தமிழ்நாடு

“குலக் கல்வியை புகுத்தி, இந்தியை திணிக்க புது உத்தியை கையாண்டுள்ளது மோடி அரசு” - முத்தரசன் கடும் தாக்கு!

மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ள மத்திய மோடி அரசு அறிவிக்கப்படாத அவசர நிலையை அமல்படுத்தியுள்ளது என சி.பி.ஐ.எம் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

“குலக் கல்வியை புகுத்தி, இந்தியை திணிக்க புது உத்தியை கையாண்டுள்ளது மோடி அரசு” - முத்தரசன் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குலக்கல்விக்கு பதிலாக தொழிற்கல்வி என்ற பெயரில் குலக் கல்வியை நுழைப்பதற்கும் இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளைத் திணிப்பதற்கும் மத்திய அரசு புதிய உத்தியை மேற்கொண்டுள்ளது. இதனை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதன் விவரம் வருமாறு :

“தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு தொடர்வதால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், வணிகர்கள் சிறு, குறு தொழில் செய்வோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான நேரடி உதவிகள் செய்ய வேண்டுமென்று அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில் தொழிலாளர்கள் எவ்வாறு வேலைக்குச் செல்ல முடியும்? இதற்கு அரசு உடனடியாக தீர்வு காணவேண்டும்.

“குலக் கல்வியை புகுத்தி, இந்தியை திணிக்க புது உத்தியை கையாண்டுள்ளது மோடி அரசு” - முத்தரசன் கடும் தாக்கு!

கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு பல அவசர சட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றி வருகிறது. நாட்டு மக்களுக்கு, விவசாயிகளுக்கு எதிராக, மின்சார திருத்தச் சட்டம், சுற்றுச்சூழலுக்கு எதிரான சட்டங்களையும் மத்திய அரசு கொண்டுவருகிறது. பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது. மின்சார திருத்தச் சட்டத்தால் தமிழகத்தில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் உரிமைகள் பறிக்கப்படும், மாநில உரிமையும் பறிக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையை அப்படியே ஏற்றுக்கொண்டது. இதற்கு எதிராக வந்த இரண்டு லட்சம் மனுக்களை பரிசீலனை செய்யாமல், மாநில அரசுகளின் கருத்துகளை கேட்காமல் அவரசமாக அமைச்சரவை கூடி முடிவு செய்திருப்பது மிக கடுமையான கண்டனத்துக்குரியது.

அது புதிய கல்விக் கொள்கையல்ல. அது பழைய கல்வி கொள்கை. ராஜாஜி இருந்தபோது குலக்கல்வியை கொண்டுவந்தார். நாடே கொந்தளித்த பிறகு ராஜாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். குலக்கல்வி என்பதற்கு பதிலாக தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை நுழைப்பதற்கும் இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை திணிப்பதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும். மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றது ஏற்புடையது அல்ல. இவை எல்லாம் மாநில அரசின் உரிமைககளைப் பறிக்கும். அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு ஏழு மாதம் ஆகிறது. அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. உள்ளாட்சி நிதிகள் எல்லாம் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது.

மக்கள் பிரதிநிதிகள் பொம்மைகளாகவே உள்ளனர். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா காலத்தை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி ஏராளமான அறிவிப்புகளையும் அவசர சட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் பாலன் இல்லம் குறித்தும் , மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்தும் அவதூறான செய்தி வெளியிட்டது குறித்து சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலையங்களில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.” இவ்வாறு முத்தரசன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories