தமிழ்நாடு

“மருத்துவ படிப்புகளில் OBC இடஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவிடுக” - சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க வழக்கு!

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி தி.மு.க சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

“மருத்துவ படிப்புகளில் OBC இடஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவிடுக” - சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க வழக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி தி.மு.க., சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகள், டிப்ளமோ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில், கலந்தாய்வு நடத்த தடை கோரியும், அந்த முடிவுகளை ரத்து செய்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரியும் தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுசம்பந்தமாக உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது. அதன்படி, தி.மு.கவின் செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் மொத்தமுள்ள இடங்களில், 15 சதவீத இடங்களை மத்திய அரசுக்கு, அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும். அதேபோல, மருத்துவ மேற்படிப்புக்களுக்கான இடங்களில் 50 சதவீத இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும். ஆனால் இந்த இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

“மருத்துவ படிப்புகளில் OBC இடஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவிடுக” - சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க வழக்கு!

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளதாகவும், இதில், 50 சதவீத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு மறுப்பதால் இப்பிரிவு மாணவர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாகவும், மத்திய அரசின் 27 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றினால் கூட, நடப்பு கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்பில் மொத்தமுள்ள 8 ஆயிரத்து 137 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 2 ஆயிரத்து 197 இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் இருந்து 960 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடங்களில் 50 சதவீத இடங்களான 430 இடங்களை பெற தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உரிமை உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்போது, தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், 425 பேர் மருத்துவ மேற்படிப்பு வாய்ப்பை இழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்பட்ட 795 இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், 395 பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories