தமிழ்நாடு

காஞ்சிபுரம் அருகே இளம்பெண் ‘மர்ம மரணம்’ - கூட்டு பாலியல் வல்லுறவு செய்து தூக்கில் தொங்கவிட்டதாக புகார்!

காஞ்சிபுரம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இருந்திருக்கலாம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே இளம்பெண் ‘மர்ம மரணம்’ - கூட்டு பாலியல் வல்லுறவு செய்து தூக்கில் தொங்கவிட்டதாக புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காஞ்சிபுரம் அடுத்த ஆன்டி சிறுவள்ளூர் பகுதியில் வசிக்கும் பூபதி என்பவரின் மகளான ரோஜா (19) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். காரை கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் ராஜேஷ் என்பவரும், ரோஜாவும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ராஜேஷூக்கு ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அவரை பிரிந்து சென்றுள்ளார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷூம், ரோஜாவும் காதலித்து வந்த நிலையில், ரோஜா கர்ப்பமானதாக தெரிகிறது.

இதனால், தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளுமாறு ராஜேஷை, ரோஜா வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில்தான், திடீரென ரோஜா மாயமாகியுள்ளார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவரது உறவினர்கள் காணவில்லை எனத் தேடி வந்தனர்.

இதையடுத்து, ரோஜாவின் உறவினர்கள் ரோஜாவை பல இடங்களிலும் தேடி கிடைக்காததால் ராஜேஷ் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளனர். இதையடுத்து ராஜேஷ், ரோஜாவின் உறவினர் வீட்டுக்கு போன் செய்து, ரோஜா தன்னுடன்தான் இருப்பதாகவும், அவளை தான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றும் கூறியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் தான், அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். ரோஜா சடலமாகக் கிடப்பதைக் கண்டவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த இளம்பெண் ரோஜாவின் சாவில் மர்மம் இருக்கிறது என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ரோஜாவின் உடல் முழுவதும் சிகரெட்டால் சுடப்பட்ட தழும்புகளும் காயங்களும் இருப்பதால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ராஜேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தினர் மற்றும் ரோஜாவின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மர்ம மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories