மு.க.ஸ்டாலின்

“உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு; குறைகளைச் சொல்லுங்கள்.. நிறைவேற்றி வைக்கிறேன்” - மு.க.ஸ்டாலின் உறுதி!

10 ஆண்டுகளாக அ.தி.மு.க அரசு செய்யத் தவறிய கடமையை, தி.மு.க அரசு நிச்சயம் செய்து கொடுக்கும்! இதை நிறைவேற்றி முடிக்கும்போது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி குடும்பங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கும்.

“உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு; குறைகளைச் சொல்லுங்கள்.. நிறைவேற்றி வைக்கிறேன்” - மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘ஏற்கனவே பல்வேறு குறைதீர்க்கும் நடைமுறைகள் இருந்தாலும், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சாரப் பயணத்தின் மூலம் உறுதியளிக்கப்பட்டுப் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கென்று, மக்கள் கேள்வி கேட்பதற்கான உரிமையை அளிக்கும் உத்தரவாதமான தனி அமைப்பு உருவாக்கப்பட்டு குறைகள் தீர்த்துவைக்கப்படும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மக்களை நேரில் சென்று சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' சுற்றுப் பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

தொடர்ந்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

தி.மு.க தலைவர்: கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் எல்லா துறைகளிலும் எல்லா வகையிலும் அதல பாதாளத்திற்கு போய்விட்டது.

அ.தி.மு.க. அரசின் சாதனைகள் என்று சொல்ல வேண்டும் என்றால்

தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடி!

எல்லா துறையிலும் பல்லாயிரம் கோடி கொள்ளை!

தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்தது!

பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியது!

வேலைவாய்ப்பை உருவாக்காமல் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்கியது!

விஷம் போல் விலைவாசி உயர்வு!

சட்டம் ஒழுங்கு சீரழிவு!

விவசாயிகளை வஞ்சித்தது!

சமூகநீதியை உருக்குலைத்தது!

இப்படி நம்பி வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்த அரசு தான் அ.தி.மு.க அரசு.

இந்த ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதியாக இல்லை.

ஏற்கனவே இருந்த வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை விட, இருந்த நிம்மதியும் போய்விட்டது.

விவசாயிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை, தொழிலாளர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை - எல்லோருடைய நிம்மதியும் நிர்க்கதியாகப் போய் விட்டது.

எந்தத் தொகுதியிலும் புதிய திட்டங்கள் இல்லை. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தொகுதிகளில் கூட எதுவும் நடக்கவில்லை. அடிப்படை பிரச்சினைகள் கூட எங்கும் செய்து தரப்படவில்லை. அதுவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களை முழுமையாக இந்த அரசு கைவிட்டு விட்டது.

மக்களுக்குத் தேவைப்படும்போது கொடுக்காமல், தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் தேர்தலை மனதில் வைத்துக் கொடுத்தார்கள்.

தமிழக மக்களை அரசு கைவிட்டது. தி.மு.க கைவிடவில்லை. "ஒன்றிணைவோம் வா" – திட்டத்தை அடுத்து "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற பிரச்சாரத்தைக் கழக மூத்த நிர்வாகிகள் 20 பேர் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

அடுத்து, டிசம்பர் 20ம் தேதி பொதுச் செயலாளர் அறிவித்த "மக்கள் கிராம சபை" கூட்டம், கிராமம் முதல் நகரம் வரை நடந்தது.

21 ஆயிரம் கிராம/வார்டுகளில் மக்களைச் சந்தித்து சுமார் ஒன்றேகால் கோடி மக்கள், "அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்"- என்று சூளுரை எடுத்துள்ளார்கள். அ.தி.மு.க மீதான கோபத்தையும், தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தையும் நாம் பார்த்தோம்.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையையும், தொலைநோக்கு திட்டங்களையும் சொல்வது தி.மு.க-வின் வழக்கம்.

இந்த முறை அதனை விட முக்கியமான ஒன்று தமிழ்நாட்டு மக்களுக்கு தேவைப்படுகிறது. ஊடகங்கள் மூலமாக அதனை நான் அறிவிக்கிறேன்!

“மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே என்னுடைய முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு”இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் உறுதிமொழி! மீண்டும் சொல்கிறேன்!

“மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு” நாட்டு மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கான - மக்களை நோக்கிய எனது பயணத்தை சனவரி 29ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து தொடங்குகிறேன். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்பது இந்தப் பயணத்துக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர். அடுத்த 30 நாட்களில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் கூட்டங்களில் நான் பங்கேற்கிறேன்.

நான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் அந்தத் தொகுதியைச் சேர்ந்த, கிராமம் அல்லது வார்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு என்னிடம் தங்களது கோரிக்கை மனுக்களைத் தரலாம்! அந்தந்த இடங்களில் ஒவ்வொருவரின் குறைகள் அடங்கிய முழு தகவல்களையும் குறிப்பிட்ட தனித்தனி பதிவு எண் கொண்ட படிவத்தில் எழுதப்பட்டு, அவர்களுக்கு அதற்கான ஒப்புகைச் சீட்டும் கையில் வழங்கப்படும். நானே அனைத்து மனுக்களையும் சேகரித்து, மக்கள் முன்னிலையிலேயே பாதுகாப்பாக அதற்குச் சீல் வைப்பேன்.

இக்கூட்டங்களில் நேரடியாகக் கலந்து கொள்ள இயலாதோர், ஸ்டாலின் அணி செயலி மூலமாகவோ; இதற்கென உருவாக்கப்பட்ட இணையதளம் (www.stalinani.com) வாயிலாகவோ; 91710 91710 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டோ தங்கள் பிரச்சினைகளைப் பதிவுசெய்யலாம். - என்ற அறிவிப்பை ஊடகங்களின் மூலமாக நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்ததும் 100நாட்களில் மக்களின் அனைத்துக் கோரிக்கை மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! இதை எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்வி உங்களுக்குள் வரலாம். யாருக்கும் சந்தேகம் வேண்டாம்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள்: சொன்னதைச் செய்வோம்- செய்வதைத் தான் சொல்வோம் என்று! அவர் வழியில் நானும் சொன்னதைச் செய்வேன்! செய்வதைத் தான் சொல்வேன்!

தமிழகம் முழுவதும் மக்களிடம் வாங்கிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசில் தனித்துறை ஒன்று உருவாக்கப்படும். அந்த துறை, மாவட்ட ரீதியாக இந்த மனுக்களைப் பிரித்துப் பரிசீலித்து அதனை உடனடியாக நிறைவேற்றித் தரும் என்ற வாக்குறுதியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் வழங்குகிறேன். தொகுதிவாரியாக - ஏன் கிராம வாரியாக முகாம்கள் அமைத்து இப்பிரச்சினைகள் குறித்து நேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றித் தருவோம். அதாவது பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க அரசாங்கம் செய்யத் தவறிய கடமையை - தி.மு.க அரசாங்கம் நிச்சயம் செய்து கொடுக்கும்! இந்தக் கடமையை தி.மு.க அரசு நிறைவேற்றி முடிக்கும்போது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி குடும்பங்களின் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டு இருக்கும். ஒரு கோடி குடும்பங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கவலைகள், துன்ப துயரங்களில் இருந்து மீண்டிருப்பார்கள் என்று பேரறிஞர் அண்ணாவின் மீது ஆணையாக-தலைவர் கலைஞர்மீது ஆணையாக-தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக - நான் உறுதியேற்கிறேன்! உங்கள் குறைகளைச் சொல்லுங்கள். நான் நிறைவேற்றி வைக்கிறேன். உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு. நான் மட்டுமே பொறுப்பு. சொன்னதைச் செய்வான் இந்த ஸ்டாலின்! செய்வதைத் தான் சொல்வான் இந்த ஸ்டாலின்!

செய்தியாளர்: நீங்கள் பேசும்போது, 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் இருக்கிறது என்று சொன்னீர்கள். இந்த திட்டம் செயல்படுத்த அதிக நிதி தேவைப்படும். அதற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

தி.மு.க தலைவர்: அதற்கு தனி திட்டம் இருக்கிறது. திட்டம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டோம்.

செய்தியாளர்: இந்த கோரிக்கை மனுக்களில் இடம்பெறும் மனுக்கள் தேர்தல் அறிக்கைகளிலும் இடம்பெறுமா?

தி.மு.க தலைவர்: தேர்தல் அறிக்கை வேறு, இது வேறு. தேர்தல் அறிக்கை, டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு மாவட்ட வாரியாக சென்று கொண்டிருக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் பொது பிரச்சினைகள் அதில் இடம்பெறும். ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக இது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்: அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளா? தனிப்பட்ட பிரச்சினைகளா?

தி.மு.க தலைவர்: அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தான். உதாரணமாக கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பெரும்பாலும் குடிநீர் பிரச்சினை, பட்டா பிரச்சினை, ஓய்வூதியப் பிரச்சினை, முதியோர் உதவித்தொகை பிரச்சனை, 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் முறையாக கொடுக்கப்படவில்லை இதுபோன்ற பிரச்சினைகள் தான் பேசப்பட்டன. அதே போல தான் இதுவும்.

செய்தியாளர்: லஞ்சம் வாங்குவதை தி.மு.க ஆட்சியில் எவ்வாறு தடுக்கப் போகிறீர்கள்?

தி.மு.க தலைவர்: அதனை ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு பாருங்கள்.

செய்தியாளர்: ஏற்கனவே முதலமைச்சரின் மூலமாக ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு இதுபோல ஒரு திட்டம் செயல்பட்டுகொண்டிருக்கிறதே?

தி.மு.க தலைவர்: அந்த திட்டம் பெயரளவில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. முழு அளவில் நடைபெறவில்லை. அது முழு அளவில் நடைபெற்றிருந்தால் நாங்கள் இந்த திட்டத்தை தொடங்கியிருக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் அந்தத் திட்டத்தையும் நாங்கள் முறைப்படுத்துவோம். இந்த தனிப்பட்ட பிரச்சினைகள் 100 நாட்களில் தீர்த்து வைக்கப்படும். உதாரணமாக கட்டடங்கள் கட்ட வேண்டும், தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் இதுபோல பிரச்சினைகள் இதில் இடம்பெறாது. தனிப்பட்ட பிரச்சினைகள் மட்டும் இதில் இடம்பெறும்.

செய்தியாளர்: தேர்தல் பிரச்சாரத்தை பல்வேறு கட்சிகள் தொடங்கிவிட்டன. இந்த கூட்டம் வாக்காக மாறும் என்று நினைக்கிறீர்களா?

தி.மு.க தலைவர்: வாக்காக மாறுவதற்கு தான் இந்த கூட்டம்.

செய்தியாளர்: இந்த திட்டத்திற்காக தனித்துறை ஒன்று உருவாக்கப்படும் என்கிறீர்கள். அது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் வருமா?

தி.மு.க தலைவர்: அதனை ஆட்சி அமைந்ததற்குப் பிறகு பாருங்கள்.

செய்தியாளர்: ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வாறு மக்களை சந்திக்கப் போகிறீர்கள்?

தி.மு.க தலைவர்: முதலில் நான் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செல்கிறேன். அந்த மாவட்டத்தில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே இந்த நிகழ்ச்சி தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு குறிப்பிட்ட தேதியில் தலைவர் வருகிறார். உங்களது குறைகளை நீங்கள் சொல்லலாம் என்று விளம்பரங்கள் மூலமாக மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

அவர்கள் நேரடியாக காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் அவர்கள் குறைகளை பதிவு செய்வார்கள். அதற்கு பிறகு நான் அந்த குறைகளை வாங்கி ஒரு பெட்டியில் சீல் வைத்து, நான் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் வேலையாக நானே அதை பிரித்து அந்த பிரச்சினைகளை துறைவாரியாக அனுப்பி வைப்பேன். அவர்கள் மூலமாக இந்த பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.

செய்தியாளர்: எத்தனை நாட்கள் இந்த பிரச்சாரம்?

தி.மு.க தலைவர்: 30 நாட்களுக்கு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. காலையும் மாலையும் தொடர்ந்து நடத்தப்படும். 30 நாட்களில் முடிப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. நிச்சயமாக முடித்து விடுவோம்.

செய்தியாளர்: நமக்கு நாமே போல, இந்தப் பிரச்சாரம் பொதுக்கூட்டம் போன்றதா?

தி.மு.க தலைவர்: நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக நான் செல்லும்பொழுது நெசவாளர்கள், விவசாயிகள்,வியாபாரிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மகளிர் என்று தனித்தனியாக சந்தித்தோம். விடியலை நோக்கிய ஸ்டாலின் பயணத்திலும் கழக முண்ணனியினர் 20 பேர் அதேபோல சென்று கொண்டிருக்கிறார்கள். அதேபோல கிராமசபைக் கூட்டங்களில் அதிகளவில் பெண்களை சந்தித்தோம். அதே போல தான் இதுவும். 100 நாட்களில் அவர்களது பிரச்சினைகள் தீர்த்து வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்: இதுபோன்று ஏற்கனவே ஆட்சியர் அலுவலகத்தில் 2 நாட்கள் மக்கள் குறைதீர்க்கும் திட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் செல் உள்ளது. அதில் இல்லாமல் இந்த திட்டத்தில் என்ன புதுமை உள்ளது?

தி.மு.க தலைவர்: மக்களுக்கு செய்து கொடுக்கிறோம் என்று உறுதி கூறி மனு பெறப்பட்டு, ரசீது கொடுக்கப்படுகிறது. அவர்கள் ஆதாரத்தோடு வந்து என்னிடம் கேள்வி கேட்கலாம். கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. 100 நாட்களில் பட்டா பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, பள்ளிக்கூடப் பிரச்சினை, ஆசிரியர் பிரச்சினை, ஓய்வூதிய பிரச்சினை, முதியோர் உதவித்தொகை பிரச்சினை, நூறு நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் முறையாக கொடுக்கப்படவில்லை என்பது போன்ற சிறு சிறு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.

செய்தியாளர்: கூட்டணி பேச்சுவார்த்தைகள் எப்போது தொடங்கும்?

தி.மு.க தலைவர்: கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் முறையாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.

banner

Related Stories

Related Stories