நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த தேயிலை விவசாயி மகள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குளா கிராமத்தைச் சேர்ந்த சுந்தரன் - சித்ராதேவி தம்பதியினரின் ஒரே மகள் மல்லிகா. இவர் யு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 621வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை தேயிலை விவசாயி. தாய் ஓய்வு பெற்ற கிராம செவிலியர்.
UPSC தேர்வில் இந்திய அளவில் 621-வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ள மல்லிகாவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (08.08.2020) தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, வாழ்த்து மடல் ஒன்றிணையும் எழுதினார்.
இதையடுத்து, சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது தனது வெற்றிக்கு மிகவும் உதவிக்கரமாக இருந்ததாகவும், அந்த வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும், தன்னைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொன்ன தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மல்லிகா கூறினார்.
நீலகிரி மாவட்டச் செயலாளர். பா.மு.முபாரக் உள்ளிட்ட தி.மு.கழக நிர்வாகிகள், மல்லிகா அவர்களை நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி, கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.