தமிழ்நாடு

“திருவள்ளுவர் மண்ணுக்கு வந்துள்ளதில் பெருமை கொள்கிறேன்” : ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பேச்சு!

“நாட்டிலேயே ஒரு மொழியின் பெயரை கொண்டுள்ள மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான்” என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

“திருவள்ளுவர் மண்ணுக்கு வந்துள்ளதில் பெருமை கொள்கிறேன்” : ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி (ஏ.பி.சாஹி) டிசம்பர் 31ம் தேதி ஓய்வுபெற்றார். இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.

அதன்படி தமிழக ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று தலைமை நீதிபதியாக பதவியேற்பதன் மூலம் 1862ல் நிறுவப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திரத்திற்கு பிறகான 31வது தலைமை நீதிபதியாகவும் சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றுள்ளார்.

“திருவள்ளுவர் மண்ணுக்கு வந்துள்ளதில் பெருமை கொள்கிறேன்” : ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பேச்சு!

கொரோனா தடுப்பு விதிகள் காரணமாக தனிமனித இடைவெளியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பதவியேற்பு விழாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள், சபாநாயகர் தனபால், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டி.ஜி.பி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் ஆளுனருமான சதாசிவம், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் என பலரும் கலந்து கொண்டுண்டனர். இதனையடுத்து தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது.

அந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஏற்புரை ஆற்றிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, திருவள்ளுவர் மண்ணுக்கு வந்துள்ளது பெருமை அளிப்பதாகவும், நாட்டிலேயே ஒரு மொழியின் பெயரை கொண்டுள்ள மாநிலம் என்றால் அது தமிழ்நாடு என்றும் தொன்மையான மொழியாம் தமிழை இன்னும் கோடிக்கணக்கான பேர் பெருமையோடு பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

“திருவள்ளுவர் மண்ணுக்கு வந்துள்ளதில் பெருமை கொள்கிறேன்” : ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பேச்சு!

மேலும், பாரம்பரியமிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இருந்து இன்னொரு பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளது தனக்கு பெருமை அளிப்பதாகவும், வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பின்றி நீதி பரிபாலனம் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார் .

அதுமட்டுமின்றி, இசை, பாரம்பரியம், நடனம், இலக்கியம், கலாச்சாரம் என அனைத்திலும் தனித் தன்மையோடு சிறந்து விளங்கும் தமிழகம் என்னுடைய மாநிலம் எனவும், இந்த மாநிலத்தில் நான் ஒரு சேவகன் எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories