தமிழ்நாடு

“உயிரிழந்த தகவலையே தெரிவிக்காமல் அலைக்கழித்த கொடுமை”- மருத்துவமனை அலட்சியத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சி!

சென்னையில் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்த தகவலைக் கூட குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் சுகாதாரத்துறை அலட்சியமாகச் செயல்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“உயிரிழந்த தகவலையே தெரிவிக்காமல் அலைக்கழித்த கொடுமை”- மருத்துவமனை அலட்சியத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னையில் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்த தகவலைக் கூட குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் சுகாதாரத்துறை அலட்சியமாகச் செயல்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் ரமணா நகரைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஆனந்தபழனி. அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதால் கடந்த ஜூன் 29ம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

அதற்கு அடுத்த நாளே அண்ணா நகர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு சென்று உறவினர்கள் விசாரிக்க, ஆனந்தபழனி எனும் பெயரில் யாரும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தபழனியின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், ஆனந்தபழனியின் இளைய சகோதரர் ராமச்சந்திரன் மருத்துவமனை மருத்துவமனையாகத் தேடி அலைந்துள்ளார். எங்கும் சரியான தகவல் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஆனந்தபழனி, ஜூன் 30ம் தேதியே, அதாவது மருத்துவமனைக்குச் சென்ற அடுத்த நாளே உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. அவரது உடல் ஆதரவற்றோர் சடலம் எனக் குறிப்பிட்டு பிணவறையில் வைக்கப்பட்டிருந்துள்ளது.

10 நாட்களுக்குப் பிறகுதான் இந்தத் தகவல் பல்வேறு தேடுதல்களுக்குப் பிறகு குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. முகவரி உள்ளிட்ட தகவல்களை முன்பே அளித்தும் மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்தக் கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “72 வயசு மாமனாருக்கு கொரோனா. ஜி.எச். அனுப்பினோம். அவர் இறந்ததைக்கூட சொல்லாம அனாதைப் பிணம்னு ஒரு வாரம் மூலையில வச்சு, ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலையவிட்டாங்க’ எனக் கலங்கும் பெரம்பூர் சுமதியின் கண்ணீருக்கு அடிமைகள் பதில் சொல்லும் காலம் வெகுதூரத்தில் இல்லை! ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories