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டை முதலமைச்சர் கலைஞர் கொடுத்தார்.

இந்த முப்பதாண்டு காலத்தில் கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் படித்து வேலைக்கு போய் முன்னேற கலைஞர் கொடுத்த இடஒதுக்கீடு மிக முக்கியக் காரணமாக இருந்தது.

“சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவத்தை காக்கும் அரசாக தி.மு.க அரசு அமையும்”: மு.க.ஸ்டாலின் உறுதி!

1987-ல் நடந்த சாலைமறியலில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் கருணைத் தொகை கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர். அந்தக் குடும்பங்களுக்கு மாதம் 1500 ரூபாய் பென்ஷன் வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர். இன்றைக்கு அந்தக் குடும்பங்கள் மாதம் 3 ஆயிரம் பணம் பெற்று வருகிறார்கள்.

கோனேரிக்குப்பத்தில் நடந்த வன்னியர் சங்க வெள்ளிவிழா மாநாட்டுக்கு தலைவர் கலைஞரை மேடையில் வைத்துக் கொண்டு டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்கள் சொன்னார், ''1987ம் ஆண்டு முதல் இடஒதுக்கீட்டுக்காக நாங்கள் போராடினோம், போராடினோம், 21 உயிர்களைப் பலி கொடுத்ததைத் தவிர ஒன்றும் நடக்கவில்லை. அன்றிருந்த அ.தி.மு.க. முதலமைச்சரைப் பார்க்க 7 ஆண்டு காலம் மனுப்போட்டேன் பார்க்க முடியவில்லை! ஆனால் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தார். வந்தவுடன் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.

என்னைக் கூப்பிட்டு இடஒதுக்கீடு தந்த கலைஞர் அவர்களே உங்களுக்கு என் நன்றி! இந்தச் சமுதாயம் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மட்டும் 20 சதவீதம் இடஒதுக்கீடு தாவில்லை என்றால், இங்கே முன்னாள் மத்திய அமைச்சர் சொன்னதைப் போல, கூலி வேலை செய்து கொண்டு ஓட்டு மட்டும் போடுகின்ற ஒரு சமுதாயமாக இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம் இருந்திருக்கும். அதை மாற்றிய பெருமை, அதற்கு வழிவகுத்த பெருமை, கலைஞர் அவர்களையே சாரும்." என்று பெருமையோடு அன்று டாக்டர் ராமதாஸ் அவர்கள் பேசினார். அத்தகைய சாதனையைச் செய்த இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

வன்னியர் சமூகத்துக்கு இத்தகைய நலத்திட்டங்கள் என்றால் இன்னொரு பக்கம் ஆதிதிராவிடர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் கழக ஆட்சியில் செய்து தரப்பட்டன.

ஆதிதிராவிடர் நலத்துறை, அவர்களுக்கான இடஒதுக்கீடு, ஆதிதிராவிடர் வீட்டுவசதிக்கழகம், ஆதிதிராவிட மாணவர்க்கு இலவசப் பாடப் புத்தகங்கள், இலவச பகல் உணவு, ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் குடியிருப்புகள், மாணவர் இல்லங்கள், நவீன வசதியுள்ள விடுதிகள், உழவு மாடுகள் வாங்க கடன், தரிசு நிலங்கள் வழங்கியது, வீட்டுமனைகள், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு, தீண்டாமைக் குற்றங்களைக் கண்காணிக்க குழு, அம்பேத்கர் பெயரால் சட்டப்பல்கலைக் கழகம், மகளிர் கல்லூரி, அம்பேத்கர் படத்துக்கு நிதி உதவி, அம்பேத்கர் பெயரால் விருது, அம்பேத்கர் நூற்றாண்டு விழா என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தி.மு.க.வைப் பொறுத்தவரை இது ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம். ஆட்சியில் இருந்தால் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமையை சட்டமாக்கும். ஆட்சியில் இல்லாவிட்டால் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகப் போராடும். பட்டியல் இனச் சமூகமாக இருந்தாலும், பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் தமிழர்களாக நினைத்து பாதுகாக்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். அவர்களது பாதுகாப்புக்கு நலத்திட்டங்களை உருவாக்கும் ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி! இன்றைக்கு மத்திய அரசின் தவறான கொள்கையல் சமூகநீதிக் கொள்கைக்கு தடையேற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சமூகநீதியைக் காப்பது ஒன்று தான் தமிழினத்தின் எதிர்காலத்துக்கு மிக முக்கியமானது. தமிழர்களின் எதிர்காலம் இதில் தான் அடங்கி உள்ளது.

சிறுபான்மையினரான மக்களுக்கு அச்சம் தருவதாக குடியுரிமைத் திருத்தச் சட்டம் மாறிவருகிறது. அதனை எப்போது வேண்டுமானாலும் மத்திய பாஜக அரசு அமல்படுத்தலாம்.

சாலைகள் போடுவது - போட்ட சாலைகளையே தோண்டி மறுபடி போடுவது - பாலம் கட்டுவது; தேவையில்லாத இடத்தில் பாலம் கட்டுவது - கட்டடம் கட்டுவது - இது ஒன்று தான் பழனிசாமி அரசில் நடக்கிறது. இதுவும் மக்கள் கோரிக்கை வைக்கும் திட்டங்களில் செயல்படுத்தப்படவில்லை. இதில் மட்டும் தான் பணம் அடிக்க முடியும் என்பதற்காக 10 கோடி செலவாகும் என்றால் அங்கே 50 கோடி பில் போடுவது. 50 கோடி செலவாகும் என்றால் 300 கோடி போடுவது - இது தான் பழனிசாமி ஆட்சி கொள்ளை அடிக்கும் பாதையாக உள்ளது.

பொதுப்பணித்துறை - உள்ளாட்சித் துறை ஆகிய இரண்டுக்கு மட்டும் பணத்தை ஒதுக்கி பங்கு வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் பழனிசாமியும் வேலுமணியும், அ.தி.மு.க. அமைச்சர்களும். அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் பொதுப்பிரச்னையையும் தீர்க்கவில்லை. பொதுமக்களின் பிரச்சனையையும் தீர்க்கவில்லை! தங்கள் கையில் கிடைத்த அதிகாரத்தை பத்தாண்டு காலமாக பாழாக்கிவிட்டார்கள். மொத்தத்தில் பொதுமக்களுக்கு அச்சம் தருகின்ற அரசாக அ.தி.மு.க. அரசு மாறிவிட்டது.

“சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவத்தை காக்கும் அரசாக தி.மு.க அரசு அமையும்”: மு.க.ஸ்டாலின் உறுதி!

இந்த அச்சத்தை போக்கும் அரசாக தி.மு.க. அரசு அமையும். மக்களின் அச்சத்தை போக்கும் அரசாக மட்டுமல்ல - வளர்ச்சியில் உச்சத்தை தொடும் அரசாக தி.மு.க. அரசு அமையும். மு.க.ஸ்டாலினாகிய நான் உங்கள் பிரச்னைகளை 100 நாட்களில் தீர்ப்பேன் என்று சொன்னால், தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையால் தான் சொல்கிறேன். ஒரு அரசாங்கம் மனது வைத்தால், ஒரு தனிமனிதனின் பிரச்னையை நிச்சயம் தீர்க்க முடியும். ஒரு தனிமனிதனின் பிரச்னைக்காக, ஒரு மணி நேரம் ஒதுக்கி அப்பிரச்னையை பற்றி சிந்தித்தாலே போதும், அதற்கான உரிய பரிகாரத்தை நிச்சயம் காண முடியும்.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். தீர்க்கமுடியும் என்று என் மனம் சொல்கிறது. அதற்கு தேவை அரசியல் அதிகாரம். ஆட்சி அதிகாரம். மக்கள் வழங்க இருக்கும் ஆட்சி அதிகாரத்தின் மூலமாக, மக்களின் பிரச்னைகளை நிச்சயம் தீர்க்க முடியும்.

இரண்டு மாநில அரசுகள் தீர்க்க வேண்டிய கோரிக்கையையோ - பல்லாயிரம் கோடி செலவு செய்து உருவாக்க வேண்டிய திட்டத்தையோ, சொல்லவில்லை. உள்ளாட்சி நிர்வாகம், வருவாய் துறை நிர்வாகம் முறையாகச் செயல்பட்டு இருந்தால் தீர்த்திருக்கக் கூடிய பிரச்னைகளை தான் நீங்கள் சொன்னீர்கள். ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினரால் செய்யக் கூடிய கோரிக்கைகளைத் தான் சொன்னீர்கள்.

அ.தி.மு.க. அரசு செய்ய மறந்ததை - செய்ய மறுத்ததை - செய்வேன் என்று சொல்லி ஏமாற்றியதை - தி.மு.க. அரசு செய்யும்!

சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்ற கலைஞர் மகனிடம் மனு கொடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு வந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். கழக ஆட்சி மலரும்! உங்கள் கவலைகள் யாவும் தீரும்! நன்றி வணக்கம்!

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories