தமிழ்நாடு

முகிலனைக் கடத்தி சித்ரவதை செய்தது போலிஸா? இல்லை இது ஒரு நாடகமா ? : விடையில்லா கேள்விகள்

சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், 140 நாட்களை கடந்து அவர் மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. 

முகிலனைக் கடத்தி சித்ரவதை செய்தது போலிஸா? இல்லை இது ஒரு நாடகமா ? : விடையில்லா கேள்விகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

'முகிலன் எங்கே' என்ற வாசகம்தான் கடந்த 4 மாதங்களாக தமிழகம் முழுவதும் ஒலித்தது. முகிலனை உயிரோடு மீட்கவேண்டும். அவர் உயிரோடுதான் இருக்கிறாரா? அவரை கடத்தியது யார்? என்ன காரணம் ? என்கிற கேள்விகள் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் வலுவாக எழுந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

சமூக செயற்பாட்டாளரான முகிலன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மணல் கொள்ளை, அணுஉலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டுப் போராட்டம் என தொடர்ந்து சூழலியல் போராட்டங்களில் களத்தி ல் முன் நின்றவர். அவர் போராட்டம் பெரும்பாலும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு எதிராகவே அமைந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இதனால் ஆத்திரமடைந்த அதிகார வர்க்கம் அவர் குரலை ஒடுக்க, குண்டர் சட்டம் உள்ளிட்ட பல வழக்குகள் மூலம், சிறையில் பல முறை அடைத்தாலும், அவர் தனது போராட்டத்தை நிறுத்தவே இல்லை. இதனால் தான் அவர் காணாமல் போனது முதல் மீண்டும் மக்கள் தோன்றிய நாள் வரை அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவுக்குரல் எழுப்பியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி காணாமல் போகும் முன்பு ஸ்டெர்லைட் என்ற கார்ப்ரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக, அரசாங்க அதிகாரிகள், காவல்துறையினர் எவ்வாறு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், திட்டமிட்ட வன்முறை செயலில் ஈடுபட்டார்கள் என்பதை அம்பலப்படுத்தினார். இதற்கு அடுத்த நாள் அவர் காணாமல் போனார்.

இதில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இவரின் செயலால் ஆத்திரமடைந்து வரை பழிவாங்கும் நோக்கத்தோடு ஆளும் வர்க்கம் செய்லபடுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது.

முகிலன் இன்று, தாடி மீசையுடன் தளர்ந்த குரலில், ஆளே தெரியாத தோற்றத்தில் முற்றிலும் வேறு ஒருவராக மாற்றப்பட்டிருப்பதை பார்க்கும் அனைவரும் ஒரு நொடி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

முகிலன் மனைவி பூங்கொடியிடம், மன்னார்குடி ரயிலில் இருந்து ஆந்திரா வந்த முகிலன், அங்கு ரயில் தண்டவாளத்தில் குதிப்பது போல் நின்று கொண்டிருந்தார். அப்போதுதான் அவரை நாங்கள் கைது செய்தோம் என்று ஆந்திர போலீசார் கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கு முன்னதாக, அவரது நண்பர் சண்முகம் முகிலனை திருப்பதி ரயில் நிலையத்தில் பார்த்ததாகவும் இதனையடுத்து மனைவி பூங்கொடிக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியானதை அடுத்தே இனியும் முகிலனை மறைத்து வைத்திருக்க முடியாது என்று அறிந்த போலிஸார், முகிலனை கைது செய்தது போல நாடகம் ஆடுகின்றனர் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

முகிலன் இவ்வளவு நாள் எங்கிருந்தார், எதற்காக மன்னார்குடியில் இருந்து, திருப்பதிக்கு சென்றுள்ளார். உடல் மெலிந்து, பலவீனமாக இருப்பதற்கு காரணம் என்ன? அவரை கடத்தி வைத்து சித்ரவதை செய்தார்களா? அவரை கடத்தி வைத்திருந்தால் கடத்தியவர்கள் யார்? ஏன் இவ்வளவு நாள் வெளிவராமல் இப்போது முகிலன் வெளிவந்துள்ளார் என ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளது.

இதைடுத்து காட்பாடி ரயில் நிலையத்தில் காவல்துறையின் கடும் கெடுபிடி மத்தியில் பேசும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, தன்னை மீறி அவர் குரல் எழுப்பு வீடியோ வெளிவந்துள்ளது. அதில், ""என்னை கடத்திட்டு போறாங்க.. என்னை மனநலம் பாதிக்கப்பட வைத்துவிட்டனர்" என்று ஆதங்க குரலில், குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த இரண்டு வரிகள் மேற்கூறிய சந்தேகங்களை வலுப்படுத்தும் வகையில் உள்ளது. அவரை கடத்தி, உளவியல் ரீதியாக மனநலம் பாதிப்படையச் செய்ய எவ்வளவு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

முகிலனை உயிரோடு மீண்டு வந்தது ஆறுதலுக்குரிய விஷயம் என்றாலும், நாம் மேலே முன்வைத்த கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டியுள்ளது. முகிலன் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், நீதிமன்றத்தில் இதற்கான விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories