தமிழ்நாடு

அ.தி.மு.க ஆட்சியில் தலைதூக்கும் வெடிகுண்டு கலாச்சாரம்: வெடிகுண்டுகளுடன் சிக்கிய ரவுடி கும்பலால் பரபரப்பு!

சென்னை மணலியில் வாகன சோதனையின் போது வெடிகுண்டுகளுடன் ரவுடிகள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் தலைதூக்கும் வெடிகுண்டு கலாச்சாரம்: வெடிகுண்டுகளுடன் சிக்கிய ரவுடி கும்பலால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமானதன் விளைவாக ஊரடங்கு காலத்திலும் கூட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் ரவுடிகளிடையே தற்போது வெடிகுண்டு பயன்பாடு அதிகரித்துள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் கூட தூத்துக்குடி அருகே பிரபல ரவுடியான துரைமுத்துவை பிடிக்கச் சென்ற போலிஸார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியதில் போலிஸ்காரர் சுப்பிரமணியன் தலை சிதறி பலியானார். மற்றொரு குண்டை வீசியபோது அது வெடித்து துரைமுத்துவும் இறந்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து கடந்த 28ம் தேதி இரவு திருப்போரூரில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் செங்கல்பட்டைச் சேர்ந்த ரவுடி அசோக்குமார் என்பவருக்கு தலையில் காயமும், ஒரு கண் பாதிப்பும் ஏற்பட்டது. உடன் வந்த விக்னேஷ்குமார் என்பவருக்கு கை துண்டானது.

அ.தி.மு.க ஆட்சியில் தலைதூக்கும் வெடிகுண்டு கலாச்சாரம்: வெடிகுண்டுகளுடன் சிக்கிய ரவுடி கும்பலால் பரபரப்பு!

இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், திருப்போரூர் காவல் நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது ரவுடியின் கேளம்பாக்கம் வீட்டில் இருந்து 4 வெடிகுண்டுகளை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பப்ஜி விளையாட்டின் மூலம் கொலைக்கான சதித்திட்டம் தீட்டியது அம்பலமனது. இந்நிலையில், சென்னை மணலியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வெடிகுண்டுகளுடன் ரவுடிகள் பிடிபட்டுள்ளனர்.

சென்னை மணலி எஸ்.ஆர்.எப் ஜங்ஷன் அருகே மணலி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கண்ணகி தலைமையிலான போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் பயங்கர வேகத்துடன் தணிக்கையில் நிற்காமல் சென்றனர்.

அ.தி.மு.க ஆட்சியில் தலைதூக்கும் வெடிகுண்டு கலாச்சாரம்: வெடிகுண்டுகளுடன் சிக்கிய ரவுடி கும்பலால் பரபரப்பு!

அப்போது, விரட்டிப் பிடித்த போலிஸார் அவர்களைச் சோதனை மேற்கொண்டதில் ஆளுக்கு ஒருவர் பட்டாக்கத்திகளை வைத்திருந்தனர். இதில் கௌரி சங்கர், சதீஷ், கார்த்திக் ஆகியோர் கையில் தலா ஒரு நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களை உடனடியாக கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து போலிஸார் விசாரணை மேற்கொண்டதில், கும்மிடிப்பூண்டியில் உள்ள பிரபல ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டி அனைத்தையும் தயார் செய்து வைத்து சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

காட்டாங்குளத்தூர் பொத்தேரி பகுதியில் மறைந்திருந்த மணலி பெரிய தோப்பு பகுதியை சேர்ந்த ஹரி என்ற கௌரி சங்கர், பொன்னேரியைச் சேர்ந்த சதீஷ் என்ற சண்ட சதீஷ், செங்குன்றம் பகுதியை சேர்ந்த பசுபதி, வண்டலூர் பகுதியை சேர்ந்த செல்லா என்ற செல்வகுமார், காட்டாங்குளத்தூர் பகுதியை சேர்ந்த குகன் ராஜா, மாத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகிய 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 6 கத்திகள் 3 நாட்டு வெடிகுண்டுகள் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அ.தி.மு.க ஆட்சியில் தலைதூக்கும் வெடிகுண்டு கலாச்சாரம்: வெடிகுண்டுகளுடன் சிக்கிய ரவுடி கும்பலால் பரபரப்பு!

6 ரவுடிகள் மீது வழிப்பறி, கொலை முயற்சி, கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரத்தின் எல்லைப்பகுதியான மணலியில் தொழிற்சாலைகள் நிறைந்த வழித்தடங்களில் வெடிகுண்டுகளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த டி.ஜி.பி திரிபாதி, “தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் இல்லை. தற்போது வெடிகுண்டுகள் வெடிப்பது குறைந்து வருகின்றன. வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பத்தை கையாள்வதற்கு காவல்துறையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அடுத்தடுத்து வெடிகுண்டுகளுடன் ரவுடிகள் பிடிபடுவதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories