தமிழ்நாடு

“கடத்தல் வண்டியை பத்திரமாக அனுப்பி வைத்த காவல்துறை” : ஆளும் கட்சி துணையுடன் ரேஷன் அரிசி கடத்தல்!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற மினி லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

“கடத்தல் வண்டியை பத்திரமாக அனுப்பி வைத்த காவல்துறை” : ஆளும் கட்சி துணையுடன் ரேஷன் அரிசி கடத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பெரும்புகளூர் கிராமத்தில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில், ரேஷன் அரிசி கடத்திச் சென்ற மினி லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

பின்னர் லாரியை சோதனை செய்தபோது, வாகனத்தில் சுமார் 50 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கிராம மக்கள் இந்தக் கடத்தல் குறித்து நன்னிலம் போலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்த போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது, ரேஷன் அரிசி கடத்தல் நடந்திருப்பது உறுதியானது. ஆனால், விசாரணையின் முடிவில் போலிஸார் கடத்தல் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யாமல், கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை அரிசியுடன் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

“கடத்தல் வண்டியை பத்திரமாக அனுப்பி வைத்த காவல்துறை” : ஆளும் கட்சி துணையுடன் ரேஷன் அரிசி கடத்தல்!
கடத்தல் வண்டி

இதுகுறித்து சமூக ஆர்வலர் நவாஸ் கூறுகையில், “உணவுத்துறை அமைச்சருக்கு சொந்தமான மாவட்டத்தில் கடந்த மாதம் திருவாரூர் நகர் பகுதி உட்பட்ட கொடிக்கால்பாளையத்தில் லாரி மூலம் அரிசி கடத்தலில் ஈடுபட்டபோது, பொதுமக்கள் லாரியை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல அமைச்சரின் தொகுதிக்கு உட்பட்ட பகுதியிலேயே 2 டன் வரை ரேசன் அரிசி கடத்தல் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தலா 80 முதல் 85% பொருட்கள் மட்டுமே வழங்கி வரும் நிலையில், இதுபோன்ற கடத்தல் சம்பவங்களால் மேலும் பற்றாக்குறை ஏற்படும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே உடனடியாக உணவு கடத்தல் பிரிவு போலிஸார் மூலம் தமிழக அரசு கடத்தலில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

banner

Related Stories

Related Stories