தமிழ்நாடு

2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால குளியல் தொட்டி : கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிப்பு!

கீழடியில் அகழாய்வின் போது 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய செங்கலால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால குளியல் தொட்டி : கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், கடந்த 2014 முதல் 2017-ம் ஆண்டு வரை, இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி துறையினர் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர். அதில் உறை கிணறுகள், செங்கல் கட்டடங்கள், பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தந்தத்தால் ஆன பொருள்கள் உள்பட 7,818 தொல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த 2018 -ல் 4ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. அப்போது பாசி மணிகள், தங்கத்தால் ஆன பொருள்கள், மான் கொம்பு, இரும்புக் கருவிகள் உள்பட 5,820 தொல்பொருள்கள் கிடைத்தன.

அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் செயல்பட்டு வரும் பீட்டா ஆய்வகம், கீழடி பகுதியில் கிடைத்த தொல்பொருள்களை ஆய்வு செய்ததில், இவை 2,500 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்தது.

தற்போது, கீழடி கிராமத்தில் 5-ஆம் கட்ட அகழாய்வு, கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வரும் இப்பணிக்காக, 5 பேரின் நிலங்களில் 27 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இதுவரை பானைகள், ஓடுகள், அழகு சாதனப் பொருள்கள், உறைகிணறு, பெரிய செங்கல் சுவர், மனித எலும்புக் துண்டுகள், எலும்பாலான எழுத்தாணி என 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. சமீபத்தில் விவசாயி முருகேசன் என்பவரது நிலத்தில் 8 உறைகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது.

இதனிடையே, நேற்று முருகேசனின் நிலத்தில் அகழாய்வுப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. இது 3 அடி உயரம், 3 அடி நீளம், இரண்டரை அடி அகலத்தில் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

தொட்டியின் உள்புறத்தின் அடிப்பகுதியில் கனமான செங்கற்கள் வைத்து மண் பூச்சு கொண்ட தளமாக அமைத்துள்ளனர். இதன்மூலம் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் கட்டிடக் கலையில் சிறந்து விளங்கினார்கள் என்பது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories