தமிழ்நாடு

கந்து வட்டிக் கொடுமை : தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு கைக்குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி!

கந்துவட்டி கொடுமையால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கந்துவட்டி கொடுமையால் இரண்டு கைக்குழந்தைகளுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேசன், வேளாங்கணி தம்பதி. இவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் ரூபாய் 3 லட்சத்தை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வட்டிக்கு வாங்கி உள்ளனர்.

கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்திய பின்பும் இன்னும் வட்டிப்பணம் தரவேண்டும் என்று ஜோசப் மிரட்டி வந்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த கணேசன், அவரது மனைவி குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க இன்று வந்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கணேசன் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்றனர். இதனைக் கண்ட அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணைக்கு சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா காலத்தில் மக்கள் அன்றாட வாழ்வுக்கு அல்லல்படும் நிலையில், கந்து வட்டி கொடுமையாலும் மக்கள் துன்புறுவதைத் தடுக்க அரசு தகுந்த நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

banner

Related Stories

Related Stories