தமிழ்நாடு

“நொய்யலை மேம்படுத்தவா? பினாமி நிறுவனங்களை மேம்படுத்தவா?" - எஸ்.பி.வேலுமணியை விளாசும் தி.மு.க எம்.எல்.ஏ!

“மக்களுக்கு பயனில்லாத மேம்பாலங்கள் கட்டியதுதான் தங்களின் சாதனையா?” என அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நொய்யலை மேம்படுத்தவா? பினாமி நிறுவனங்களை மேம்படுத்தவா?" - எஸ்.பி.வேலுமணியை விளாசும் தி.மு.க எம்.எல்.ஏ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“அரசு நொய்யல் ஆறு நிதி ஒதுக்கியது எதற்கு? நொய்யலை மேம்படுத்தவா? அல்லது பினாமி நிறுவனங்களை மேம்படுத்தவா?” என கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "உள்ளாட்சித் துறை அமைச்சரா? அல்லது ஊழலாட்சித் துறை அமைச்சரா? என்று தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் கேட்கக்கூடிய அளவில் ஊழலில் மிகப்பெரிய வரலாற்று சாதனைகளை புரிந்து கொண்டிருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி பேசுவதற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை.

கோவை மாவட்டத்தில் அதிகமான பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது பேட்டியில் பிதற்றியுள்ளார்.

கோவையில் உள்ள மக்கள், இந்த யாருக்கும் உதவாத, பயனில்லாத மேம்பால திட்டங்கள் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடன் இருப்பவர்களிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டு, பிறகு பேச வேண்டும்.

எடுத்துக்காட்டாக கடந்த 2010 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சுரங்கப்பாதையுடன் கூடிய இரண்டடுக்கு பாலம், ரவுண்டாணாவுடன் கூடிய பாலம் என பல்வேறு திட்டங்கள் போடப்பட்டு இருந்த சூழலில், அந்த திட்டத்தை முற்றிலும் மாற்றி, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய இடங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் மேம்பாலத்திற்கு அடியில் இருக்கும் சூழலில், மேம்பாலத்தை பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. மேம்பாலம் கட்டப்பட்டும், காந்திபுரம் பகுதியில் சற்றும் கூட போக்குவரத்து நெரிசல் என்பது குறையாமலேயே உள்ளது. ‘’சூசைடு பாயிண்ட்’’ என மக்கள் கேலி-கிண்டல் செய்யும் அளவுக்கு இப்பாலம் அபாயகரமாக உள்ளது. யாருக்கும் பயனில்லாமல் இந்த மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இதை மறுக்க முடியுமா? இப்படி மக்களுக்கு பயனில்லாத மேம்பாலங்கள் கட்டியதுதான் தங்களின் சாதனையா?

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி “உயர உயர பறந்தாலும் ஊர்க் குருவி பருந்து ஆகாது” என்ற பழமொழிக்கேற்ப தான் ஒரு 'ஊர்க்குருவிதான்' என்று இந்த மேம்பாலங்கள் திட்டத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

நொய்யல் ஆறு மற்றும் கோவையில் உள்ள குளக்கரைகளில் ஏரி, குளங்களை ஆழப்படுத்தாமல் , தூர் வாராமல் , ஏரிகளின் கரைகளை மட்டும் பலப்படுத்துகிறேன் என்ற பெயரில், நம் முன்னோர்கள் கட்டமைத்த குளங்களின் உயிர்ச்சூழலை கெடுக்கும் விதமாக, ஊழல், முறைகேடுகள் செய்வதற்கு ஏற்ற வகையில், குளக்கரைகளில் கான்கிரீட்களை கொட்டி மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை கோவையில் உள்ள மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். அரசு நொய்யல் ஆறு நிதி ஒதுக்கியது எதற்கு? நொய்யலை மேம்படுத்தவா? அல்லது பினாமி நிறுவனங்களை மேம்படுத்தவா? “முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது”.

கோவையில் கட்டி முடிக்கப்பட்ட வடகோவை ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், ஹோப் காலேஜ் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், திருச்சி சாலை ஒண்டிப்புதூர் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், உக்கடம் புறவழிச் சாலை (BYPASS ROAD), ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், நீலாம்பூர் புறவழிச் சாலை ( BYPASS ROAD ) ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், அவினாசி சாலை, தண்டு மாரியம்மன் கோயில் அருகில் உள்ள மேம்பாலம், சோமனூர் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், இரத்தினபுரி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், நஞ்சுண்டாபுரம் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், ஈச்சனாரி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், சிங்காநல்லூர் – வெள்ளலூர் இணைப்பு ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், இருகூர் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், மதுக்கரை சாலை உயர்மட்ட மேம்பாலம், என்று கோவையில் கட்டப்பட்டிருக்கும் அனைத்து மேம்பாலங்களும் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் தான் என்பதை கோவையின் கடந்த கால வரலாறு பற்றி தெரியாத அல்லது தெரிய விரும்பாமல், ஞாபக மறதி நோயிலிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கோவை மாநகர மக்களுக்காக 1972 ம் ஆண்டு, அன்றைய திமுக ஆட்சியின்போது, தமிழக முதல்வராக இருந்த தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களால் தான் கேரள அரசோடு ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டது. கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் குடிநீர் திட்டம் - 1, பில்லூர் குடிநீர் திட்டம் – 2 , ஆழியார் கூட்டு குடிநீர் திட்டம், வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் என அடுக்கி கொண்டே போகலாம். இதை நீங்கள் மறுக்க முடியுமா? கடந்த பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் ஒரு புதிய குடிநீர் திட்டமாவது நிறைவேற்றப்பட்டதா?

கோவை மாநகராட்சியில் தி.மு.க ஆட்சியில் கோவை மக்களுக்காக ஜவஹர்லால் நேரு நகரமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள், 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பில்லூர் 2 ம் குடிநீர் திட்டம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தந்த திட்டம் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டது.

மேலும், பன்மால் திட்டச் சாலை, உக்கடம் புறவழிச் சாலை , கவுண்டம்பாளையம் சாலை விரிவாக்கம், அவினாசி சாலை சித்ராவில் இருந்து காளப்பட்டி குரும்பபாளையம் வரை உள்ள சாலை விரிவாக்கம், விளாங்குறிச்சி சாலை விரிவாக்கம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பல்வேறு சாலைகள் தி.மு.க ஆட்சியில் புதியதாக அமைக்கப்பட்டது.

கோவை விமான நிலையம் நவீனப்படுத்தியது, கோவை ரயில் நிலையம் மேம்படுத்தியது, நூற்றுக்கும் மேற்பட்ட செம்மொழி பூங்காக்கள் அமைத்தது, 300 க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைத்தது போன்ற பல்வேறு திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த இந்த அனைத்துத் திட்டங்களுமே பொதுமக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் ஆகும்.

தி.மு.க ஆட்சியில் மனைகளை முறைப்படுத்துவதற்கு அன்றைய தமிழக முதல் அமைச்சர், முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த கழக தலைவர் தளபதி அவர்கள் அரசாணை பிறப்பித்தார். அதன் காரணமாக மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 600க்கும் மேற்பட்ட நகர்களில் அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகள் முறைப்படுத்தப்பட்டன.

அதன் காரணமாக தமிழக மக்களின் கருத்துக்களையும் , தோழமைக் கட்சிகளின் கருத்துக்களையும் ஏற்று 2006 ம் ஆண்டு தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றபோது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த கழகத் தலைவர் தளபதி அவர்கள் , மக்களுடைய நீண்ட காலப் பிரச்சினையாக இருந்த அங்கீகாரமற்ற மனைப்பிரிவில் வசித்து வந்த மக்களுக்கு 1980 ம் ஆண்டுக்கு முன்பு பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுக்கு சதுரடிக்கு ரூ.1.00 என்றும் , 1980 க்குப் பிறகு பிரிக்கப்பட்ட மனைப் பிரிவுக்கு சதுரடிக்கு ரூ.5.00 என்றும் அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகள் முறைப்படுத்தப்பட்டது தி.மு.க ஆட்சியில்தான். இதனால் குடிநீர் குழாய் இணைப்பு அமைத்தல், தார் சாலைகள் அமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற அனைத்து பணிகளும் நடந்தது.

தி.மு.க – காங்கிரஸ் மாநிலத்திலும் ,மத்தியிலும் ஆட்சியில் இருந்த பொழுது சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பில் காமராசர் சாலையில் உள்ள ESI மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

தி.மு.க ஆட்சியில், அவினாசி சாலையில் உள்ள டைடல் பூங்கா (Tidel Park) 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டது.

தி.மு.க ஆட்சியில் கருமத்தம்பட்டி அருகே அமைந்துள்ள உற்பத்தி சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம் நிறுவப்பட்டது.

தி.மு.க ஆட்சியின் போது பல்லடம், சுக்காம்பாளையம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகில், 65 ஏக்கர் பரப்பரளவில் சுமார் 55.74 கோடி ரூபாய் மதிப்பில் பல்லடம் உயர் தொழில் நுட்ப ஜவுளி பூங்கா நிறுவப்பட்டது.

இதுபோல மக்களுக்கு பயனுள்ள, எண்ணற்ற திட்டங்கள் , திமுக ஆட்சியின் போது, கோவை மக்களுக்காக நிறைவேற்றப்பட்டது. அதைச் சொல்லி மாளாது.

ஐந்து ஆண்டுகளில் ஐம்பது ஆண்டு கால சாதனைகள் என்று கூறும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , கடந்த பத்து ஆண்டு காலமாக தடைப்பட்டுள்ள எச்.ஐ.எச்.எஸ் காலனி மேம்பாலம், நீலிக்கோணாம்பாளையம் மேம்பாலம், ஹோப் காலேஜ் தண்ணீர் பந்தல் மேம்பாலம், கணபதி – ஆவாராம்பாளையம் மேம்பாலம், பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகள், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் “கிணற்றில் போட்ட கல்லாக” உள்ளது. இதுகுறித்து இதுவரை எதுவும் பேசாதது ஏன்?

தி.மு.க ஆட்சியில், தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களாலும், துணை முதல்வராக இருந்த கழகத் தலைவர் அவர்களாலும், பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு தி.மு.க ஆட்சியில் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பத்து ஆண்டுகளை கடந்த நிலையில் இன்றும் இந்த பணிகள் முடிக்கப்பட்டதா?

அதுபோலவே கோவை மாநகரில் உள்ள நீர்நிலைகள் தூர் வாருதல், குண்டும் குழியுமான சாலைகள், குடிநீர் பிரச்சினை , கழிவு நீர் வாய்க்கால்கள் தூர் வாருதல் , மாநகர் முழுவதும் உள்ள தெருக்களில் மலை போல குவிந்து கிடக்கும் குப்பைகள், எரியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான தெருவிளக்குகள் ,பாழடைந்து கிடக்கும் பூங்காக்கள் ,மயானங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் எந்த ஒரு உள்ளாட்சித் துறை சம்பந்தமான அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றியும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்து கொண்டு பேசாதது ஏன்? இன்னும் எத்தனை காலம்தான் கோவை மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்?

கோவையில், தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மாற்றியமைத்து மக்களுக்கு பயனில்லாமல் செயல்படுத்தினீர்களே தவிர, கடந்த பத்து ஆண்டுகளில், அ.தி.மு.க ஆட்சியில் , கோவை மாநகரின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், மக்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு திட்டத்தையாவது செய்ததாக குறிப்பிட்டு கூற முடியுமா? சிறிதளவாவது மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.

“கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானமேறி வைகுந்தம் போனானாம் “ என்ற பழமொழிக்கேற்ப, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டு, தி.மு.கவை விமர்சித்து பேட்டி வெளியிட்டுள்ளார்.

“நொய்யலை மேம்படுத்தவா? பினாமி நிறுவனங்களை மேம்படுத்தவா?" - எஸ்.பி.வேலுமணியை விளாசும் தி.மு.க எம்.எல்.ஏ!

அ.தி.மு.க ஆட்சி முடியும் கடைசி நேரத்தில் நாங்களும் திட்டங்கள் தீட்டுகிறோம் என்ற பெயரில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதை மட்டும் செய்து விட்டு, அதை விளம்பரப்படுத்திக் கொண்டு, பணிகள் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்படுகிறது.

கழகத் தலைவர் அவர்கள் அறிவித்த “ஒன்றிணைவோம் வா” முன்னெடுப்பின் கீழ் 18 இலட்சம் உதவி எண் கோரிக்கைகள், 76 இலட்சம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், 51 இலட்சம் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி, 28 இலட்சம் சமைத்த உணவுப் பொட்டலங்கள், 7 இலட்சம் அரசிடம் சமர்ப்பித்த கோரிக்கைகள் என்று ஓர் அரசாங்கம் செய்ய வேண்டியதை தி.மு.கழக நிர்வாகிகள் துணையுடன் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் களத்தில் நேரடியாக இறங்கிச் செய்து வருகிறார் . கட்சியினர் அழைக்கும் இடங்களுக்கு எல்லாம் சளைக்காமல் சென்று, நிவாரண உதவி செய்கிறார். இன்று வரையிலும் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து தி.மு.க சார்பில் வழங்கப்பட்டுக் கொண்டு வருகிறது.

ஆனால் அ.தி.மு.க. சார்பில் , பாதிக்கப்பட்ட மக்கள் எத்தனைப் பேருக்கு நேரடியாக நிவாரண உதவிகள் வழங்கினர்? பேரிடர் காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டியது ஒரு அரசின் கடமை. “பொய்யிலே பிறந்து பொய்களிலேயே வாழ்ந்து வரும்” அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , அரசு சார்பில் செய்த சிறிய அளவிலான உதவிகளை , அ.தி.மு.க வினர் செய்தது போல விளம்பரப்படுத்தி பேட்டி அளித்து கொண்டு இருக்கிறார். இதில் அறைக்குள் இருந்தது யார்? நிவாரண களத்திற்கே வராமல் இருந்தது யார்? பொய்யையும், புரட்டையும் பரப்புபவர்கள் யார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

தமிழக உள்ளாட்சித்துறை அமைப்பையே தனது உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் மட்டும் உரித்தான துறையாக மாற்றிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்களைப் பற்றி சிந்திக்காமல், மக்களைக் காப்பாற்றுவதை தவிர்த்துவிட்டு, தங்களைச் சிறைக்கு செல்லாமல் காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கும், தமிழக உரிமைகளை பறி கொடுத்த, இந்த கேடுகெட்ட ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மை கூடத் தெரியாமல், உள்ளாட்சி நிர்வாகத்தை, ஊழல் நாறும் நிர்வாகமாக மாற்றியிருக்கும் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இதுபோல பேசுவது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச்சுவை. தற்பொழுது உள்ளாட்சித் துறை என்றாலே “ஊழல் துறை” என்றே மக்கள் கருதுகிறார்கள்.

மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டிக் கொள்ளையடித்து அரசுக் கருவூலத்தைக் காலி செய்து, “கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன்” என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, எங்கள் கழகத் தலைவரைப் பற்றி பேசுவதற்கு அருகதையில்லை. “நேற்று அடித்த காற்றில் இன்று கோபுரத்தின் மீது சென்ற குப்பை ஒருபோதும் கோபுரக் கலசமாக மாற முடியாது”!

தனக்கு எதிரான ஊழல் வழக்குகளை மறைக்கும் பொருட்டு, சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை, காவல்துறை போன்ற அமைப்புகளைத் தலையாட்டிப் பொம்மைகளாக்கி, அவற்றின் மீதான நம்பகத்தன்மைக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேராபத்து ஏற்படுத்தியிருப்பதையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.

ஊழல் புகார்களால் மக்கள் சபையில் வெட்கித் தலை குனிய வேண்டியவர்கள், மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லி, பொதுமக்களை ஏமாற்றலாம் என வீண் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்!

நெருப்பில்லாமல் புகையுமா? ஒரு அமைச்சர் மீது தொடர்ந்து ஆதாரங்களுடன் ஊழல் புகார்கள் வருகிறது என்றால் என்ன காரணம்? ஊழல் முறைகேடுகள் நடக்காமல் ஊழல் வழக்குகள் தொடர்ந்து போடப்படுமா? அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொல்வது படி “தான் குற்றமற்றவர்” என்றால், தகுந்த ஆதாரங்களுடன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாதது ஏன்? லஞ்ச ஊழல் தடுப்புத் துறை முன்பு ஆஜராகி விளக்கமளிக்காதது ஏன்? இதுகுறித்து பதிவிடுபவர்கள், பேசுபவர்கள் அனைவரையும் காவல்துறையை ஏவி விட்டு பொய் வழக்கு போட்டு கைது செய்வது ஏன்? தன்னுடைய முறைகேடுகள் எல்லாம் வெளியே தெரிந்து விடும் என்பதாலா?

கடந்த நான்கரை ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களைக் கூறி, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை எல்லாம் பின்பற்றாமல் , உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், உள்ளாட்சி ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பேட்டி என்ற பெயரில் கூறும் பொய்களையும், புரட்டுகளையும் மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories