தமிழ்நாடு

நெல்லை இளைஞர் ஆதிக்க சாதியினரால் படுகொலை : சிபிஐஎம் கடும் கண்டனம்!

நெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நேற்றிலிருந்து வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை இளைஞர் ஆதிக்க சாதியினரால் படுகொலை : சிபிஐஎம் கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நெல்லை தச்சநல்லூர் அருகே கரையிருப்பு பகுதியை சேர்ந்த அசோக் என்ற 24 வயது இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளராக உள்ளார்.

20 நாட்களுக்கு முன்னர் சாலையில் நடந்து சென்ற அசோக்கின் தாயார் மீது அதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதி சமூகத்தை சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டி கேட்கச் சென்ற அசோக்கின் மீதும் அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தகராறின் போது அசோக்கையும் அவரது தாயாரையும் சாதியின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியுள்ளனர்.

இதனையடுத்தது அசோக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசாரோ இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தின் மூலம் ஆதிக்க சாதி வெறியர்களால் அசோக் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் போலீசார் அலட்சியமாக நடந்து கொண்டதாக வாலிபர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நெல்லை இளைஞர் ஆதிக்க சாதியினரால் படுகொலை : சிபிஐஎம் கடும் கண்டனம்!

இதையடுத்து புதன்கிழமை இரவு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அசோக்குமாரை அங்கு வந்த ஆதிக்க சாதிவெறி கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அசோக் தலையில் கல்லைப்போட்டு உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளது.

தகவல் அறிந்து அசோக்கின் உறவினர்கள் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கட்சி நிர்வாகிகள் பலர் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அசோக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்த கொலை சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிஷ்ணன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நெல்லை இளைஞர் ஆதிக்க சாதியினரால் படுகொலை : சிபிஐஎம் கடும் கண்டனம்!

அதில் அவர் கூறியுள்ளதாவது, "இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினருமான தோழர் அசோக் (வயது 24) அந்த கிராமத்தில் உள்ள சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கரையிருப்பு கிராமத்தில் உள்ள தலித் மக்கள் தங்களது வேலை மற்றும் அன்றாடப் பணிகளுக்காக வேறு சமூக மக்கள் வசிக்கும் பொதுப்பாதை வழியாகவே செல்ல முடியும். அவ்வழியே செல்லும் தலித் மக்களை சில சாதி ஆணவம் கொண்ட வெறியர்கள் சாதிய ரீதியாக இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளன. இதனை தட்டிக் கேட்க முன்வருபவர்களை இடைமறித்து இழிவுபடுத்துவது, அச்சுறுத்தி தாக்குவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

நெல்லை இளைஞர் ஆதிக்க சாதியினரால் படுகொலை : சிபிஐஎம் கடும் கண்டனம்!

இந்நிலையில் தோழர் அசோக் அவ்வழியே தனது தாயாருடன் இரண்டு வாரங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது சில சாதிவெறி சமூக விரோத சக்திகளால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டும், புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நேற்று (12.06.2019) இரவு சுமார் 9.00 மணியளவில் தோழர் அசோக் வேலைக்கு செல்லும் போது, சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்கு காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணமாகும்.

தென்மாவட்டங்களில் இதுபோன்று தலித் மக்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் சாதிய வெறியர்களால் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது. அரசும், காவல்துறையும் இதனை தடுத்து நிறுத்தவும், சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காததனுடைய விளைவே இதுபோன்ற படுகொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

எனவே, தோழர் அசோக்கை படுகொலை செய்த கொலையாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, கொலைக்குற்றப் பிரிவுகளுடன் - எஸ்.சி., / எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளை இணைப்பது உள்ளிட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், படுகொலை செய்யப்பட்ட அசோக்கின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டுமெனவும், முன்னரே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தோழர் அசோக் படுகொலையை கண்டித்தும், சாதி வெறியர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திட வலியுறுத்தியும் அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக கண்டன இயக்கங்கள் நடத்திட வேண்டுமென கட்சி அணிகளை கேட்டுக் கொள்கிறது.

மேலும் ஒடுக்குமுறைகளை எதிர்த்து சமத்துவத்திற்காக குரல்கொடுக்கும் ஜனநாயக சக்திகள், தனிநபர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பினரையும் இந்த படுகொலைக்கு எதிராக கண்டனக் குரலெழுப்ப முன்வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories