தமிழ்நாடு

ஹிஜாப்பை கழட்ட சொன்ன பாதுகாப்பு அதிகாரிகள்... எதிர்த்துப் பேசி குடியரசுத் தலைவர் விழாவை புறக்கணித்த மாணவி

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களுக்கு ஆதரவாக, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவி ஒருவர் தங்கப் பதக்கத்தை வாங்க மறுத்துள்ளார்.

ஹிஜாப்பை கழட்ட சொன்ன பாதுகாப்பு அதிகாரிகள்... எதிர்த்துப் பேசி குடியரசுத் தலைவர் விழாவை புறக்கணித்த மாணவி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி மாநில மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா, இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் 205 ஆராய்ச்சி மாணவர்களுக்கும், பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள் 117 பேருக்கும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவருக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, மாணவர்கள் பலத்த சோதனைக்குப் பிறகே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது, கேரளாவைச் சேர்ந்த ரபிஹா என்ற மாணவியிடம் அவரது தலையில் அணிந்திருந்த ஹிஜாப்பை(முஸ்லிம் மரபு உடை) அகற்றும் படி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு மாணவி ரபிஹா மறுப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து அந்த மாணவியை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியே அமர வைத்தனர். குடியரசுத் தலைவர் அரங்கை விட்டு வெளியேறிய பிறகே, மாணவி ரபிஹா உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதக்கத்தைப் பெற்றுகொள்ளுமாறு மேடையில் அழைக்கப்பட்ட போது, மேடைக்குச் சென்று தனக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கத்தை புறக்கணிப்பதாக தெரிவித்து, பட்டத்தை மட்டும் பெற்றுக்கொண்டார். மாணவி ரபிஹா பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றவர்.

அவர் தங்கப் பதக்கத்தை வேண்டாம் என மறுத்து வெறியேறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின்னர் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ’தங்கப்பதக்கம்’ வென்ற கார்த்திகா என்ற மாணவி, “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் நான் எதிர்க்கிறேன்; பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதன் மூலம் தான் நான் என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்யமுடியும்.இந்த மசோதாவை சட்டமாக்கிய குடியரசுத் தலைவரிடம் இருந்து பட்டத்தை பெற நான் விரும்பவில்லை” என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories