தமிழ்நாடு

பெண்கள் தொடர்பான வழக்குகளை ‘இந்த’ நீதிபதி விசாரிக்கக் கூடாது : போர்க்கொடி தூக்கிய வழக்கறிஞர்கள்

பெண்கள் மற்றும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை இனி நீதிபதி வைத்தியநாதன் முன்பு பட்டியலிட கூடாது என தலைமை நீதிபதியிடம் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் 64 பேர் மனு அளித்தனர்.

பெண்கள் தொடர்பான வழக்குகளை ‘இந்த’ நீதிபதி விசாரிக்கக் கூடாது : போர்க்கொடி தூக்கிய வழக்கறிஞர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சமீபத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பான நடவடிக்கையை எதிர்த்து பேராசிரியர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக பெற்றோர்கள் கருதுவதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் கருத்து தெரிவித்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீதிபதி வைத்தியநாதனின் இந்த கருத்துக்களுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இனி பெண்கள் மற்றும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் முன்பு பட்டியலிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையில் 64 வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் மனு அளித்துள்ளனர்.

அதில், கடந்த 2014ம் ஆண்டு மோசடி குற்றங்களில் ஈடுபடுவோரின் விரல்களை வெட்ட வேண்டும் எனவும் 2015ம் ஆண்டு கோயில்களில் ஆடை கட்டுப்பாடு விதித்தது எனவும் வழக்கிற்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை தெரிவிப்பது நீதிபதி வைத்தியநாதனுக்கு புதிதல்ல என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கிற்கு சம்பந்தமில்லாமலும் புள்ளிவிவர ஆதாரங்கள் இல்லாமலும் நீதிபதியின் இது போன்ற கருத்துக்கள் சமூதாயத்தில் மத ரீதியான வெறுப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்ல, நீதிபதி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதும் உறுதியாகிறது.

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மத மாற்றத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்த கருத்து, கிறிஸ்தவர்கள் மீதான அவருடைய தனிப்பட்ட வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.

தங்களுடைய சொந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் தளமாக நீதிமன்றங்களை நீதிபதிகள் பயன்படுத்தி கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ள நிலையில் நீதிபதி வைத்தியநாதன் மட்டுமல்லாமல் நீதிபதி கிருபாகரனும் இதே போன்று வழக்கிற்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

'பெண்கள் வெளியே சென்று சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் தான் கள்ள தொடர்புகள் அதிகரித்தது' என தெரிவித்தது, ' குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களின் ஆணுறுப்பைத் துண்டிக்க வேண்டும்' எனவும் சம்பந்தமில்லாத வழக்குகளில் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்ததும் பின்னர், அதனை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்ததையும் வழக்கறிஞர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிபதிக்கு எதிராக வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளித்துள்ளது நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories