தமிழ்நாடு

போக்குவரத்து காவலர்கள்  எனும் ‘வசூல் ராஜா’க்களின் வன்முறை வெறியாட்டம் !

லஞ்சம் கொடுத்து எந்த விதிமுறை மீறலில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என பொதுமக்களிடம் ஒரு தவறான மனப்பான்மை வளர்வதற்கு போக்குவரத்து காவலர்களின் லஞ்சத்தில் ஊறிய இந்த மனநிலையே காரணம்.

போக்குவரத்து காவலர்கள்  எனும் ‘வசூல் ராஜா’க்களின் வன்முறை வெறியாட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காவல்துறை மக்களின் நண்பன் என்ற வாசகம் என்னவோ மூலைக்கு மூலை எழுதி வைக்கபட்டிருக்கிறது. அதை காவல்துறையினர் எப்போதாவது படித்திருக்கிறார்களா என்பது தெரியாது. அதைப் படிக்கும் பொதுமக்களும் ஒரு கேலியான வேதனைச் சிரிப்புடன் கடந்துபோகிறார்கள். பொது இடங்களில் காவல்துறையினரின் அராஜகம் என்பது நாம் பொதுவாக காணும் காட்சி என்றாலும் அதிலும் போக்குவரத்து காவலர்களின் அத்துமீறல்கள் என்பது அட்டூழியம்.

போக்குவரத்துக் காவலர்களால் தாக்கப்பட்டு தமிழ்நாட்டில் நடந்த உயிரிழப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. காவல்துறையினர் ஏதேனும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டுபவர் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போனால் துரத்திச் சென்று அடிப்பது, அல்லது ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தின் சக்கரங்களில் லத்தியை திணித்து வண்டி ஓட்டுபவரை நிலைதடுமாறி கீழே விழச்செய்வது என பல கொடூரமான் செயல்களில் ஈடுபடுவதை நாம் அறிவோம்.

வாகனத்தின் பதிவு என்ணை வைத்தோ சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்தோ நிற்காமல் சென்ற வாகன ஓட்டியை கண்டிபிடிப்பதோ வழக்குப் பதிவு செய்வதோ மிகவும் எளிமையான வேலை. பிறகு ஏன் இந்த ஆத்திரம்? எலியை வேட்டையாடும் பூனையின் அதே ஆத்திரம்தான்.

சென்னை அசோக் நகரில், 2016 ஜனவரியில், போக்குவரத்து காவலர்கள் விரட்டியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர், சாலைத் தடுப்பில் மோதி பலியானார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக் காவலர்களுக்கும் இடையே, கடும் மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பின், இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்ப்பதற்காக, போக்குவரத்து போலீசாருக்கு, ஒரு மாத காலம், மனவள பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், அதனால் எந்தப் பயனும் ஏற்பட்டதாக‌த் தெரியவில்லை. போக்குவரத்துக் காவலர்களின் அராஜகங்கள் தமிழகமெங்கும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

போக்குவரத்து காவலர்கள்  எனும் ‘வசூல் ராஜா’க்களின் வன்முறை வெறியாட்டம் !

போக்குவரத்து சட்டங்களை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினர் அந்தச் சட்டங்களை தங்களுக்கான பணம் காய்க்கும் மரங்களாக மாற்றிவிட்டனர் என்பதுதான் உண்மை. சாலைகளில் வாகனம் ஓட்டவே அஞ்சும் அளவிற்கு போகுவரத்து காவலர்களின் வழிப்பறிகளும் அத்துமீறல்களும் எல்லை மீறிச் செல்கின்றன. அவர்களின் பிரதான இலக்குகள் இருசக்கர வாககன ஓட்டிகளும் லாரி ஓட்டுனர்களும்தான். ஏதேனும் ஒரு விதியைக் காட்டி அவர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பது போக்குவரத்து காவலர்களின் கூடுதல் தொழிலாகவும் உபரி வருமானமாகவும் மாறிவிட்டது.

இருசக்கர வாகன‌ ஓட்டிகளை சாலையோரம் நிறுத்திவைத்து வாகன சாவியை பிடுங்கிக்கொண்டு நூறு இருநூறு என நச்சரிப்பது மூலைக்கு மூலை காணும் காட்சி. போதிய ஆவணங்கள் இல்லாவிட்டாலோ அல்லது விதிமுறை மீறலில் ஈடுபட்டாலோ அதற்கான அபராதத்தை சட்டப்படி விதிப்பது மட்டுமே போக்குவரத்து காவலர்களின் பணி.

ஆனால் அபராதத் தொகையை சட்டப்படி வசூலிப்பதற்குப் பதில் வாகன ஓட்டிகளிடம் பேரம் பேசி பாதிக்குப் பாதியாவது பணம் கறந்து தங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொள்வது நடைமுறையாக மாறிவிட்டது. இதற்கு மசியாதவர்களை கேவலமாக வார்த்தைகளில் திட்டி அவமானப்படுத்துவது, தாக்குவது, வாகன‌ங்களைப் பறிமுதல் செய்வது என பல மனித உரிமை மீறல்களில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபடுகின்றனர். குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களிடம் கூட நூறு இருநூறு கறந்துகொண்டு அதே குடிபோதையில் வழி அனுப்பி வைத்துவிடும் காட்சியையையும் அவ்வப்போது காணலாம்.

போக்குவரத்து காவலர்கள்  எனும் ‘வசூல் ராஜா’க்களின் வன்முறை வெறியாட்டம் !

சென்ற ஆண்டு போக்குவரத்து காவலர்களின் அராஜகத்திற்கு உதாரணமாக மூன்று கொடூர சம்பவங்கள் அரங்கேறின. 2018 ஜனவரியில், பழைய மகாபலிபுரம் சாலையில் சீட் பெல்ட் அணியவில்லை என, கார் ஓட்டுனர் மணிகண்டனை, போக்குவரத்து காவலர்கள் அசிங்கமாக திட்டியதுடன், அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மணிகண்டன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். சென்ற ஆண்டில்தான் திருச்சி திருவெறும்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மட் அணியாமல் வந்த தம்பதிகள் வாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால் சாலையில் விழுந்த கர்ப்பிணி பெண் உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே போல சென்னை தியாகராய நகரில் தன் தாய் மற்றும் தங்கையுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பிராகாஷ் என்ற இளைஞர் தலைக்கவசம் அணியவில்லை என்பதால் போக்குவரத்துத்துறை காவலர்கள் அந்த இளைஞனைக் கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கும் கொடூர காட்சி காட்சியை காணொளியாகக் கண்டோம்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போக்குவரத்து காவலர்களின் கொடூர நடத்தையால் மனம் உடைந்து ஒரு கால் டாக்ஸி ஓட்டுனர் தற்கொலை செய்துகொண்ட அவலமும் அரங்கேறியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த ராஜேஷ், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 25-ம் தேதி மறைமலைநகரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக திட்டியதால்தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அதிவர்லைகளை ஏற்படுத்தியது.

போக்குவரத்து காவலர்கள்  எனும் ‘வசூல் ராஜா’க்களின் வன்முறை வெறியாட்டம் !

பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை போக்குவரத்து காவலர்கள் கைது செய்வதாக அவ்வபோது செய்திகள் வருவதுண்டு. விதிகளை மீறி பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மேல் வழக்கு பதிவு செய்வதில் தவறில்லை. ஆனால் முறையாக விதிகளைப் பின் பற்றி கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் தாங்கள் காவல்துறையினரால் தேவையில்லாமல் தும்புறுத்தபடுவதாக கூறுகின்றனர்.

நெரிசலான போக்குவரத்து மிகுந்த காலகட்டத்தில் கடும் வெய்யிலிலும் மழையிலும் பணியாற்றும் போக்குவரத்து காவல்ரகளின் பணி கடினமானது. போதுமான போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் அவர்களின் பணிச்சுமை கடுமையாக அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது எதுவுமே போக்குவரத்து காவலர்களின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்திவிடாது.

ஹெல்மெட் அணிவது உட்பட எந்த புதிய சட்டம் வந்தாலும் அதை போக்குவரத்து காவலர்கள் தங்கள் வருமானத்திற்கான வழிவகையாக மட்டுமே காண்கின்றனர். போக்குவரத்து காவலர்களின் இந்த அத்துமீறிய நடவடிக்கைகளால் போக்குவரத்து காவலர்களை பொதுமக்கள் தாக்க முயற்சிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறிவருகின்றன. சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே அதை மீறும்போது மக்களும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள முயற்சிப்பதன் அடையாளம் இது.

பொதுமக்கள் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் சட்டத்தின் பாதுகாவலர்களும் சட்டப்படி நடந்துகொள்வதும் முக்கியம். பொதுமக்களுக்கு தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு தேவை. அத்துமீறி நடக்கும் போக்குவரத்து காவலர்கள் தொடர்பான புகார்களை விசாரிப்பதில் காவல்துறையும் நீதிமன்றமும் அக்கறையுடன் செயல்பட்டால்தான் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வு கிடைக்கும்.

அதே போல போக்குவரத்து காவலர்களுக்கு சிறிய லஞ்சம் கொடுத்து எந்த விதிமுறை மீறலில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என பொதுமக்களிடம் ஒரு தவறான மனப்பான்மை வளர்வதற்கும் போக்குவரத்து காவலர்களின் லஞ்சத்தில் ஊறிய இந்த அடாவடி மனநிலையே காரணமாக அமைந்துவிடுகிறது.

பயிரை மேயும் வேலிகளை கட்டுபடுத்தாவிட்டால் அராஜகமே அன்றாட வாழ்வாகிவிடும்.

banner

Related Stories

Related Stories