தமிழ்நாடு

விவசாயிகள் கடன்பெற புதிய கணக்கு தொடங்கும் நடைமுறையை துரிதப்படுத்துக - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெறுவதற்கு மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவங்கும் நடைமுறையை துரிதப்படுத்த தேவையான நடைமுறையை தமிழக அரசு ஏற்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகள் கடன்பெற புதிய கணக்கு தொடங்கும் நடைமுறையை துரிதப்படுத்துக - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வரும் விவசாயக் கடன்களை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவங்கி, அவற்றின் மூலமாக பெற வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கடந்த ஜூலை 7 ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிராமப்புற விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும், வங்கிக்கணக்கு துவங்க அவகாசம் அளிக்காமல் இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளதாகவும் கூறி, இதை எதிர்த்து, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விவசாயிகள் பயிர்க்கடன்களை உடனடியாக பெற முடியாது என்பதால், இந்த புதிய நடைமுறையை நவம்பர் 1ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், விவசாயிகள், மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு துவங்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விவசாயிகள் மூலம் பூர்த்தி செய்து பெற்று, மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கணக்குகள் துவங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் 36 மாவட்டங்களில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 33 விவசாயிகளுக்கு, 2 ஆயிரத்து 256 கோடியே 21 லட்சம் ரூபாய் விவசாய கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் 4450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 90 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளதாகவும், கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால், அத்தனை விவசாயிகளுக்கு கணக்கு துவங்குவதில் நீண்ட காலம் ஆகும் என்பதால், கணக்கு துவங்கும் நடைமுறையை துரிதப்படுத்த தேவையான நடைமுறையை ஏற்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நபார்டு வங்கிக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

banner

Related Stories

Related Stories