தமிழ்நாடு

“கொரோனா வைரஸ் நம் வாசற்படியில்தான் உள்ளது; இயற்கையைச் சுரண்டினால் பாதிக்கப்படுவோம்” : நீதிபதிகள் ஆதங்கம்!

கொரோனா வைரஸ் நம் வாசற்படியில் தான் உள்ளது. இதுபோல் இயற்கையைச் சுரண்டுவது தொடர்ந்தால் அனைவரும் பாதிக்கப்படுவோம் எனஉயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

“கொரோனா வைரஸ் நம் வாசற்படியில்தான் உள்ளது; இயற்கையைச் சுரண்டினால் பாதிக்கப்படுவோம்” : நீதிபதிகள் ஆதங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கருங்காட்டன்குளம் விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் விஜயராஜன். இவர் பெரியாற்றுப் பாசனக் கால்வாயில் இருந்து சட்டவிரோதமாக நிலத்தடி நீர் மற்றும் ஆற்றுநீர் திருடப்படுவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில், “முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுவதற்கு முன்பு, வைரவனாறு, சுருளியாறு ஆகியவை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசன வசதி பெற்று வந்தது. நெல் விவசாயம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தற்போது சட்டவிரோதமாக தண்ணீர் அபகரிப்பது அதிகரித்துள்ளது. பெரியாறு நீர் பாசன கால்வாய் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆயக்கட்டு நிலங்களிலிருந்தும் நீரை குழாய்கள் மூலம் சட்டவிரோதமாக எடுத்துச் செல்கின்றனர்.

“கொரோனா வைரஸ் நம் வாசற்படியில்தான் உள்ளது; இயற்கையைச் சுரண்டினால் பாதிக்கப்படுவோம்” : நீதிபதிகள் ஆதங்கம்!

ஆகவே அதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும், லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை பெரியாற்றுப் பாசனக் கால்வாயில் இருந்து சட்டவிரோதமாக நிலத்தடி நீர் மற்றும் ஆற்றுநீர் திருடப்படுவது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய், “சட்டவிரோதமாக குழாய்கள் அமைத்து தண்ணீரை திருடப்படுவதோடு, சில கண்மாய்களில் இருந்தும் தண்ணீர் திருடப்படுகிறது.

அப்பகுதியில் இருக்கும் செல்வாக்குமிக்க நபர்களின் கீழ், 10க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மதுரையில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்னை தொடங்கிவிட்டது. இதுபோல தண்ணீர் திருட்டு தொடர்ந்தால் மதுரை மிகப்பெரும் குடிநீர் பஞ்சத்தை சந்திக்கும். ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள், “இயற்கையைச் சுரண்டுவதும் வைரஸ் தாக்குதல் போலத்தான். கொரோனா வைரஸ் நம் வாசற்படியில் தான் உள்ளது. இதுபோல் இயற்கையைச் சுரண்டுவது தொடர்ந்தால் அனைவரும் பாதிக்கப்படுவோம்” எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, தண்ணீர் திருட்டு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேனி மாவட்ட ஆட்சியர், மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories