தமிழ்நாடு

“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு?; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை!

மருத்துவர் உமாசங்கர் விபத்தில் மரணமடைந்தது குறித்து உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்திட வேண்டும் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.

“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு?; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருச்செந்தூரைச் சேர்ந்த மருத்துவர் உமா சங்கர், சென்னையில் மருத்துவமனை நடத்தி வந்தார். கோவையிலும் மருத்துவமனையைத் துவங்கிய உமாசங்கர் மருத்துவமனை கட்டிட வாடகை விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைதாகி, பிணையில் வெளிவந்து, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில், கோவை துடியலூர் கண்ணப்பன் நகரில் நேற்று முன்தினம் மதியம் நடந்து சென்ற உமாசங்கர் மீது கார் மோதியதில், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக உமாசங்கர் கொல்லப்பட்டதாக, அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் துடியலூர் போலிஸில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், கோவை மருத்துவர் உமாசங்கர் விபத்தில் மரணமடைந்தது குறித்து உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்திட வேண்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,எம்.பி, கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கோவை காந்திபுரத்தில் உள்ள ‘சென்னை மருத்துவமனை’யின் நிர்வாக இயக்குநர் உமாசங்கர், கூலிப்படையினரால் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த 23ஆம் தேதி மதியம் கோவை துடியலூர் கண்ணப்பநகர் பகுதியில் நடந்து சென்றபோது கார் மோதியது. அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்கள் ஏனோ அன்றைய தினம் வேலை செய்யவில்லை. ஆகவே டாக்டர் உமாசங்கர் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” என்று நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் சார்பில் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் கோவையில் நடந்தது விபத்துதானா என்ற பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்த மருத்துவமனை விவகாரத்தில் “வாடகை பாக்கிக்காக” கொடுத்த புகாரில் டாக்டர் உமாசங்கரை மின்னல் வேகத்தில் கைது செய்ய உத்தரவிட்டவர்கள் யார்? ஜாமினில் வெளிவந்து போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்த அவர் எப்படி விபத்து நேர்ந்த அந்த இடத்திலேயே உயிரிழந்தார் - அதில் உள்ள மர்மம் என்ன? இந்த ஒட்டுமொத்த மருத்துவமனை விவகாரத்திலும்- அ.தி.மு.க முக்கிய அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருக்கிறது என்று வரும் செய்திகளையும் புறக்கணித்துவிட முடியாது. இந்நிலையில், மருத்துவர் உமாசங்கர் விபத்தில் மரணம் அடைந்தது குறித்த வழக்கினை கோவை மாநகர போலீஸ் விசாரிப்பது உண்மையை வெளிக்கொண்டு வர உதவி செய்யாது. ஆகவே, மருத்துவர் உமாசங்கருக்கு ஏற்பட்ட விபத்தை உடனடியாக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி - நியாயமான விசாரணை நடத்திட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமியை கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories