மு.க.ஸ்டாலின்

“மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்! கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்!" : மு.க.ஸ்டாலின்

“எனக்கு வேல் பரிசளிக்கப்பட்டதைப் பார்த்து பழனிசாமி அஞ்சுவது ஏன்? சம்ஹாரம் செய்துவிடுவேன் என்றா? வரும் தேர்தலில் ஜனநாயக ரீதியாக மக்கள் அதைத்தான் செய்யப் போகிறார்கள்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை.

“மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்! கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்!" : மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“எனக்கு வேல் பரிசளிக்கப்பட்டதைப் பார்த்து பழனிசாமி அஞ்சுவது ஏன்? சம்ஹாரம் செய்துவிடுவேன் என்றா? வரும் தேர்தலில் அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக மக்கள் அதைத்தான் செய்யப் போகிறார்கள்” என “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (31-01-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம் நசரேத்பேட்டையில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா? நான் ரெடி, நீங்கள் ரெடியா?

இப்போது நீங்கள் இந்த அரங்கத்தில் பல்லாயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியோடு, ஆர்வத்தோடு, ஆரவாரத்தோடு வந்திருக்கிறீர்கள்.

ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு, கூட்டத்திற்குச் செல்கிறோம் என்று இல்லாமல் நம் வீட்டில் நிகழும் ஒரு நல்ல நிகழ்ச்சிக்குச் செல்வதுபோல வந்திருக்கும் உங்கள் அனைவரையும் நான் இதயபூர்வமாக வருக… வருக… வருக… வரவேற்கிறேன்.

இந்த நிகழ்ச்சியின் நுழைவாயிலில் நம்முடைய தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் அங்கு உட்கார்ந்து மனுக்களைப் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் உங்கள் மனுக்களைக் கொடுத்திருப்பீர்கள் அல்லது உங்கள் பிரச்சினைகளை எழுதிக் கொடுத்து இருப்பீர்கள்.

யாராவது பதிவு செய்யாமல் வந்திருந்தால் தயவு செய்து கூட்டம் முடிந்து செல்லும்போது உங்கள் மனுக்களை அங்கே கொடுத்து விடுங்கள் அல்லது உங்கள் குறைகளைச் சொல்லுங்கள்.

அவர்கள் ஒரு ரசீது கொடுத்திருப்பார்கள். அது தான் முக்கியம். அது இருந்தால் உங்கள் பிரச்சினை நிச்சயமாக, உறுதியாகத் தீரும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்கள் பிரச்சினைகள் தீரவில்லை என்றால் நீங்கள் என்னிடத்தில் உரிமையோடு கேள்வி கேட்கும் அளவிற்கு இந்த ரசீதுக்கு தகுதி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

நாம் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்சினைகள், பேரறிஞர் அண்ணா மீது ஆணையாக – தலைவர் கலைஞர் மீது ஆணையாக - ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியை நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்போது உங்களிடமும் சொல்கிறேன்.

இங்கு பல்லாயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள். நம்பிக்கையோடு வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள். இதுவரையில் நான் 4 கூட்டங்கள் முடித்து 5-வது கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். எல்லாக் கூட்டங்களையும் விஞ்சும் அளவிற்கு இந்த திருவள்ளூர் மாவட்டம் - பூந்தமல்லி தொகுதியில் மிகவும் கட்டுப்பாடாக - அமைதியாகக் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.

எல்லோரையும் பேச வைக்க முடியாது. அதனால் 10 பேர், அதாவது இந்த பெட்டியில் இருக்கும் மனுக்களிலிருந்து 10 பேரது மனுக்களை நானே எடுத்து, அவர்களது பெயரை வாசிப்பேன். அவர்கள் தங்கள் கருத்துகளை சுருக்கமாகப் பேசவேண்டும். இப்போது ஒவ்வொரு சீட்டாக எடுத்து, உங்களை நான் அழைக்கப்போகிறேன். தயவு செய்து உங்கள் கருத்துகளைச் சுருக்கமாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடக்கவுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் தெரிவித்த குறைகளுக்கு பதிலளித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதன் விவரம் வருமாறு:

“ஆவடி தொகுதியை பொறுத்தவரையில், பாண்டியராஜன் எம்.எல்.ஏ. மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரும் ஆவார். அவர் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அல்ல. இந்தி வளர்ச்சித்துறை அமைச்சர் என்று தனது துறைப் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தியின் வளர்ச்சிக்காகத்தான் அவர் பாடுபடுகிறார்.

அவர் முதலில் பாஜ.க., அடுத்து தே.மு.தி.க., அடுத்து அ.தி.மு.க. இப்போதும் தோற்றதும் மறுபடியும் பா.ஜ.க.,வுக்கு செல்கிறாரா? இல்லையா? என்று பாருங்கள். அவர்கள் தோற்கத்தான் போகிறார்கள். அவர் பா.ஜ.க.வுக்கு போகத்தான் போகிறார்.

அவர் ஆர்.எஸ்.எஸ்.இல் இருந்து வந்தவர். அதனால் தமிழ்நாட்டு மக்களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.

நேற்று முன்தினம் இதேபோல, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்“ நிகழ்ச்சிக்கு ஆரணிக்கு சென்றிருந்தேன். அந்த ஆரணியில் நீங்கள் இப்போது பேசியதுபோல, எழிலரசி என்ற சகோதரியைப் பேச வைத்தோம். அப்போது அவர் சிலிண்டர் வெடித்ததில் எங்கள் அம்மா இறந்து விட்டார்கள் என்று சொன்னார். அவர்களுக்கு நிதி உதவியாக 2 லட்சம் கொடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் அறிவித்து விட்டார்கள். ஆனால் இதுவரையில் வந்து சேரவில்லை என்று சொன்னார்.

நான் உடனே அவரிடம், கவலைப்படாதீர்கள் உடனடியாக உங்கள் பிரச்சினை தீர்க்கப்படும் என்று சொன்னேன்.

அந்தப் பெண்ணின் தந்தையார் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதனால் நான் டெல்லியில் இருக்கும் டி.ஆர்.பாலு அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கினார். இது தொடர்பான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

29-ஆம் தேதி மாலையில் 6 மணிக்கு இந்த விவகாரம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை நாம் பார்ப்பதை விட, ஆளும் கட்சிக்காரர்கள் தான் அதிகமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரவோடு இரவாக 10 மணிக்கு இந்த அரசு, அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் 2 லட்சம் ரூபாயை செலுத்தி விட்டார்கள். அதற்கு அந்தப் பெண் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி சொன்னார்கள்.

இதற்கிடையே, அ.தி.மு.க.வின் ஐ.டி. விங், ‘ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார். நாங்கள் 2 மாதத்திற்கு முன்பாகவே கொடுத்துவிட்டோம்’ என்று ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள்.

நான் இதை நிரூபிக்க தயாராக இருக்கிறேன். அவர்கள் 29.01.2021 அன்று அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியதற்கு ஆதாரம் உள்ளது. உண்மையில் அ.தி.மு.க. ஐ.டி.விங்கிற்கு தெம்பு இருந்தால் - திராணி இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள். இதில் அரசியல் தேவையா?

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் எடுத்த நடவடிக்கைகளை விமர்சிக்கிறார்கள். நான் சொல்வது பொய்யாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் நீங்கள் சொன்னது பொய்யாக இருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுப்பேன்.

நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இவ்வளவு செய்கிறோம் என்றால் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று சிந்தித்துப் பாருங்கள்.

கரூர் மாவட்டத்தில், மினி க்ளினிக் ஒன்று கட்டி இருக்கிறார்கள். நேற்று அதனை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அவ்வாறு திறந்து வைக்கும்போதே அந்த பில்டிங் இடிந்து விழுகிறது.

இதேபோல ஒரு வாரத்திற்கு முன்பு, விழுப்புரத்தில் ஒரு அணை திறந்த ஒரு மாதத்திற்குள் இடிந்து விழுகிறது. நமது பொன்முடி அவர்கள் அதற்கு போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது சில அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து விட்டார்கள். அதாவது இரயில் இன்ஜினை திருடியவர்களை விட்டு விட்டு, இரயில் இன்ஜினில் கரி எடுத்தவனை பிடித்தது போல நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆட்சி தான் இந்த ஆட்சி.

ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிகமாக இருக்கின்றன. அதை முறையாக செயல்பட விடாமல் மினி க்ளினிக் என்று மருத்துவ முகாம் போடுவதுபோல இதனை கட்டி கொள்ளை அடிக்கும் ஆட்சி தான் இந்த ஆட்சி.”

இவ்வாறு மக்கள் கூறிய குறைகளுக்குக் கழகத் தலைவர் அவர்கள் பதிலளித்துப் பேசினார்.

“மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்! கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்!" : மு.க.ஸ்டாலின்

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“இப்போது உங்கள் மனுக்கள் அனைத்தும் இந்தப் பெட்டியில் போடப்பட்டுள்ளது. இந்தப் பெட்டியைப் பூட்டி, சீல் வைத்து நான் எடுத்துச் செல்லப்போகிறேன். அந்தச் சாவி என்னிடம் தான் இருக்கப்போகிறது.

விரைவில் தேர்தலைச் சந்திக்கப்போகிறோம். அந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பெறப்போகிறது. நான் 200 தொகுதிகள் என்று சொன்னேன். ஆனால் 234 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உருவாகி இருக்கிறது.

அவ்வாறு ஆட்சிக்கு வந்த பிறகு, மு.க.ஸ்டாலின் ஆகிய நான் என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளப் போகிறேன். அந்தப் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட மறுநாள் இந்தப் பெட்டியை நான் தான் திறப்பேன்.

அதற்குப்பிறகு அந்த மனுக்களில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு ஒரு தனி இலாகா உருவாக்கப்படும். இந்த மனுக்கள் மாவட்ட வாரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு, 100 நாட்களுக்குள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம் என்று அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்கிறேன்.

இந்த ஸ்டாலினை நம்பியும், திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பியும், கைகளில் மனுக்களோடு இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

1962-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், “கேடுகள் போக்கிட, நாடு வாழ்ந்திட, தி.மு.க.விற்கு நல்லாதரவு தாரீர்” என்ற முழக்கத்தை எடுத்து வைத்தார்கள். அதே முழக்கத்தைத்தான் இன்றைக்கு நான் உங்கள் முன்னால் எடுத்து வைக்கிறேன்.

அ.தி.மு.க ஆட்சியால் இந்த தமிழகத்திற்கு எல்லா வகைகளிலும் கேடுகள் சூழ்ந்து விட்டது. உரிமை பெற்ற தமிழகமாக இல்லை. உணர்வு பெற்ற தமிழகமாக இல்லை. சுய ஆட்சி பெற்ற தமிழகமாக இல்லை. சுரணையற்ற தமிழகமாக இருக்கிறது. அடிமைத் தமிழகமாக இருக்கிறது. ஊழல் தமிழகமாக இருக்கிறது.

10 ஆண்டுகளாக இந்தக் காட்சிகளைத்தான் நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல் 5 ஆண்டு காலம் ஊழல் வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், அதற்குப் பிறகு தண்டனை பெற்றுச் சிறைக்குச் சென்று வந்து தன்னுடைய பதவிக்காலத்தை நாட்டு மக்களுக்கு பயன்படுத்தாத வகையிலும் அம்மையார் ஜெயலலிதா ஆட்சியை நடத்தினார்.

அவ்வாறு சிறைக்கு சென்றபோது நடுவில் சிறிது காலம் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வழக்கம்போல் பொம்மை முதலமைச்சராகி, இந்த அரசை செயல்படாமல் முடக்கி வைத்திருந்தார்.

அடுத்த 5 ஆண்டு காலத்தில், தங்களுடைய நாற்காலிகளை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், கொள்ளையடிப்பதற்காகவும், அந்த கொள்ளைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், ஒரு சுயநல ஆட்சியை பழனிசாமியும், பன்னீர் செல்வமும் கொடுத்தார்கள்.

கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தங்களுடைய சுயநலத்திற்காக சூறையாடிய மாபெரும் குற்றவாளிகள் தான் பழனிசாமியும் – பன்னீர்செல்வமும்.

இரண்டு பேரும் கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணம் எவ்வளவு என்று அவர்களுக்கே தெரியாது. அவர்கள் இருவரும் எதிரிகள்தான். அவர்கள் இருவருக்கும் ஆகாது. ஆனால் ஒன்றாகத்தான் இருப்பார்கள்.

ஏன் என்றால் அவ்வாறு நடித்தால்தான் சுருட்ட முடியும். அதனால் ஒன்றாக இருக்கிறார்கள்.

“மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்! கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்!" : மு.க.ஸ்டாலின்

இவர்களை நினைக்கும்போது எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. 2 திருடர்கள் இருந்தார்களாம். ஒருவரை ஒருவரை வீழ்த்த நினைத்தார்கள். அதனால் இரண்டு பேரும் தந்திரமாக ஒருவரை ஒருவர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். எங்கே பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளலாம் என்று கேட்ட போது இரண்டு பேரும் ஆற்று நீரில் நின்றுகொண்டு பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.

அதேபோல 2 பேரும் ஆற்று நீரில் இருந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இவர் வாள் வீசுவார் என்று தெரிந்து அவரும், அவர் வாள் வீசுவார் என்று தெரிந்து இவரும் ஆற்றுக்குள் மூழ்கி தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொண்டார்கள். என்று அந்த கதையில் இருக்கிறது.

அதுபோல எத்தனுக்கு எத்தன் தான் இந்த பழனிசாமியும் ஓ.பி.எஸ்ஸும். அந்த கதையில் அவ்வாறு மூழ்கிய இருவரையும் முதலை கவ்விக் கொண்டு சென்றுவிட்டது. அந்த முதலை யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களுக்கு நன்றாக தெரியும்.

இவர்கள் 2 பேரும் இன்று உலகமகா நடிப்புத் திலகங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், ஜெயலலிதா அவர்களுக்கும் கோயில் திறந்து வைத்திருக்கிறார்கள். அப்போது பேசிய பழனிசாமியும், பன்னீர்செல்வமும் நம்மை விமர்சிக்கிறார்கள்.

நேற்று நான் ‘இந்தியா டுடே’-வுக்கு ஒரு பேட்டி கொடுத்தேன். அப்போது என்னை பேட்டி எடுக்க வந்த ஒரு பெண் நிருபர் என்னிடத்தில், எம்.ஜி.ஆரும் நானும் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து, இதன் பின்னணி என்ன? ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டார்கள்.

அப்போது நான், நன்றாக நினைவிருக்கிறது. 1971ஆம் ஆண்டு அண்ணா மறைவிற்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று - இதுவரை தமிழ்நாட்டில் யாரும் பெற முடியாத வரலாற்று வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி தி.மு.க. தான். கலைஞர் தலைமையில் ஆட்சி அமைந்தது.

அந்தத் தேர்தலுக்கு நான் பிரச்சார நாடகம் நடத்தினேன். ‘முரசே முழங்கு’ என்ற பிரச்சார நாடகத்தில் எனக்கு கலைஞர் வேடம். அதுதான் அந்தப் புகைப்படம்.

அந்த தேர்தலுக்குப்பிறகு வெற்றி விழா நடத்த முடிவு செய்து, அதற்காக தலைவரிடமும், எம்.ஜி.ஆரிடமும் தேதி வாங்கினேன். நடித்த நடிகர்களை பாராட்டி மோதிரம் போட வேண்டும் தலைவர் அவர்கள். எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களைப் பாராட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

அந்த விழாவிற்கு “வெற்றி விழா” என்று நான் தலைப்பிட்டேன். அதற்கு கலைஞர் அவர்கள் ‘நிறைவு விழா’ என்று போடச் சொன்னார்.

ஏனென்றால் “நான் தான் ஒழுங்காக படிக்காமல் விட்டு விட்டேன். நீயாவது கொஞ்சம் படிக்க வேண்டும்” என்று எனக்கு அறிவுரை சொல்லி அவ்வாறு செய்தார்.

நாடகம் நடக்கிறது. அப்போது தலைவர்கள் எல்லாம் பேசினார்கள். அப்போது எம்.ஜி.ஆர். அவர்கள் பேசிய போது, “நான் உன் பெரியப்பாவாக சொல்கிறேன் கேள். ஒழுங்காக படித்து, இப்போது எந்த அளவிற்கு அரசியலில் ஆர்வமாக இருக்கிறாயோ அதே அளவிற்கு இனிமேலும் இருக்க வேண்டும்” என்று அறிவுரை சொன்னார்.

இப்போது எம்.ஜி.ஆரைப் பற்றி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார். இவர் எம்.ஜி.ஆர். முகத்தையாவது பார்த்திருப்பாரா?

இன்றைக்கு தேர்தல் வரும் காரணத்தால்தான் அவர்கள் இவ்வாறு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு கோவிலை திறந்து வைத்துப் பேசிய பழனிசாமி, திருத்தணியில் நான் வேல் வைத்திருந்ததை விமர்சித்துள்ளார். வேல் எனக்கு பரிசளிக்கப்பட்டது. மாவட்டக் கழகச் செயலாளர், பொதுமக்கள், கோயில் பூசாரிகள் எனக்கு வழங்கினார்கள். அதை நான் வைத்திருந்தேன். கடவுள் நம்பிக்கை கூடாது என்று நாம் சொல்கிறோமா? “கோயில்கள் கூடாது என்பதல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விட கூடாது என்பதற்காக” என்று ‘பராசக்தி’ திரைப்படத்தில் தலைவர் கலைஞர் எடுத்துக் கூறியிருக்கிறார்.

“மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்! கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்!" : மு.க.ஸ்டாலின்

இதில் பழனிசாமிக்கு என்ன பிரச்சினை வந்தது? வேலைப் பார்த்ததும் எதற்காக அவர் பயப்படுகிறார். சூரசம்ஹாரம் செய்துவிடுவேன் என்று பயப்படுகிறாரா?

அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக மக்கள் அதைத்தான் நிச்சயம் செய்யப் போகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு மட்டுமல்ல, பழனிசாமி - பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கைக்கும் சேர்த்தே முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்தான் இந்தத் தேர்தல்.

அவர்களை நான் விமர்சிப்பது என்பது தனிப்பட்ட முறையில் அல்ல. பழனிசாமி மீதோ, பன்னீர்செல்வம் மீதோ எனக்கு எந்தப் பகையும் இல்லை. அவர்களது அரசியல் நடவடிக்கைகள் தவறானது. அவர்களது ஆட்சி சுயநலமானது. அதனால் தான் விமர்சிக்கிறேன்.

அவர்களை அகற்றிவிட்டு உன்னதமான, ஒளிமயமான ஆட்சியை தமிழகத்துக்கு அமைத்துத் தருவதற்காக நான் உறுதியேற்றுள்ளேன்.

1971 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ''வீட்டுக்கு விளக்கு - நாட்டுக்குத் தொண்டன், தொண்டு வென்றிட - விளக்கு நிலைத்திட தி.மு.கழகத்திற்கு வெற்றிகளைக் குவிப்பீர்" என்ற முழக்கத்தை முன் வைத்தார்கள்.

அதே முழக்கத்தைத் தான் இன்றைய தினம் உங்கள் முன்னால் நான் வைக்க விரும்புகிறேன்! வீட்டுக்கு விளக்காக இருப்பேன்! நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன்! மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்! மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்!

''ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு" என்று உழைப்பின் சிகரமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். இதைவிட பெரிய பட்டம் எனக்கு இருக்க முடியாது.

'ஓயாமல் உழைத்தவன் இங்கே உறங்குகிறான்' என்று தனது கல்லறையில் எழுதச் சொன்ன காவியத் தலைவர்தான் கலைஞர்.

அரை நூற்றாண்டு காலம் இந்த சமுதாயத்துக்காக உழைத்தவன் நான். உழைக்க காத்திருப்பவன் நான். எனது உழைப்பின் மூலமாக இந்த இனம், நாடு, நாட்டு மக்கள், இளைஞர்கள், பெண்கள், அனைத்து சமூக மக்களும் பயனடைய எந்நாளும் உழைப்பேன் என்ற உறுதிமொழியை உங்களுக்கு நான் வழங்கி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.

banner

Related Stories

Related Stories