மு.க.ஸ்டாலின்

“கொள்கைவாதிகள் ஆண்ட தமிழ்நாட்டை கொள்ளைவாதிகள் ஆள்வதா?” - சோளிங்கரில் முழங்கிய மு.க.ஸ்டாலின்!

“கழகம் உருவாக்கிய தமிழகத்தை உருக்குலைக்க நாம் விட மாட்டோம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் தரும் அரசை திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கும்” என மு.க.ஸ்டாலின் உறுதி!

“கொள்கைவாதிகள் ஆண்ட தமிழ்நாட்டை கொள்ளைவாதிகள் ஆள்வதா?” - சோளிங்கரில் முழங்கிய மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“'உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்று இருந்த தமிழ்நாட்டை, 'காலில் விழுந்தே கிடப்போம்' என்ற தமிழ்நாடாக மாற்றி, கொள்கைவாதிகள் ஆண்ட தமிழ்நாட்டை கொள்ளைவாதிகள் ஆளும் தமிழ்நாடு என்று பெயர் வாங்கிக் கொடுத்துவிட்ட அ.தி.மு.க ஆட்சியிடம் இருந்து தமிழகத்தை மீட்போம்” என சோளிங்கர் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (30-01-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், வேலூர் கிழக்கு மாவட்டம், சோளிங்கரில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“முதலில் உங்களுக்கு எல்லாம் என்னுடைய நன்றியை வணக்கத்தை மிகுந்த மகிழ்வோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இப்போது, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் ஒரு பிரச்சார வியூகத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். நேற்றிலிருந்து தொடங்கியுள்ள இந்தப் பயணத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தப்போகிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உங்கள் அத்தனை பேரையும் மாவட்ட கழகத்தின் சார்பில் - தலைமை கழகத்தின் சார்பில் வருக… வருக… வருக… என வரவேற்க விரும்புகிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் அழைக்கிறார். ஸ்டாலின் அழைக்கிறார். அவரிடத்தில் சென்று குறைகளைச் சொல்லலாம் - மனுக்களைக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையில் தான் வந்திருக்கிறீர்கள். இவரிடம் கொடுத்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறீர்கள்.

வரும்போது வாயிலில் பதிவு செய்வதற்காக நம்முடைய தோழர்கள் நூற்றுக்கணக்கில் இருந்திருப்பார்கள். அவர்களிடத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து விட்டீர்களா? மனுக்களைக் கொடுத்து விட்டீர்களா?

அப்போது தங்களுக்கு ஒரு ரசீது கொடுத்து இருப்பார்கள். அந்த ரசீதை வாங்க முடியாத நிலையில் இருந்தால் தயவுசெய்து இந்த கூட்டம் முடிந்து செல்லும்போது வாயிலில் அந்த தோழர்கள் இடத்தில் ரசீதைப் பெற்றுச் செல்லுங்கள்.

அதுதான் முக்கியம். ஏனென்றால் அது இருந்தால் உரிமையோடு நீங்கள் என்னைக் கேள்வி கேட்க முடியும்.

நம்முடைய காந்தி அவர்கள் 4 ஆயிரம் பேரைக் கூட்டி வைத்திருப்பார்கள் என்று நினைத்தேன். அவர் எப்போதும் இரு மடங்காகத்தான் செய்வார். காந்தி என்றால் சும்மாவா… அதனை இங்கு நிரூபிக்கும் வகையில் 10 ஆயிரம் பேரைக் கூட்டி இருக்கிறார்கள்.

இது ஏதோ மாநாடு போன்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவருக்கும் அவருக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பொழுது இந்தப் பெட்டியில் உங்கள் மனுக்கள் எல்லாம் இருக்கின்றன. இதில் இதிலிருந்து ஒரு 10 மனுக்களை எடுத்து, அந்த மனுக்களில் இருக்கும் 10 பேரை பேச வைக்கப் போகிறேன். அவர்கள் சுருக்கமாக பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிலளித்துப் பேசியதாவது:

“விவசாயிகளுடைய நீர்ப்பாசன தேவைகளையும், பொது மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த, நாம் ஆட்சியில் இருந்தபோது அண்ணன் துரைமுருகன் அவர்கள் மற்றும் இந்த மாவட்டத்தில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சராக இருந்த நம்முடைய தலைவர் கலைஞரிடம் எடுத்துச்சொன்னார்கள்.

அப்போது நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தேன். என்னிடம் அதைச் சுட்டிக்காட்டி, அதற்குப்பிறகு தலைவர் கலைஞர் அவர்கள் நிதி ஒதுக்கி, அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். அந்தத் திட்டத்திற்கு நாம்தான் அடிக்கல் நாட்டினோம்.

அதற்குப்பிறகு வந்த இந்த ஆட்சி அந்தப்பணியை முடித்திருந்தால் குடிநீர்ப் பிரச்சினை வந்திருக்காது. அதேபோல சாலைகளை சரி செய்ய இந்த அரசு முழுமையாகத் தவறிவிட்டது.

சிப்காட் நிலங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. அதில் புதிய வேலை வாய்ப்புகள் வரவில்லை. இந்த நிலங்களில் தொழில்கள் அமைப்பது அவசரத் தேவையாக கருதப்படுகிறது. வாலாஜா - சோளிங்கர் அரசு மருத்துவமனைகள் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கின்றன.

அடுத்து வாலாஜாவில் டயாலிசிஸ் மையம் இருக்கிறது. ஆனால், அது செயல்படாத நிலையில் இருக்கிறது. விவசாயக் கல்லூரிகள் வேண்டும் என்ற கோரிக்கை முழுமையாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அரக்கோணத்தில் இருக்கும் அனைத்து சாலைகளும் கடுமையாக சேதம் அடைந்து இருக்கின்றன.

இந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு இணையாக கொள்ளையடிக்கும் ஒருவர் இருக்கிறார், அவர் தான் ரவி என்பவர். அவர் அடித்துக்கொண்டிருக்கும் கொள்ளைகள் எல்லாம் உங்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை. இதற்கெல்லாம் நிச்சயமாக நம்முடைய ஆட்சி வந்தவுடன் ஆளும் கட்சியாக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும், அத்தனை பேரும் தண்டிக்கப்பட்டு சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நேற்று மாலை இதேபோல, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சிக்கு ஆரணிக்கு சென்றிருந்தேன். ஆரணியில் எழிலரசி என்ற சகோதரியை நாங்கள் பேச வைத்தோம். அப்போது அவர் சிலிண்டர் வெடித்ததில் அவரது அம்மா இறந்து விட்டார் என்று சொன்னார். அவர்களுக்கு நிதி உதவியாக 2 லட்சம் கொடுக்கப்படும் என்று அரசு சார்பாக அறிவித்து விட்டார்கள். ஆனால் இதுவரையில் வந்து சேரவில்லை என்றும், பலமுறை மனு அளித்தும் பயனில்லை என்றும் அந்தச் சகோதரி உருக்கத்துடன் சொன்னார்.

நான் உடனே அவரிடம், ‘கவலைப்படாதீர்கள் - ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் குறைகள் தீர்க்கப்படும் என்பது நாம் வகுத்திருக்கும் திட்டம். ஆனால் உங்கள் பிரச்சினை அதில் அடங்காது, உடனடியாக உங்கள் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்’ என்று சொன்னேன்.

இது இராணுவம் சம்பந்தப்பட்ட கோரிக்கை என்பதால், அந்த நிகழ்ச்சி முடிந்ததும், காரில் சென்று கொண்டிருக்கும் போதே நான் டெல்லியில் இருக்கும் டி.ஆர்.பாலு அவர்களை தொடர்பு கொண்டேன். அவர் நேற்று இரவே இதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். அதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன.

இந்தச் செய்திகள் இங்குள்ள அரசுக்குத் தெரிந்துவிட்டது. நாம் நடத்துகிற நிகழ்ச்சியை நம்மை விட அ.தி.மு.க.வினர்தான் அதிகமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அமைச்சர்கள் குறித்து விமர்சனம் செய்வதால் அந்த அமைச்சர்கள் தான் அதிகமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதைப் பார்த்துவிட்டு இரவில் அந்தப் பெண்ணை அழைத்துக் கூடக் கொடுக்கவில்லை - அவரது வங்கிக் கணக்கில் 2 லட்சம் ரூபாயைச் செலுத்தி விட்டார்கள்.

“உங்கள் தொகுதி ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சிக்கு இதை விடப் பெரும் வெற்றி வேறு ஏதும் தேவையில்லை. இதுவே பெரும் வெற்றியாக அமைந்திருக்கிறது.

எனவே, நீங்கள் கவலைப்படவேண்டாம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இவ்வளவு பணிகளைச் செய்கிறோம். ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

அந்த நம்பிக்கையோடு நீங்கள் மனுக்களைக் கொடுத்து இருக்கிறீர்கள். அந்த மனுக்கள் இந்தப் பெட்டியில் போடப்பட்டுள்ளது. இப்போது நான் பெட்டியை மூடி, பூட்டு போட்டு, அதற்குப் பிறகு சீல் வைத்து அதை என்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துச் செல்வேன்.

இதன் சாவி என்னிடம் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் அன்போடு, ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, ஆட்சிக்கு வந்ததற்குப்பிறகு 100 நாட்களில் இதில் இருக்கும் மனுக்களில் உள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு கழகத் தலைவர் பொதுமக்களின் குறைகளுக்கு பதிலளித்து உரையாற்றினார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தனிமனித இயக்கம் அல்ல; தனிமனிதர்களுக்கான இயக்கமும் அல்ல; திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழர்களின் இயக்கம்! தமிழர்களுக்கான இயக்கம்! தமிழினத்தின் மேன்மைக்கான இயக்கம்! தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான இயக்கம்!

தமிழர்களை மானமும் அறிவும் உள்ளவர்களாக ஆக்க நினைத்தார் தந்தை பெரியார். மொழிப் பற்றும் இன உணர்வும் உள்ளவர்களாக வளர்க்க நினைத்தார் பேரறிஞர் அண்ணா. இந்தியாவிலேயே வளர்ச்சி பெற்ற மாநிலமாக, தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாக்கப் பாடுபட்டார் முத்தமிழறிஞர் கலைஞர்.

அப்படி இருந்த தமிழ்நாட்டை மீண்டும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக, அனைத்து துறையிலும் முன்னேறிய மாநிலமாக ஆக்கும் ஒரே நோக்கத்துடன் நான் செயல்பட்டு வருகிறேன்.

கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை நீட் தேர்வு தற்கொலை தமிழ்நாடாக அ.தி.மு.க. அரசு மாற்றிவிட்டது. தொழில் துறையில் முன்னேறிய தமிழ்நாட்டை 14-ஆவது இடத்துக்கு கொண்டு போய் நிறுத்திவிட்டார்கள். நிம்மதியாக வாழ்ந்த தமிழ்நாட்டு விவசாயிகளை நிலத்தை விட்டு விரட்டும் காரியங்களுக்கு துணை போகிறார்கள். இலட்சக்கணக்கான இளைய சக்திகளை உருவாக்கிய தமிழ்நாட்டை, வேலையில்லாதவர் அதிகம் வாழும் மாநிலமாக மாற்றிவிட்டார்கள். ஏழைகளாக இருந்தாலும் கொஞ்சம் நிம்மதியான வாழ்க்கை இருந்தது. அவர்களது நிம்மதியையும் குலைத்துவிட்டார்கள்.

'உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்று இருந்த தமிழ்நாட்டை 'காலில் விழுந்தே கிடப்போம்' என்ற தமிழ்நாடாக மாற்றிவிட்டார்கள். கொள்கைவாதிகள் ஆண்ட தமிழ்நாட்டை கொள்ளைவாதிகள் ஆளும் தமிழ்நாடு என்று பெயர் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.

இவற்றைக் காணச் சகிக்காமல் தான் தமிழகம் மீட்க நாம் கிளம்பி இருக்கிறோம். இதனை நாம் அனுமதிக்க முடியாது. இந்த தமிழகம் என்பது கழகம் உருவாக்கிய தமிழகம். கழகம் உருவாக்கிய தமிழகத்தை உருக்குலைக்க நாம் விட மாட்டோம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் தரும் அரசை திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கும்.

கல்வியில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திராவிட இயக்கம். ஒரு மனிதன் படித்துவிட்டால் போதும், அவனது பாதி பிரச்சினையை அவனது கல்வியே தீர்த்து வைத்துவிடும். பார்க்கும் இடமெல்லாம் பள்ளிகள், காணும் இடமெல்லாம் கல்லூரிகளை உருவாக்கினோம்.

சென்னை மாநகராட்சியின் மேயராக நான் இருந்தபோதும் கல்விக்குத் தான் முக்கியத்துவம் தந்தேன். மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சி பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளை மாற்றினேன். தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்க சிரமம் என்பதை போலவே மாநகராட்சி பள்ளிகளில் இடம் கிடைப்பதும் சிரமம் என்ற சூழலை உருவாக்கினேன். அந்தளவுக்கு மாநகராட்சி பள்ளிகளிலும் பெற்றோர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கும் நிலைமையை உருவாக்கினோம்.

அதேபோல் பெண்கள் தங்களது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கினோம். தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கினோம். இதில் 20 லட்சம் பெண்களை இணைத்தேன். இதன் மூலமாக சுமார் 4 ஆயிரம் கோடி சுழல் நிதியை என் கரங்களால் அப்பெண்களுக்கு வழங்கினேன்!

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 2,568 கோடி வங்கி சேமிப்பு உருவாக வித்திட்டேன்.அதன் மூலம் சுமார் 7,000 கோடி வரை சுய உதவிக்குழுக்களுக்கு கடன் கிடைக்க காரணமாக அமைந்தேன். இதனால் பெண்கள் தன்னம்பிக்கை பெற்றார்கள். தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானித்தார்கள்.

அதேபோல் இளைஞர்களுக்கான ஏராளமான வேலை வாய்ப்புகளை கழக அரசு தான் உருவாக்கியது. சென்னையில் இருந்து காஞ்சிபுரம்- சென்னையில் இருந்து திருவள்ளூர்- என தி.மு.க ஆட்சியில் உருவான நிறுவனங்களின் மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றார்கள்.

வேலைகள் என்பது தானாக உருவாகாது. அதனை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கும் அரசாக அமைந்தது தான் கழக அரசு. மாணவ மாணவியர் - இளைஞர்கள் - பெண்கள் ஆகியோர் நலன் சார்ந்த அரசாக, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் அரசாக கழக அரசு அமையும். அவர்களது கவலைகள் தீர்க்கும் அரசாக மட்டுமல்ல, அவர்களது கனவுகளை நிறைவேற்றும் அரசாகவும் அமையும்.

மக்கள் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க தி.மு.க.வால் தான் முடியும் என்ற நம்பிக்கையோடு கோரிக்கை மனுக்களை மக்கள் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் மக்களின் அரசாக - மக்கள் நல அரசாக - மக்கள் விரும்பும் அரசாக - மக்கள் கவலைகளைப் போக்கும் அரசாக - திராவிட முன்னேற்றக் கழக அரசு நிச்சயம் அமையும்.

இந்த அரங்கத்திற்குள் நீங்கள் வரும்போது கொண்டு வந்த ஃபாரங்களை இங்கே கொடுத்திருக்கிறீர்கள். இதை ஃபாரங்களாக நான் பார்க்கவில்லை. என் முதுகில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பாரமாகத்தான் நான் கருதுகிறேன்.

அந்த பாரத்தை என்னை நம்பி ஏற்றி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் நம்பிக்கையோடு செல்லுங்கள்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் இந்தக் கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். தி.மு.க. ஆட்சிதான் அமையும்... உங்கள் கவலைகள் யாவும் தீரும் என்ற வாக்குறுதியை மீண்டும் உங்களுக்கு வழங்கி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories