தமிழ்நாடு

“ஏமாற்றம் தரும் பட்ஜெட் 2020 : வளர்ச்சிக்கான கூறுகள் எங்கே?” - வைகோவின் அடுக்கடுக்கான கேள்விகள்!

மத்திய பட்ஜெட்டில் வளர்ச்சி பணிகளுக்கான வரவேற்கத்தக்க கூறுகள் எதுவும் இல்லையென ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ஏமாற்றம் தரும் பட்ஜெட் 2020 : வளர்ச்சிக்கான கூறுகள் எங்கே?” - வைகோவின் அடுக்கடுக்கான கேள்விகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து ம.தி.மு.க பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரவு செலவுத் திட்ட உரையைத் துவங்கும்போது, பொருட்கள் மற்றும் சேவை வரி (GST) நாட்டை ஒற்றுமைப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால், பா.ஜ.க அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவை நாட்டைப் பிளவுபடுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.

2020-21 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காடு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு நிதி ஆண்டில் 4.8 விழுக்காடாக பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை.

வேளாண்துறை வளர்ச்சிக்காக 15 அம்சத் திட்டத்தைச் செயல்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில், விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான கடன் சுமைக்கு நிரந்தரத் தீர்வோ, வேளாண் கடன்கள் தள்ளுபடி அறிவிப்போ இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

“ஏமாற்றம் தரும் பட்ஜெட் 2020 : வளர்ச்சிக்கான கூறுகள் எங்கே?” - வைகோவின் அடுக்கடுக்கான கேள்விகள்!

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்று நிதி அமைச்சர் கூறுவது, கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. புதிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விரிவாக விவாதிக்காமல், நடப்பு ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவோம் என்ற அறிவிப்பு எதேச்சதிகாரமானது ஆகும்.

கல்வித் துறையில் அந்நிய நேரடி முதலிட்டுக்கு அனுமதி அளிப்பது நாட்டின் தற்சார்ப்பு சூழலை சீர்குலைத்து, உயர் கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சித் துறைகள் வணிகமயமாகும் ஆபத்து ஏற்படும். இரயில்வே துறையை முழுமையாக தனியார் மயமாக்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் 14 இலட்சம் ஊழியர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையான இரயில்வே துறையின் பொதுமக்கள் சேவை கடும் பாதிப்புக்கு உள்ளாகும். இரயில்வே பயணிகள் கட்டணம், பொருட்கள் போக்குவரத்துக் கட்டணம் கடுமையாக உயரும்.

“ஏமாற்றம் தரும் பட்ஜெட் 2020 : வளர்ச்சிக்கான கூறுகள் எங்கே?” - வைகோவின் அடுக்கடுக்கான கேள்விகள்!

இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ள ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) பங்குகளை தனியாருக்குத் தாரைவார்ப்பது என்ற முடிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதைப்போல லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டு 2.1 லட்சம் கோடி திரட்டப்படும் என்ற அறிவிப்பு பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்துவிடும்.

பா.ஜ.க அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் குறிப்பாக ஜி.எஸ்.டி., மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற காரணங்களால் நாட்டின் தொழில்துறை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதற்கு அரசின் பொருளாதாரக் கொள்கைகளே காரணம்.

இந்நிலையில், ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் சரிவு, உள்நாட்டில் உற்பத்திச் செலவு அதிகரிப்பு, ஏற்றுமதி சந்தை இழப்பு ஆகியவற்றைச் சீர் செய்ய தொழிலாளர் சட்டங்கள் உட்பட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு தொழிலாளர் நலனைப் பலிகொடுப்பதாகும்.

“ஏமாற்றம் தரும் பட்ஜெட் 2020 : வளர்ச்சிக்கான கூறுகள் எங்கே?” - வைகோவின் அடுக்கடுக்கான கேள்விகள்!

உற்பத்தித் தொழில் துறை சந்தித்து வரும் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை விகிதம் 7.7 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் உறுதியான திட்டம் ஏதும் இல்லை.

மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் வரும் பொது சுகாதாரத் துறையை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிப்பது மாநில உரிமைகளை நசுக்குவது ஆகும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை தனியார் நிறுவனங்களுடன் இணைத்து, புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மருத்துவக் கல்வி எட்டா உயரத்துக்கு சென்றுவிடும்.

தனிநபர் வருமான வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதும், ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பதைத் தவிர மத்திய வரவு செலவுத் திட்டத்தில் வரவேற்கத்தக்கக் கூறுகள் எதுவும் இல்லை. ” என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories