தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏவிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சுங்கச்சாவடி ஊழியர் : கரூர் அருகே பரபரப்பு!

கரூர் மாவட்ட சுங்கச் சாவடி ஊழியர்கள் தன்னை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏவிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சுங்கச்சாவடி ஊழியர் : கரூர் அருகே பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கரூர் மாவட்டம் மணவாசி டோல்கேட் வழியாக ஈரோடுக்கு காரில் சென்றுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி. அப்போது சுங்கக் கட்டணம் செலுத்தக்கோரி அவரிடம் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் வகையில் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாலபாரதி, “திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் மணவாசி சுங்கச்சாவடி உள்ளது. அங்கு எனது கார் வந்தவுடன், எனது அனுமதி சீட்டினை காட்டியபோது, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர். அதோடு எங்களது டிரைவரிடம் அவர்கள் மரியாதைக்குறைவாக பேசினார்கள்.

இதைத்தொடர்ந்து எனது டிரைவர் காரை எடுக்கமுடியாது எனக் கூறினார். அப்போது, சுங்கச்சாவடி அலுவலகத்தில் இருந்து இரட்டைக்குழல் துப்பாக்கியுடன் வந்த ஒருவர் எனது கார் முன் நின்றார். அது ஏதோ மிரட்டல் தொணியில் இருந்தது. அந்த துப்பாக்கியுடன் வந்தவர் கன் மேன் என கூறினர்.

‘கன் மேன்’ பணத்தை எடுத்து செல்லும் போது மட்டுமே பாதுகாப்பு அளிக்கவேண்டும். ஆனால், சுங்க வரி செய்யும் இடத்திற்கு வருகிறார். இதற்கு முறையாக அனுமதி பெற்றுள்ளனரா என்பதும் தெரியவில்லை. சுங்கசாவடிகளில் சமூக விரோதிகளை பயங்கர ஆயுதங்களுடன் உட்கார வைத்துள்ளனர்.

முன்னாள் எம்.எல்.ஏவிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சுங்கச்சாவடி ஊழியர் : கரூர் அருகே பரபரப்பு!

அவர்களை யாராவது கேள்வி கேட்டால் பணத்தை கொள்ளையடிக்க வந்ததாகக் கூறி சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என நினைக்கிறேன். தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் இந்த சுங்கச்சாவடிகள் உள்ளனவா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிப்போம். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நுழைய பல்வேறு சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. வடமாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் சுங்கச்சாவடிகள் இல்லை. கேரளாவிலும் இல்லை. எனவே, தமிழக அரசும் சுங்கசாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என சி.பி.எம் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், இப்பிரச்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தலையிட்டு துப்பாக்கி வைத்திருக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது என விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories