தமிழ்நாடு

"கடன் சுமையை அதிகரித்ததுதான் அ.தி.மு.க அரசின் சாதனை” - பட்ஜெட் குறித்து கொந்தளித்த வைகோ !

தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதுதான் அ.தி.மு.க அரசின் சாதனை என வைகோ தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதுதான் அ.தி.மு.க அரசின் சாதனை” என நிதிநிலை அறிக்கை குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 விழுக்காடாக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 5 விழுக்காடு அளவுக்கு சரிந்துள்ள நிலையில், அதன் தாக்கம் மாநிலத்திலும் இருக்கும் என்பதே உண்மை நிலை ஆகும்.

கடந்த ஆண்டில் ரூ. 3 லட்சத்து 97 ஆயிரத்து 400 கோடியாக இருந்த கடன், நடப்பு ஆண்டில் 4 இலட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக உயர்ந்துவிட்டது

2011ஆம் ஆண்டில் அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றபோது, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 610 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் சுமை, சுமார் 5 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதுதான் இந்த அரசின் சாதனை.

மத்திய வரி பங்கீட்டில் தமிழகம் பெரும் இழப்புக்கு ஆளாகி உள்ளது. மேலும் வருவாய் பற்றாக்குறை 22 ஆயிரத்து 226 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஆதாரம் எங்கே இருக்கிறது?

"கடன் சுமையை அதிகரித்ததுதான் அ.தி.மு.க அரசின் சாதனை” - பட்ஜெட் குறித்து கொந்தளித்த வைகோ !

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்த, சென்னையில் 2,000 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்தும இடம், 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டும் திட்டம், நடைபாதைவாசிகளுக்கு 38 ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் திட்டம் போன்றவை அறிவிப்போடு நின்றுவிட்ட நிலையில், இந்த வரவு செலவு திட்டத்தில் அறிவித்துள்ள திட்டங்களுக்கும் அதே கதிதான் ஏற்படும்.

காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு வெறும் கானல் நீர் என்பது நிதி அறிக்கை மூலம் வெளிப்பட்டு இருக்கிறது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் மூலம் வேதாந்தா குழுமம், ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுடன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குப் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்ய அ.தி.மு.க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க 2017, ஜூலை 19ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ள குறிப்பாணை 29ன் படி, 57 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பாணையை திரும்பப் பெறாமல், வேளாண் மண்டலம் என்று வெற்று அறிவிப்பு வெளியிடுவது மோசடியாகும்.

வேளாண் தொழிலைப் பாதுகாக்கவும், விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றவும், இந்த நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்கள் இல்லை.

"கடன் சுமையை அதிகரித்ததுதான் அ.தி.மு.க அரசின் சாதனை” - பட்ஜெட் குறித்து கொந்தளித்த வைகோ !

வேளாண் கடன்கள் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் வேளாண் விளைப் பொருளுக்கு விலை நிர்ணயம், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை போன்றவை குறித்து வரவு செலவு திட்டத்தில் எதுவும் இடம்பெறவில்லை.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து திட்டவட்டமான கருத்தை முன் வைக்காமல், நீட் தேர்வைத் திணித்தது போல புதிய கல்விக் கொள்கையையும் செயல்படுத்த அ.தி.மு.க அரசு முனைந்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் மூடப்பட்டு வரும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மீண்டும் இயங்குவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்பதை அ.தி.மு.க அரசு ஒரு பொருட்டாகக் கருதவில்லை. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயல் திட்டங்களோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லை.

மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க அரசு உயர்த்தி வருகிறது. இதற்காகவே டாஸ்மாக் மதுக்கடைகள் மேலும் மேலும் திறக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,293 டாஸ்மாக் மதுக்கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

"கடன் சுமையை அதிகரித்ததுதான் அ.தி.மு.க அரசின் சாதனை” - பட்ஜெட் குறித்து கொந்தளித்த வைகோ !

2016இல் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றபோது, டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்ற அறிவிப்பை எடப்பாடி அரசு குப்பைக் கூடையில் வீசி எறிந்துவிட்டது.

ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை எனும் பா.ஜ.க அரசின் திட்டத்தை அறிவித்திருப்பது பொதுவிநியோக முறையையே சீர்குலைத்துவிடும்.

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம், அயலகத் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கை அமைத்தல், பணிபுரியும் பெண்களுக்கு 13 இடங்களில் அரசு விடுதிகள், கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி போன்ற வரவேற்கத்தக்க அறிவிப்புகள் தவிர, தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் மொத்தத்தில் ஏமாற்றமே அளிக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories