தமிழ்நாடு

"இப்படியும் ஒரு போலிஸ்" : உயிரிழந்த சாலையோரவாசியின் உடலை இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்த இன்ஸ்பெக்டர்!

சாலையோரத்தில் உயிரிழந்தவரின் உடலை இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்த சென்னை போலிஸாருக்கு பாராட்டு குவிந்துவருகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் ஊரடங்கு விதிகளை மீறியதாக கைது செய்த போலிஸார் விசாரணையின் போது அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினரின் தொடர் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் கொந்தளித்து தங்களின் எதிர்ப்பைக் காட்டிவருகின்றனர். இந்தச் சூழலில் காவல்துறையில் இருக்கும் சில போலிஸாரின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான ராஜேஸ்வரி, விஜயலட்சுமி மற்றும் பிரபாவதி ஆகியோர் எஸ்.வி.எம் நகரில் சாலையோரத்தில் வசித்து வந்துள்ளனர். வயது மூப்பு காரணமாக மூவரும் சாலையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரித்து விற்று அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் மூன்று பேரும் வாழ்ந்து வந்துள்ளனர்.

"இப்படியும் ஒரு போலிஸ்" : உயிரிழந்த சாலையோரவாசியின் உடலை இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்த இன்ஸ்பெக்டர்!

இந்நிலையில், சென்னை ஊரடங்கு காரணமாக முடங்கிப்போய் உணவுக்கே வழியில்லாத நிலையில் இருந்துள்ளனர். அவர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அடிக்கடி உணவு கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் மூன்றாவது சகோதரியான பிரபாவதி உடல்நிலை பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

உயிரிழந்த பிரபாவதியின் உடலை அடக்கம் செய்ய அக்கம் பக்கத்தினரிடம் ராஜேஸ்வரியும் விஜயலட்சுமியும் உதவி கேட்டுள்ளனர். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் சகோதரிகள் இருவரும் சடலத்தை சாலையோரத்திலேயே வைத்து கண்ணீர்விட்டு கதறி அழுதுகொண்டிருந்தனர்.

இதனையடுத்து இதுதொடர்பான தகவல் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கவனத்திற்குச் சென்றுள்ளது. பின்னர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த பிரபாவதி உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

"இப்படியும் ஒரு போலிஸ்" : உயிரிழந்த சாலையோரவாசியின் உடலை இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்த இன்ஸ்பெக்டர்!

அப்போது பிரபாவதியின் புடவை கிழிந்த நிலையில் இருந்ததைக் கண்டு புதிய சேலை வாங்கிவந்து, அவரது உடலைக் குளிப்பாட்டி மலர்தூவி இறுதி மரியாதை செய்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரது உடலை ஓட்டேரி மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்தனர்.

மேலும் பிரபாவதியின் சகோதரிகள் இருவருக்கும் ஆறுதல் கூறி, தேவையான உதவிகளையும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் அவர் தலைமையிலான போலிஸார் செய்தனர். இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories