தமிழ்நாடு

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன” - சிபிஐ தகவல்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் விரிவான விசாரணை நடந்து வருவதாகவும், துப்பாக்கிச்சூடு தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதாகவும் சிபிஐ தரப்பு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன” - சிபிஐ தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ், “மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில், ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும், தமிழக அரசு, எந்த முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானதால் ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆகவேண்டும்” என வாதிட்டார்.

இதையடுத்து, இன்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை குறித்த ஒரு பக்க குறிப்பு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக காவல்துறை பதிவுசெய்த வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, அதுவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனைகள், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் ஆவணங்களும், சிசிடிவி காட்சிகளும் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சிசிடிவி பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் செப்டம்பர் 16ம் தேதி விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உறுதியாக அமல்படுத்தப்படும் எனவும் சிபிஐ தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories