தமிழ்நாடு

தண்ணீரை சேமிக்க அ.தி.மு.க அரசிடம் எந்தவொரு புதிய திட்டமும் இல்லை : துரைமுருகன் சாடல்!

8 ஆண்டுகளில் ஒரு சொட்டுத் தண்ணீரை கூட சேமிக்க எந்தவொரு புதிய திட்டத்தையும் அ.தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

தண்ணீரை சேமிக்க அ.தி.மு.க அரசிடம் எந்தவொரு புதிய திட்டமும் இல்லை : துரைமுருகன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வேலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் காத்தவராயன் வெற்றியடைந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தி.மு.க பொருளாளர் துரைமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன் கூறியதாவது, “நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.கவில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் நிறைய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும் குடிநீர் பிரச்னை அதிகமாக இருக்கிறது அதில் கூட அவர்களினால் கவனம் செலுத்த முடியவில்லை. குடிநீர் பிரச்னைகளை சரிசெய்ய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தைக் கூட்ட வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஆளும் அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

சென்னை மாநகராட்சிக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த ஏரிகள் அனைத்தும் முற்றிலும் வறண்டுபோயுள்ளன. இதுபோல தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது 1983ல் அப்போதைய அரசு ஈரோடு, திருச்சி போன்ற மாவட்டங்களில் ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு வர ஏற்பாடுகள் செய்தது. ஆந்திராவிடம் பேசி தண்ணீரைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கலாம். அதையும் இந்த அரசு முயற்சி செய்யவில்லை.

தண்ணீரை சேமிக்க அ.தி.மு.க அரசிடம் எந்தவொரு புதிய திட்டமும் இல்லை : துரைமுருகன் சாடல்!

இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதில், பாறைகள் வெட்டிஎடுத்த பின்பு கல்குவாரிகளில் மழை காலங்களில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரை எடுத்து மக்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.

பல ஆண்டுகளாக இந்த தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது அதனை முறையாக பராமரிக்காமல் மக்களுக்கு விநியோகம் செய்கின்றனர். இந்தத் தண்ணீர் விஷத் தன்மையுடன் இருக்கும் என அவர் தெரிவித்தார். மேலும் இந்த 8 ஆண்டுகளில் ஒரு சொட்டுத் தண்ணீரை சேமிக்கக்கூட ஒரு புதிய திட்டத்தை இந்த ஆளும் அ.தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.

இந்த பிரச்னைகளை மக்கள் நினைவில் கொண்டுள்ளனர். எனவே, வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க அனைத்து இடங்களிலும் வெற்றியடையும் என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories