தமிழ்நாடு

“அமைச்சர் MR.விஜயபாஸ்கர் மீது பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் உள்ளது” : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

“வாகனங்களுக்கு எஃப்.சி தரச்சான்று வழங்குவதில், வேகக் கட்டுப்பாட்டுக் கருவியில், ஒளிரும் பட்டை பொருத்துவதில் ரூ.2300 கோடி ஊழல் நடந்திருக்கிறது” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அமைச்சர் MR.விஜயபாஸ்கர் மீது பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் உள்ளது” : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

“ஆளுநரிடம் கொடுக்க இருக்கும் இரண்டாம் கட்ட ஊழல் புகாரில் குட்கா விஜயபாஸ்கரைப் போல, எப்.சி.விஜயபாஸ்கர் என அழைக்கப்படும் அளவுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சரின் முறைகேடுகள் அம்பலமாகும்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று (03-01-2021) மாலை, கரூர் மாவட்டம் – கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர் ஒன்றியத்துக்குட்பட்ட வ.குப்புச்சிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற “மக்கள் கிராமசபைக் கூட்டத்தில்” பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் துவக்கி வைத்து கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“நான் இதுவரைக்கும் ஒரு 5 மக்கள் கிராம சபை கூட்டத்தை நான் நடத்தி இருக்கிறேன். காஞ்சிபுரம் மாவட்டத்திற்குச் சென்றேன். விழுப்புரம் மாவட்டத்திற்குச் சென்றேன். வேலூர் மாவட்டத்திற்குச் சென்றேன். நேற்று காலையில் கோவை மாவட்டத்திற்குச் சென்றேன். நேற்று மாலை மற்றும் இன்று காலையில் ஈரோடு மாவட்டத்துக்குச் சென்றேன்.

அங்கு எல்லாம் இது போலத்தான் மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நாங்கள் நடத்தினோம். இப்பொழுது கரூருக்கு வந்திருக்கிறேன். குப்பிச்சிபாளையம் ஊராட்சிக்கு வந்திருக்கிறேன்.

இன்று காலை வரை, நான் பல்வேறு மாவட்டத்திற்குச் சென்றிருந்தாலும், இந்தக் கரூர் மாவட்டத்திற்கு வந்திருக்கும் போது, எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இதுவரைக்கும் நான் பார்த்திருக்கக் கூடிய கிராமசபைக் கூட்டத்தை எல்லாம் விஞ்சக் கூடிய அளவிற்கு இப்பொழுது நடந்து கொண்டிருக்கக் கூடிய, இந்த மக்கள் கிராமசபைக் கூட்டம் மிக எழுச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.

“அமைச்சர் MR.விஜயபாஸ்கர் மீது பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் உள்ளது” : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

இதனை மிகச் சிறப்பான வகையில் நம்முடைய மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் கட்சியில் வந்து சேர்ந்த பொழுது எந்த உணர்வோடு சேர்ந்தாரோ? நான் எந்த உணர்வோடு அவரை இந்தக் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேனோ, அதைவிடப் பல மடங்கு அவர் இப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

செந்தில் பாலாஜி பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், “கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை“ என்று சொல்வார்கள். அதைப்போல, அவரைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிற உங்களிடத்தில், அவரைப்பற்றி அறிந்து வைத்திருக்கக்கூடிய உங்களிடத்தில் அவரைப் பற்றி அதிகம் பேச வேண்டிய அவசியம் இல்லை.

நான் இப்பொழுது இங்கு வருகிற வழியில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் தங்கியிருந்த இடத்திலிருந்து இங்கு பதினைந்து நிமிடங்களில் வந்து விடலாம். ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகியிருக்கிறது. அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக அந்த வரவேற்பு நிகழ்ச்சி இருந்தது.

இந்தப் பெரும் கூட்டத்தை கிராமசபைக் கூட்டம் என்று மட்டும் சொல்ல முடியாது. மக்கள் கிராமசபைக் கூட்டம் என்று கூறி, சுற்றிக் கொண்டே இருந்தால் பெண்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

இது மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் நடத்தினாலும் ஒட்டுமொத்த தாய்மார்கள், பொதுமக்கள், ஆண்கள் அத்தனை பேரும் இங்கு வந்திருக்கிறீர்கள்.

மகளிர் கூட்டம் போல, மகளிர் அணி மாநாடு போல இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. வியப்பாக இருக்கிறது.

எனக்கு இப்பொழுது என்ன தோன்றுகிறது என்றால் - வெளிப்படையாக உங்களிடத்தில் சொல்லுகிறேன் - இப்படியே பேசாமல் இங்கேயே நின்று கொண்டு, உங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஆண்கள் கொஞ்சம்தான் இருக்கிறார்கள். பெண்கள் தான் அதிகமான அளவில் இருக்கிறார்கள். ஆண்கள் எல்லாம் பெண்களைச் சுற்றி அரணாக இருந்து கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு எப்பொழுதும் ஆண்கள்தான் என்பதற்கு இது ஒரு சான்று.

அதேபோல, ஆண்களை ஊக்கப்படுத்துவது பெண்கள் தான். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் தான் நிச்சயமாக இருப்பார். அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

“அமைச்சர் MR.விஜயபாஸ்கர் மீது பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் உள்ளது” : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

ஒரு பீர்பால் கதை சொல்கிறேன். அக்பர் அமைச்சரவையில் பல அமைச்சர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் பீர்பால். மன்னர் அக்பர் என்ன சொன்னாலும் அதனை நிறைவேற்றி விடுவார். பீர்பாலுக்கு அக்பர் ஒரு சோதனை வைக்கிறார். உன்னால் முடியாத ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லப்போகிறேன் என்று கூறி, காளை மாடு ஈன்ற கன்றுக் குட்டியைக் கொண்டு வந்து கொடுக்குமாறு பீர்பாலிடம் சொல்கிறார் அக்பர். அதற்கு மூன்று நாட்கள் அவகாசம் கேட்கிறார் பீர்பால். மூன்றாவது நாள் விடியப் போகிறது. அதற்கு முந்தைய நடு இரவில், அக்பர் கூறியதை நிறைவேற்ற முடியாதே என்ற சிந்தனையில் பீர்பால் தூக்கமின்றித் தவித்தார். மனைவி என்னவென்று கேட்டார்.

பீர்பால் விவரத்தைச் சொன்னார். கவலைப் படாமல் தூங்குங்கள் என்று பீர்பாலைத் தூங்க வைத்தார் அவரது மனைவி. பின்னர் அழுக்குத் துணிகளை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்து அவற்றை அடித்துத் துவைக்கிறார் பீர்பால் மனைவி. நள்ளிரவில் துணி துவைக்கும் சப்தம் கேட்டு அக்பர் அந்தப் பெண்ணை அழைத்துவரச் சொல்கிறார். ‘ஏன் நள்ளிரவில் துணி துவைக்கிறாய்’ என்று அக்பர் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்கிறார். அதற்கு அவள், ‘எனது கணவர் கர்ப்பமாக இருப்பதால், அவருக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்து விட்டு, இப்போதுதான் துணி துவைக்க நேரம் கிடைத்தது’ என்று கூறுகிறாள். ‘அது எப்படி ஆண் கர்ப்பமாக இருப்பான்?’ என்று கேட்டார் அக்பர். ‘காளை மாட்டில் இருந்து கன்றைக் கொண்டு வருமாறு நீங்கள் சொல்லவில்லையா?’ என்று அந்தப் பெண் அக்பரிடம் திரும்பக் கேட்கிறாள்.

அதில் இருந்து அந்தப் பெண் பீர்பால் மனைவி என்பதை அறிந்தார் அக்பர். அப்போதுதான் இத்தனை நாளும் தான் சொன்னதையெல்லாம் பீர்பால் நிறைவேற்றுவதற்கு அவரது மனைவியே காரணம் என்பது அக்பருக்குப் புரிந்தது. அதுபோல் பெண்கள் ஒத்துழைத்தால்தான் ஆண்கள் எதையுமே சாதிக்க முடியும்.

பீர்பாலின் கதையில் பீர்பாலுக்கு அவரது மனைவி எவ்வாறு துணையாக இருந்தாரோ, அது போல ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் நிச்சயமாக இருப்பார். எனவே நீங்கள் நினைத்தால் வெற்றி நிச்சயம்.

பெண்கள், தாய்மார்கள், சகோதரிகள், அருமையாக உட்கார்ந்து இருக்கிறார்கள். இந்தக் காட்சிகளைப் பார்க்கிற பொழுது, இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டுமா? இப்பவே வந்து விடக் கூடாதா? என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

கொஞ்சம் பொறுங்கள். “பொறுத்தது போதும் பொங்கி எழு“ என்று சொல்லுவார்கள். இவ்வளவு நாட்கள் பொறுத்துக் கொண்டீர்கள். “பொருமை கடலினும் பெரிது” என்று சொல்வார்கள். ஆதலால் இன்னும் 4 மாதங்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள். அதிமுக ஆட்சிக்கு வந்து, இன்னும் நான்கு மாதங்களில் ஐந்து ஆண்டுகள் முடியப் போகின்றன.

எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்றைக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரைக்கும், அவர் நேரடியாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர் எப்படி முதலமைச்சர் ஆனார் என்று உங்களுக்கே தெரியும். ஜெயலலிதா முதலமைச்சராக வரவேண்டும் என்று சொல்லித்தான் தமிழக மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். நமக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. 1.1% வித்தியாசத்தில் தான் தி.மு.க.வாகிய நாம் தோல்வியடைந்தோம்.

அந்த ஜெயலலிதா முதலமைச்சராக உட்கார்ந்தார். அவர்கள் கொஞ்ச நாள் தான் முதலமைச்சராக இருந்தார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறைந்துவிட்டார். அது வருத்தப்படக் கூடிய செய்தி தான். அரசியல் ரீதியாக, அவரும் நாமும் எதிரிதான். அவர் எதிரியாக இருந்தாலும், மறைந்தது ஒரு தலைவர். ஒரு முதலமைச்சர். எந்தத் தலைவர் இறந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும், நாம் மதிக்க வேண்டும். அதுதான் நம் பண்பாடு.

“அமைச்சர் MR.விஜயபாஸ்கர் மீது பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் உள்ளது” : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

அந்த அம்மா மறைந்த பொழுது, தலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் இருந்தார். அவரும் உடல் நலிவுற்ற நிலையில் தான் இருந்தார். அப்பொழுது அவர் அந்தச் செய்தியை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே என் சார்பில், திமுக சார்பில் நீ உடனடியாக அம்மையார் ஜெயலலிதா உடலுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நான் சென்று மரியாதை செய்து விட்டு வந்தேன்.

இதுதான் திமுக இதுதான் நாம். கலைஞர் நமக்கு கற்றுத் தந்து இருக்கக் கூடிய பண்பாடு அதுதான்.

அவர் மறைவிற்குப் பிறகு, ஓ.பி.எஸ். முதலமைச்சராக வந்தார். மூன்று மாதங்கள் முதலமைச்சராக இருந்தார். சட்டமன்றத்தில் அவர் என்னைப் பார்த்துச் சிரித்ததால், சசிகலா அவரது பதவியைப் பறித்து விட்டார்.

அதன்பின் சசிகலா அவர்கள் தானே முதலமைச்சராக வரப்போவதாக முடிவெடுத்து அறிவித்தார். ஆனால் பதவியேற்பதற்கு ஒரு நான்கு நாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஒரு தீர்ப்பு வந்தது.

ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. ஜெயலலிதா, இளவரசி, சுதாகரன், சசிகலா ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, 4 வருட சிறைத்தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஜெயலலிதா அவர்கள் இறந்து விட்ட காரணத்தினால், அவர்கள் அந்தத் தண்டனையை அனுபவிக்க முடியாது. அது தேவையில்லை என்று விட்டுவிட்டார்கள். ஆனால் குற்றம் குற்றம் தான். மற்ற மூன்று பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த காரணத்தினால் சசிகலாவால் பதவி ஏற்க முடியவில்லை. அதனால் கூவத்தூரில் அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து, உட்காரவைத்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.

சசிகலாவின் காலில் விழுந்து தான் இப்போது இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சர் ஆனார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். சமூகவலைதளங்களில் எல்லாம் அவர் காலில் விழுந்த காட்சி பரவியது.

எடப்பாடியை முதலமைச்சராக்கிய காரணத்தால், ஓ.பி.எஸ்.க்கு கோபம் வந்துவிட்டது. அவர் நேராக ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று தியானம் செய்தார். கண்ணை மூடிக்கொண்டு 40 நிமிடம் தியானம் செய்தார். தியானம் செய்யும் போது ஜெயலிலதாவின் ஆவியோடு பேசினார்.

‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அதனை விசாரணை செய்ய வேண்டும். விசாரணை கமிஷன் அமைக்கும் வரை நான் விட மாட்டேன்’ என்று சொன்னார்.

உடனே இப்பொழுது இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் விசாரணை கமிஷனை அமைக்கிறேன் என்று சொன்னார். துணை முதலமைச்சர் பதவி தருகிறேன் என்று கூறி அவரை சமாதானம் செய்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. மூன்று வருடங்களாக அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இதுவரைக்கும் இல்லை.

தமிழ்நாட்டினுடைய முதலமைச்சரின் மரணமே மர்மமாக உள்ளது. நான்கு மாதங்களில் நாம் ஆட்சிக்கு வரப் போகிறோம். வந்தவுடன் முதலில் இதனை விசாரித்து மக்கள் முன்னால் அவர்களை நிறுத்தி, சட்டரீதியான தண்டனை வாங்கித் தருவது தான் என்னுடைய முதல் வேலையாக இருக்கும். இந்த ஸ்டாலினுடைய முதல் வேலை அதுதான்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று நாங்கள் கூறவில்லை. விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டதைத்தான் நாங்கள் கேட்கிறோம்.

“அமைச்சர் MR.விஜயபாஸ்கர் மீது பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் உள்ளது” : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நான் உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்கிறீர்கள். உங்களை அதிக நேரம் காக்க வைக்க விரும்பவில்லை. எல்லாரையும் பேச வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தாலும் 10 பேரை மட்டும் பேச வைக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். அந்தப் பத்துப் பேரும் இந்தப் பகுதியின் குறைகளைக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நிறைவு செய்து கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

நூறு நாள் வேலைத் திட்டம், மருத்துவக் கல்லூரி, சாயக்கழிவுப் பிரச்சினை, நீட் என பல பிரச்சினைகளையும் எடுத்துரைத்தீர்கள். விவசாயத்தை பற்றிப் பேசினீர்கள். விவசாயத்தைப் பற்றி பேசும் பொழுது, எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. இன்று காலையில் நிகழ்ச்சியை முடித்து விட்டு, ஒரு ஓட்டலில் தங்கியிருந்த போது, புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒரு செய்தி பார்த்தேன். மிகவும் கொடுமையான ஒரு செய்தி.

விவசாயி ஒருவர் விவசாயி தற்கொலை செய்துகொண்ட கொடுமையான செய்தி. ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆட்சியில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது டெல்லியில் நடந்துகொண்டிருக்கக்கூடிய அந்தப் போராட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தி எல்லாம் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்.

இன்றைக்கு புதிய தலைமுறையில் நான் பார்த்த செய்தியில், “மன்னித்துவிடு மித்ரா“ என்று தன்னுடைய இரண்டு வயது பேத்திக்கு நாராயணசாமி என்ற விவசாயி கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

என்ன காரணம்? தூத்துக்குடியில் இருக்கக்கூடிய பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த அந்த விவசாயி, மக்காச்சோளம் பயிர் செய்து வந்துள்ளார். கடுமையான பூச்சி விழுந்து மக்காச்சோளம் நாசமாகிவிட்டது.

அடுத்தடுத்து நஷ்டம். இழப்பீடு கொடுக்க வேண்டிய, விவசாயக் காப்பீடு திட்டமும் கை கொடுக்கவில்லை என்று மனமுடைந்து ரொம்ப வேதனைப் பட்டுள்ளார்.

பயிரையும் பார்த்துள்ளார். தன்னுடைய பாசத்திற்குரிய பேத்தியையும் பார்த்துள்ளார். எந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தாரோ, அந்த நிலத்தின் ஈர மண்ணைக் கையில் எடுத்து, “மன்னித்துவிடு மித்ரா“ என்று அந்த அந்த மண்ணாலேயே எழுதிவைத்துள்ளார்.

அதுதான் கொடுமை. அதுதான் மிகவும் வேதனைப் படக்கூடிய விஷயம். அதற்குப் பிறகு அருகில் இருந்த ஒரு மரத்தில் தூக்குப்போட்டு இறந்துவிட்டார். இது தொலைக்காட்சியில் நான் பார்த்த செய்தி.

எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய இந்த ஆட்சியில் விவசாயிகள் என்னென்ன கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட உதாரணம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. அதை எதிர்த்து நாம் போராடி கொண்டிருக்கிறோம். எல்லா மாநிலத்தின் முதலமைச்சர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு முதலமைச்சர் மட்டும் அதை ஆதரித்து கொண்டிருக்கிறார்.

கடந்த 39 நாட்களாக டெல்லியில் கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் ஒன்று திரண்டு குடும்பத்தோடு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதைப்பற்றி மோடியும் கவலைப்படவில்லை. இங்கு இருக்கக்கூடிய எடப்பாடியும் கவலைப்படவில்லை.

எடப்பாடி அவர்கள் எப்பொழுதும் தன்னை ஒரு விவசாயி விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த எடப்பாடி பழனிசாமி தயவு செய்து அந்த புதிய தலைமுறை தொலைக்காட்சிச் செய்தியை பார்க்க வேண்டும்.

இது போன்ற கொடுமை தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. இதற்குத்தான் மாற்றம் தேவை என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அது மட்டுமில்லை இங்கு பேசுகிறபோது லாரி எஃப்.சி. பிரச்சினை பற்றிச் சொன்னீர்கள். அந்தத் துறைக்கு அமைச்சர் யார்? என்பது உங்களுக்குத் தெரியும். இங்கு இருக்கக் கூடிய விஜயபாஸ்கர்.

அவர்தான் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். இரண்டு விஜயபாஸ்கர் உள்ளார்கள். ஒன்று குட்கா விஜயபாஸ்கர். மற்றொருவர் எஃப்.சி. விஜயபாஸ்கர், லாரி ஓட்டுநர்களுக்கு, லாரி உரிமையாளர்களுக்கு, கொடுமை செய்வது மட்டுமில்லாமல், அதிலும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்க கூடிய ஒரு அக்கிரமம் நடந்து கொண்டிருக்கிறது.

“அமைச்சர் MR.விஜயபாஸ்கர் மீது பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் உள்ளது” : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நாங்கள் ஏற்கனவே ஆளுநரிடத்தில், எடப்பாடியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, குட்கா விஜயபாஸ்கர் இவர்கள் மீது எல்லாம் புகார் கொடுத்து விட்டோம்.

புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்து நான் என்ன சொன்னேன்? என்றால் பகுதி-1 கொடுக்கப்பட்டுள்ளது. பகுதி-2 விரைவில் கொடுக்கப்படும் என்று சொன்னேன். இப்பொழுது பகுதி-2 தயாராகிக் கொண்டிருக்கிறது.

வாகனங்களுக்கு எஃப்.சி. தரச்சான்று வழங்குவதில், வேகக் கட்டுப்பாட்டுக் கருவியில், ஒளிரும் பட்டை பொருத்துவதில் 2300 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது.

அதேபோல ஜி.பி.எஸ். கருவி பொருத்துவதில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. ஆம்னி பஸ் பெர்மிட் வழங்குவதில் ஊழல் நடந்திருக்கிறது.

அமைச்சர் தன் குடும்பத்திற்கும், தன் உறவினர்களுக்கும் கரூர் புதிய பேருந்து நிலையம் காண்ட்ராக்ட் வழங்கி முறைகேடு செய்திருக்கிறார். அதுபோல கரூர் எல்.ஜி.பி. பெட்ரோல் பங்க், ரெயின்போ டயர்ஸ், ரெயின்போ புளூ மெட்டல்ஸ் இப்படி கரூரில் எங்கு பார்த்தாலும் ஊழல் செய்து சொத்துகளைக் குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் நிறைய விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கூடிய விரைவில் பகுதி-2ல் நிச்சயமாக இந்த ஊர் மந்திரி எஃப்.சி. விஜயபாஸ்கர் மாட்டப்போகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

அது மட்டுமில்லை, இந்த ஆட்சியில் அறிவித்த திட்டங்களைக் கூட நிறைவேற்ற முன்வரவில்லை என்று சிலர் குறிப்பிட்டுச் சொன்னீர்கள்.

என் கையில் சில ஆவணங்கள் வைத்திருக்கிறேன். இதோ சில அரசு ஆணைகளைக் கையில் எடுத்து வந்திருக்கிறேன். ஏனென்றால் நான் பொத்தாம் பொதுவாக எதையும் பேச மாட்டேன். எதையும் ஆதாரத்துடன்தான் நான் பேசுவேன். ஏன் என்றால் நான் கலைஞருடைய மகன்.

நெரூர் - உள்ளியூர் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட 19.2.2014 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இப்பொழுது 2021 ஆம் ஆண்டு ஆகிவிட்டது. ஆறு வருடங்களாக அந்த திட்டம் கிடப்பில் உள்ளது. கரூர் ரிங் ரோடு அமைக்க 18.10.2013 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. ஏழு வருடங்களாக அந்த திட்டம் முடங்கிய இருக்கிறது.

அடுத்து கோயம்பள்ளி - மேலப்பாளையம் அமராவதி ஆற்றின் குறுக்கே 2015இல் பாலம் கட்டப்பட்டது. ஐந்து வருடம் ஆகிவிட்டது. இன்றுவரை இதற்கு இணைப்புச் சாலை அமைக்கப்பட வில்லை.

திருமாநிலையூர் பகுதியில், கரூர் புதிய பேருந்து நிலையம் அமைக்க 20.06.2013 அன்று அரசாணை வெளியிட்டது. இன்னும் பேருந்து நிலையம் வரவில்லை. அதற்கான அரசாணையும் என் கையில் உள்ளது.

உயர் நீதிமன்றமே 22 மாதங்களில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிக்க வேண்டும் என்று அதிமுக ஆட்சிக்கு உத்தரவு போட்டது. அதற்குப் பிறகு 48 மாதம் ஆகிவிட்டது. அமைச்சர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

அவரைப் பொறுத்தவரை வசூல்ராஜா ராஜாவாகத்தான் வலம் வந்து இருக்கிறாரே தவிர மக்களுடைய பிரச்சினையைத் தீர்த்து வைக்கக் கூடிய நிலையில் அவர் இல்லை என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்.

எனவே, இதையெல்லாம் ஒரு உதாரணமாகத் தான் சொல்லியிருக்கிறேன். இன்னும் நான்கு மாதங்கள் தான் இருக்கிறது.

அதுவரை முடிந்தவரை கொள்ளையடித்து , சுருட்டி கொண்டு சென்று விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களே தவிர மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.

தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கே தெரிந்து விட்டது. ஏனென்றால் நேற்றைக்கு எடப்பாடி பழனிசாமி பேசியதாக ஒரு செய்தியைப் பார்த்தேன். அவர் தனது தோழர்களிடம் சொன்னாராம் - ஒழுங்கா வேலை செய்யுங்கள், இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் சிறைக்கு சென்று கழி தான் சாப்பிட வேண்டும் - என்று அவரே சொல்லியிருக்கிறார்.

எதற்கு சிறைக்கு போக வேண்டும்? தேர்தலில் தோல்வியடைந்தால் சிறைக்குச் செல்ல வேண்டுமா? நாங்கள் தோற்றோமே சிறைக்கா சென்றுவிட்டோம்? அப்படி என்றால் ஊழல் செய்வதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். கொள்ளை அடித்தவர்களே ஒத்துக்கொள்கிறார்கள்.

விரைவில் தேர்தல் வரப்போகிறது. உங்கள் அன்போடு, ஆதரவோடு நாம் கோட்டையிலே அமர்ந்து மக்களுக்காக ஆட்சி நடத்த வேண்டும். அந்த சூழலை உருவாக்க வேண்டிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

அதைத்தான் நான் உங்களை எல்லாம் மிகுந்த பணிவோடு கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏதோ கூடினோம், கலைந்தோம் என்று போய்விடக் கூடாது.

எதற்காக இந்த கிராமசபை கூட்டம்? அரசாங்கம் தான் இந்த கிராமசபைக் கூட்டத்தை நடத்த வேண்டும். ஒரு வருடத்திற்கு 4 முறை இந்த கிராம சபை கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என்ற ஒரு மரபு இருக்கிறது.

நான்கு முறை என்றால் காந்தி ஜெயந்தி அன்று, குடியரசு தினவிழா அன்று, சுதந்திர தினவிழா அன்று, தொழிலாளர் தினம் அன்று, இந்த நான்கு நாட்களும் நடத்த வேண்டும். திமுக ஆட்சியில் இருந்தபோது நடத்தினோம்.

ஆனால் இந்த அதிமுக ஆட்சி வந்ததற்குப் பிறகு, அதை முறையாக நடத்தவில்லை. ஊர் பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் பிரச்சினை என்ன? குடிநீர் பிரச்சனை, தெருவிளக்கு பிரச்சனை, 100 நாள் வேலை பிரச்சனை, சுகாதாரச் சீர்கேடு பிரச்சினை, பேருந்து வசதிப் பிரச்சினை மற்றும் பள்ளிப் பிரச்சினை இதுதான் அன்றாடம் இருக்கக் கூடிய பிரச்சினைகள்.

இந்தப் பிரச்சினைக்கு நான் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த பொழுது, “உள்ளாட்சியில் நல்லாட்சி தந்த அமைச்சர்“என்று எனக்கொரு பட்டம் கொடுத்தார்கள்.

வேலுமணி போல் ஒரு கொள்ளைக்காரர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருப்பதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். அவர் வேலுமணி அல்ல, ஊழல் மணியாக இருக்கிறார்.

ஊழல் செய்வது தான் இன்றைக்கு வேலுமணியின் வேலை. அப்படிப்பட்ட நிலையில் தான் அந்தத் துறை இன்று சீரழிந்து போயுள்ளது.

இதுபோன்ற அடிப்படைப் பிரச்சினைகளை உள்ளாட்சித்துறை தான் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்பபடப் போவதில்லை.

அவரது தம்பிகளுக்கு, உறவினர்களுக்கு, பினாமிகளுக்கு ஒப்பந்தங்களைக் கொடுத்துவிட்டு, லஞ்சம் வாங்கிக்கொண்டு, ஊழல் செய்து கொண்டு, இன்றைக்கு எடப்பாடியை விட அதிகம் அவர் தான் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்.

அதுவும் ஆளுநரிடத்தில் புகார் கொடுத்து இருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. இப்பொழுது அவர்கள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் 4 மாதங்களில் தி.மு.க. ஆட்சிக்கு வரப்போகிறது. வந்ததற்குப் பிறகு, அதை எல்லாம் தூசி தட்டி எடுத்து, உரிய நடவடிக்கையை நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் என்ற நம்பிக்கையை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நீங்கள் சொன்ன பிரச்சனைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன் என்னை நம்புங்கள். இந்த ஸ்டாலினை நம்புங்கள்.

இப்பொழுது அதிமுக அரசை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானம் உங்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்படுகிறது. நன்றி. வணக்கம்!

இவ்வாறு மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நிறைவு செய்து கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

முன்னதாக கரூர் பேருந்து நிலையம் அருகே கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பை ஏற்று, கூடியிருந்த மக்கள் மத்தியில் கழகத் தலைவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நடத்துவதற்காக நான் கரூருக்கு வந்திருக்கிறேன். கரூர் எனக்கு புதிய ஊர் அல்ல. எப்பொழுதும், எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும், நீங்கள் அழைக்கின்ற போதும் வந்திருக்கிறேன். நீங்கள் அழைக்காத போதும் வந்திருக்கிறேன். அந்த அளவிற்கு உரிமை உள்ள ஊர் இந்த கரூர்.

“அமைச்சர் MR.விஜயபாஸ்கர் மீது பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் உள்ளது” : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நம்முடைய மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி அவர்களுடைய தலைமையில் செயல்படக்கூடிய இந்த மாவட்டத்தை, மாவட்ட கழகத்தின் சார்பில், பகுதிக் கழகத்தின் சார்பில், நகரக் கழகத்தின் சார்பில், நம்முடைய அமைப்புகளின் சார்பில், சிறப்பான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இது வரவேற்பு நிகழ்ச்சியா? ஒரு பொதுக்கூட்டமா? ஒரு மாநாடா? நான்கு மாதங்களில் நடைபெற இருக்கும் வெற்றி விழாவா? என்று எண்ணக் கூடிய அளவிற்கு இந்த வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நம்முடைய செந்தில் பாலாஜி எப்பொழுதும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பார். மன்னிக்க வேண்டும். இப்பொழுது பல மாங்காய் அடிக்கிறார்.

கிராமசபைக் கூட்டம் என்று கூறிவிட்டு, இப்படி ஒரு சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அதையே ஒரு பொதுக்கூட்டம் போல, மாநாடு போல நடத்துகிறார் என்றால் அவர் பல மாங்காய் அடிக்கிறார் என்று தானே அர்த்தம். இந்த நேரத்தில் அவரைப் பாராட்டுகிறேன்.

அவருக்குத் துணை நின்று பணியாற்றக்கூடிய கழக முன்னோடிகள், நிர்வாகிகள், செயல் வீரர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நான் வாழ்த்துகிறேன். நன்றி சொல்கிறேன்.

நீங்களும் இங்கு ஆர்வத்தோடு வந்து இருக்கிறீர்கள். பொறுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். “பொறுத்தது போதும் பொங்கி எழு“ என்று சொல்வார்கள். அதே போல, பொறுத்தது போதும்.

இன்னும் 4 மாதங்களில் எடப்பாடி பழனிசாமி ஆட்டம் முடிவுக்கு வரும். இந்த ஊர் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆட்டமும் முடிவுக்கு வரும். ஒட்டுமொத்த அ.தி.மு.க.வின் ஆட்சியே முடிவுக்கு வந்து விடும்.

கொஞ்சமா கொள்ளையடித்து இருக்கிறார்கள். அவை பற்றிய விவரம் எல்லாம் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டு விட்டது. அவை எல்லாம் மத்திய அரசிடம் சென்றுவிட்டன. மத்திய அரசு அவர்களுக்கு உண்மையான கூட்டணி என்று நினைக்கிறீர்களா? பாருங்கள்.

தேர்தல் முடிந்தவுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய நாங்களெல்லாம் கோட்டையில் இருக்கப் போகிறோம். நாம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கப் போகிறோம்.

ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வினர், அரசியலில் இருந்து மட்டுமல்ல, இந்த நாட்டை விட்டே ஓடக்கூடிய அளவிற்கு அவர்களுடைய முகத்திரை கிழியப் போகிறது.

நான் 15 நாட்களுக்கு முன்னர், அண்ணா அறிவாலயத்தில், மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகரக் கழக, பேரூர் கழக செயலாளர்கள் அனைவரையும் அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம். அதில் ஒரு தீர்மானம் போட்டோம்.

நாடு முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று நம்முடைய நிர்வாகிகளுக்கு எடுத்துச் சொல்லி அந்தப் பணிக்கு அவர்களுக்கு உத்தரவிட்டோம். அந்த நிகழ்ச்சியை முடித்து வைத்துவிட்டு, பேசுகிறபோது, நம்முடைய இலக்கு 200 தொகுதி என்றேன்.

ஆனால் இப்பொழுது உங்களை எல்லாம் பார்க்கும்பொழுது 200 இல்லை. 234 என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக நான் பல்வேறு மாவட்டங்களுக்குக் கிராம சபை கூட்டத்தை நடத்துவதற்காகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். சென்ற இடமெல்லாம் மக்கள் திரளுகின்ற காட்சிகளைப் பார்க்கிறேன்.

ஆண்கள், பெண்கள், தாய்மார்கள், சகோதரிகள், இளைஞர்கள், வயது முதிர்ந்தவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பாட்டாளிகள், நெசவாளர்கள், வணிகப் பெருமக்கள் என அனைவரும் ஒட்டு மொத்தமாகத் திரண்டு வரக்கூடிய காட்சிகளைப் பார்க்கும்போது, நிச்சயமாக, உறுதியாக இந்த 4 மாதங்களில் தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி உதயமாகிற நாள் வரப்போகிறது என்ற நம்பிக்கை பிறக்கிறது.

அதை மட்டும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, அதற்கு நீங்கள் அத்தனை பேரும் எப்படி இங்கு உற்சாகத்தோடு, இன்முகத்தோடு வரவேற்று மகிழ்ந்து என்னை ஊக்கப் படுத்தி இருக்கிறீர்களோ, அதைக் தொடர்ந்து கடைப்பிடித்து, உதய சூரியனை உதயமாக வைக்கக் கூடிய வகையிலும் நீங்கள் பணியாற்றவேண்டும், தொண்டாற்ற வேண்டும், ஆதரவு தரவேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு, இந்த அன்புக்கும், உற்சாகத்திற்கும் நன்றி… நன்றி… நன்றி… என நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன். வணக்கம்.” என உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories