தமிழ்நாடு

தமிழகத்தில் தொடர்கதையாகும் காவல்துறை கொலைகள்: காவல்துறையா? கொலைத் துறையா? - சுப.உதயகுமார் கடும் கண்டனம்!

அப்பாவி மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்து உயிரைப் பறிக்கும் காவல்துறையினரின் செயல்பாடுகளுக்கு சமூக ஆர்வலர் சுப உதயகுமார் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காவல்துறையா, கொலைத் துறையா?

ஜார்ஜ் ஃபிளாய்ட்டை கழுத்தை நெறித்துக் கொன்ற, ரெய்ஷார்ட் புரூக்ஸ்சை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அமெரிக்கப் போலிஸ் வைரஸ் தமிழகத்திலும் பரவிக்கொண்டிருக்கிறதோ? காவல்துறைக் கொலைகள் இங்கே தமிழகத்தில் ஒரு தொடர்கதையாகவே நடந்து வருகின்றனவே?

கடந்த ஒரு சில வாரங்களிலேயே அடுத்தடுத்து காவல்துறைக் கொலைகள் கடிதில் அரங்கேறி வருகின்றன. மதுரையில் கறிக்கடை நடத்திக்கொண்டிருந்த ஓர் இசுலாமியப் பெரியவரை அடித்துக் கொன்றார்கள். திருவைகுண்டத்தில் ஒரு கடைக்காரரை காவல்துறையினர் அடித்து உதைத்து, அதைக்கண்டித்து ஊர் வியாபாரிகள் அனைவரும் போராட்டத்தில் குதித்து, உதவி ஆய்வாளர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டு அந்தப் பகுதியே அல்லோகல்லோலப் பட்டது

இன்று சாத்தான்குளத்தில் ஓர் அப்பாவையும் மகனையும் காவல்துறை அதிகாரிகள் அடித்தேக் கொன்றிருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் கடையை அடைக்கச் சொன்னார்களாம். கடைக்காரர் (ஜெபராஜ்?) எதிர்த்து நின்றாராம். அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கினார்களாம். இந்தத் தகவல் அறிந்து அவரது மகன் (பென்னிக்?) காவல்நிலையம் சென்று தட்டிக்கேட்டாராம். அவரையும் அடித்து உதைத்துக் கொலை செய்திருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

தமிழகத்தில் தொடர்கதையாகும் காவல்துறை கொலைகள்: காவல்துறையா? கொலைத் துறையா? - சுப.உதயகுமார் கடும் கண்டனம்!

இந்த அப்பா-மகன் ஜோடி கொள்ளைக்காரர்கள் அல்ல, மணல் திருடர்கள் அல்ல, லஞ்சம் வாங்கியவர்கள் அல்ல, சாராய வியாபாரிகள் அல்ல. (அப்படியெல்லாம் இருந்திருந்தால் சல்யூட் அடித்து ச(கி)ம்பளம் வாங்கிவிட்டு அனுப்பி வைத்திருப்பார்களே!

கொரோனாவும், ஊரடங்கும், கெடுபிடிகளும் காவல்துறையினர் மத்தியில் பல பொல்லாத மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. அதீத அதிகாரம் இவர்கள் கண்களை மறைக்க, தாங்கள் சொல்வதை அனைவரும், அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சர்வாதிகார மனப்பான்மையில், கொடுங்கோல் போக்கில் சிக்கியிருக்கின்றனர்.

காவல்துறை அதிகாரிகள் மிகவும் கடினமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். தங்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், இரவு பகலாக சாலைகளிலும், தெருக்களிலும் கிடந்து ஆபத்தான வேலை செய்கிறார்கள்தான். போதிய ஓய்வு இல்லாததால், கடும் மனஉளைச்சலுக்கும், கோபத்துக்கும் ஆளாகிறார்கள்தான்.

ஆனால் இன்னபிறக் காரணங்களால், இவர்கள் யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம், நடத்தலாம் என்கிற உரிமையை, அதிகாரத்தை யார் இவர்களுக்குக் கொடுத்தது? மக்களைப் போட்டுத் தாக்கும், அடித்துக் கொலை செய்யும் காவல்துறையினர் ஓர் ஊழல்வாதி அமைச்சரிடம், ஒரு சாராய வியாபாரி எம்.எல்.ஏ.விடம், ஓர் ஆளுங்கட்சி வட்டச் செயலாளரிடம் ஏதாவது வாலாட்டுவார்களா? மாட்டார்கள். ஊருக்கு இளைத்தவன்தானே பிள்ளையார் கோவில் ஆண்டி?

தமிழகத்தில் தொடர்கதையாகும் காவல்துறை கொலைகள்: காவல்துறையா? கொலைத் துறையா? - சுப.உதயகுமார் கடும் கண்டனம்!

தாங்கள் பேணிப் பாதுகாக்கவேண்டிய ஆயுதமேந்தாதப் பொதுமக்களை, இத்தனை வன்மத்துடன், வக்கிரத்துடன், குரூரத்துடன் அடித்து உதைத்துக் கொலைசெய்கிறார்கள் என்றால், இங்கே காவல்துறையில் எதுவுமே சரியில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

காவல்துறையில் சேர்த்துக்கொள்ளும் முன்னர், ஒரு முழுமையான பின்புல ஆய்வு நடத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட நபர் மனநலம் கொண்ட மனிதன்தானா என்பதை முதலில் உறுதிசெய்வோம். காவல்துறையினருக்கு வழங்கப்படும் பயிற்சி முறைகளைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. இதைப் பற்றிய ஒரு பொது விவாதம் தேவைப்படுகிறது.

காவல்துறையினர் தவறுகள் செய்தால், காக்கி உடைக் காப்பாற்றாது, கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிற நிலை உருவாக்கப்பட வேண்டும். காவல்துறையினரின் வேலை நேரம், வேலைப் பளு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அவர்களுக்குப் போதிய ஓய்வு கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்கள் மனிதத்தன்மையை இழந்துவிடாதிருக்க அவ்வப்போது பயிற்சிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

மாவட்டத்திற்கு நான்கைந்து ஆற்றுப்படுத்தும் மனநல ஆலோசகர்களை (Counselors) அரசு உடனடியாக நியமிக்க வேண்டும். காவல்துறை அமைச்சரான முதல்வரும், காவல்துறைத் தலைவரும் தமிழக மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும், பொதுமன்னிப்புக் கேட்க வேண்டும்.

இப்போது இந்த சாத்தான்குளக் கொலைகாரர்களை வேலையைவிட்டு உடனடியாக, நிரந்தரமாகத் துரத்த வேண்டும். இந்த மனித மிருகங்கள் காவல்துறை வேலைக்குக் கடுகளவும் லாயக்கற்றவர்கள். அவர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, கூண்டில் ஏற்றப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த காவல்துறைச் சீர்திருத்தம் உடனடித் தேவையாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories