தமிழ்நாடு

"இடஒதுக்கீட்டை காப்பாற்றியே தீருவோம் என அ.தி.மு.க அரசு ஏமாற்று வேடமிட்டது அம்பலம்” - மு.க.ஸ்டாலின் சாடல்!

"அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்ப எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும்.”

"இடஒதுக்கீட்டை காப்பாற்றியே தீருவோம் என அ.தி.மு.க அரசு ஏமாற்று வேடமிட்டது அம்பலம்” - மு.க.ஸ்டாலின் சாடல்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த எம்.டெக்.,பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யுடேஷனல் பயாலஜி ஆகிய படிப்புகளில் இந்தாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்ப எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும்.

மத்திய அரசின் நடவடிக்கையைக் காரணம் காட்டி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையே இல்லை என்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பைத் திரும்பப் பெற்று, உயிரி தொழில்நுட்ப எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,” “எம்.டெக்., பயோடெக்னாலஜி”, “எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி” ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயிரி தொழில்நுட்பவியல் துறை இந்தியாவிலேயே முதன் முதலில் 1986ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டது. முதலில் 12 எம்.டெக்., மாணவர்களுடன் தொடங்கப்பட்டு, தற்போது 45 மாணவர்கள் வரை படிக்குமளவிற்கு இத்துறை இயங்கி வருகிறது.

இதுவரை அகில இந்தியத் தேர்வு மூலம், இந்த பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இந்த முறை அண்ணா பல்கலைக்கழகமே மாணவர் சேர்க்கையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் - தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசோ, “மத்திய அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். 69 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க முடியாது. அந்த அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் மாத ஊக்கத் தொகையாக வழங்கப்படும் 12500 ரூபாயை ரத்து செய்து விடுவோம்” என்று, இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக அடம்பிடித்து - அராஜகம் செய்துள்ளது.

கூட்டணிக்கு எப்போதும் காவடி தூக்கும் முதலமைச்சர் பழனிசாமி இந்த மாணவர் சேர்க்கை குறித்து பிரதமரிடம் பேசவில்லை. மாறாக “மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை ஏற்புடையதல்ல என்பதால், 2020-2021-ஆம் ஆண்டில் மேற்கண்ட இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடத்த முடியாமல் இருக்கிறோம்” என்று அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு யார் உத்தரவின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது என்பது கூடப் போடப்படவில்லை. மாறாக “ஆணையின்படி (By Order)” என்று மட்டும் போட்டு - இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கிடையாது என்று கூறி, 45 மாணவர்களின் எதிர்காலத்தை அ.தி.மு.க அரசும் - மத்திய பா.ஜ.க அரசும் பாழ்படுத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

““Institute of Eminence” என்ற அந்தஸ்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டால், 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து இல்லை” என்று இதுவரை மத்திய பா.ஜ.க அரசு கூறி வந்தது பச்சைப்பொய் என்பதும் - 69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்றியே தீருவோம் என்று அ.தி.மு.க அரசு கூறியது வெறும் ஏமாற்று வேடம் என்பதும் அம்பலமாகிவிட்டது. மருத்துவக் கனவைச் சீர்குலைப்பது போல் - உயிரி தொழில்நுட்பவியல் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கனவுகளையும் சிதைக்கும் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனைக்குரியது.

எனவே, தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரான தனது பிடிவாதத்தை உடனடியாக மத்திய பா.ஜ.க அரசு கைவிட்டு - மேற்கண்ட எம்.டெக்., படிப்புகளுக்கும் தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கூட்டணி வைத்துள்ள மத்திய பா.ஜ.க அரசுடன் பேசி, 45 மாணவர்களின் எதிர்காலத்தைக் கூடப் பாதுகாக்க முடியாமல் - இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையே இல்லை என்று அறிவித்திருப்பதைத் திரும்பப் பெற்று - 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயிரி தொழில்நுட்பவியல் துறையில் உள்ள மேற்கொண்ட இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்திட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories