தமிழ்நாடு

“இடைத்தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி முழக்கம் கேட்கட்டும்” - கி.வீரமணி வேண்டுகோள்!

இடைத்தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்குப் பணியாற்றுமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அக்கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

“இடைத்தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி முழக்கம் கேட்கட்டும்” - கி.வீரமணி வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற திராவிடர் கழகத் தொண்டர்கள் உழைக்குமாறு அறிவுறுத்தி அக்கட்சியின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“நடக்கவிருக்கும் இடைத்தேர்தல்களில் தி.மு.க. - காங்கிரஸை வெற்றியடையச் செய்வீர்!

சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமை, மொழித் திணிப்பு, புதிய கல்வி, பொருளாதார நிலை - இவற்றின் அடிப்படையில் பா.ஜ.க அணியைத் தோற்கடிப்பீர்!

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டியில் தி.மு.க.வும் - அ.தி.மு.க.வும், நாங்குனேரியில் காங்கிரஸும் - அ.தி.மு.கவும், புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகரில் காங்கிரசும் - என்.ஆர்.காங்கிரஸும் போட்டியிடும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது (21.10.2019).

பா.ஜ.கவின் தொங்கு சதைகள்

இந்த மூன்று தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டியது தமிழின மக்களின் முதல் கடமையாகும்.

பா.ஜ.கவின் ஆட்சியைப் பொறுத்தவரையில் பச்சைப் பார்ப்பன - சனாதன - மதவெறி கொண்ட கட்சி - ஆட்சி என்பதற்கு மிகப்பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே ஆணி அடித்ததுபோல வரையறுத்துச் சொல்லப்பட்ட சமூகநீதி, மதச்சார்பின்மையைப் பகிரங்கமாகக் குழிதோண்டிப் புதைக்கும் ஓர் ஆட்சி - பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சி இது என்பது நாடறிந்த உண்மையாகும்.

மேற்கண்ட தொகுதிகளில் நேரடியாக பா.ஜ.க போட்டி போடாவிட்டாலும், பா.ஜ.கவின் தொங்கு சதைகளாகக் கூட்டணி வைத்துக்கொண்டதன் மூலம் மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வித் திட்டம், பொருளாதார வீழ்ச்சி இவைகளுக்குச் சற்றும் தயங்காமல், நிதானிக்காமல் தோள் கொடுப்பதிலும், பின்பாட்டுப் பாடுவதிலும் அரசனை விஞ்சிய விசுவாசிகளாக இக்கட்சிகள் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு முன்வரிசையில் நிற்கக் கூடியவையே!

தமிழக அமைச்சரின் பேட்டி

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.கவுடன் கூட்டணி தொடரும் என்று நேற்றுகூட உறுதியுடன் கூறியுள்ளார். அண்ணாவின் பெயரையும், ‘‘திராவிட’’ என்ற இன பண்பாட்டுக் குறியீடையும் கொண்டுள்ள அண்ணா தி.மு.க. இந்த இரு சித்தாந்தங்களுக்கு முற்றிலும் முரணாக பா.ஜ.கவிடம் சரணாகதி அடைந்துள்ளது வேதனைக்குரியதே!

பெரியார் மண், திராவிடப் பூமி என்பதை நிரூபிப்பீர்!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளர்களும், புதுச்சேரி மாநில வாக்காளர்களும் மதவாத சக்திகளுக்குத் துணைபோகும் சுற்றுக் கிரகங்களுக்கு வட்டியும் முதலுமாக நல்லதோர் பாடத்தைக் கற்பித்ததுபோலவே நடக்கவிருக்கும் மூன்று சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் சமூகநீதி, மதச்சார்பற்ற அணியில் வலிமையாகத் தடம் பதித்துள்ள தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்குப் பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச் செய்வதன் மூலம் இது பெரியார் மண், திராவிடப் பூமி என்பதை நிலை நாட்டி, தமிழர்களின் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி உணர்வை மீண்டும் நிரூபிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான பாடம்

இந்த இடைத்தேர்தலால் ஆட்சி மாற்றம் உடனடியாக ஏற்படப் போவதில்லை என்றாலும், மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை வாக்காளர்கள் தெரிவிப்பது மிக முக்கிய கடமையாகும்.

இவற்றில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும்கூட, ‘பார்த்தீர்களா, பார்த்தீர்களா!’ எங்கள் கொள்கைக்கும், ஆட்சியின் சிறப்புக்கும் மக்கள் ஆதரவு தெரிவித்துவிட்டனர் என்று கூறி, மேலும் மக்கள் விரோத மதவாத ஆட்சிக்குக் காப்பு கட்டிவிடுவார்கள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

நடைபெற உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி முழக்கம் கேட்கட்டும்! கேட்கட்டும்!! கழகத் தோழர்கள் இந்த வெற்றிக்கு உழைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.”

banner

Related Stories

Related Stories