
ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2026 தற்போது நடந்து வருகிறது. இதில் உலகில் பிரபலமான கால்பந்து அணிகள் பங்கேற்று கோப்பையை வெல்ல ஆர்வமாக விளையாடி வருகின்றனர். இதில் பல்வேறு ஆச்சரியமான நிகழ்வுகளும் நடந்தேறி வருகிறது. ஏனென்றால் கால்பந்து ஆட்டத்திற்கு ரசிகர்கள் அதிகம். தங்கள் நாட்டைச் சேர்ந்த அணி வெற்றி பெற வேண்டும் மிகவும் வித்தியாசமான வேண்டுதல்களில் ஈடுபடும் செய்தியெல்லாம் வரும். அதுபோன்றே தற்போது நடந்துள்ள நிகழ்வால் தங்கள் நாட்டிற்கான ரசிகர்களின் அளவிலா அன்பு வெளிப்பட்டுள்ளது.
கால்பந்து உலகக் கோப்பையில் மெக்சிகோ நாடு வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன், மெக்சிகோ சிட்டி கிறிஸ்தவ பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள கால்பந்து வீரரின் உடை அணிந்துள்ள ‘குழந்தை இயேசு சிலை’யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்தப் பாரம்பரியம் 1970ஆம் ஆண்டு மெக்சிகோ முதன்முறையாக உலகக் கோப்பையை நடத்திய காலத்தில் தொடங்கியது. இந்த ஆண்டு முதல் முறையாக ‘கால்பந்து குழந்தை இயேசு’ சிலை மெக்சிகோ சிட்டியின் முக்கிய பேராலயத்தில் வைக்கப்பட்டதால், உள்ளூர் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்களும் வந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மெக்சிகோவில் குழந்தை இயேசு சிலைகளுக்கு பல்வேறு உடைகள் அணிவிப்பது வழக்கமாக உள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக யாத்திரிகர் உடை, நல்ல உடல்நலத்திற்காக மருத்துவர் உடை போன்ற பல்வேறு வடிவங்களில் சிலைகள் அலங்கரிக்கப்படுகின்றன.

கால்பந்து உடை அணிவிக்கும் வழக்கம் 55 ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோ நகரின் ஏழை பகுதியான சான் மிகுவேல் ஆர்கான்ஜெல் தேவாலயத்தில் தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு புதிய பங்குத் தந்தை இந்த நடைமுறை மரியாதைக்குறைவானது எனக் கூறி அதற்கு தடை விதித்தார்.
இதனால் ரசிகர்களிடையே அதிருப்தி எழுந்ததுடன், இது மெக்சிகோ அணியின் அதிர்ஷ்டத்தை பாதிக்குமோ என்ற அச்சமும் உருவானது. இதையடுத்து மெக்சிகோ சிட்டி பெருநகர பேராலயம் ‘எல் ட்ரி’ என அழைக்கப்படும் மெக்சிகோ தேசிய கால்பந்து அணியின் சீருடையில் குழந்தை இயேசு சிலையை காட்சிக்கு வைத்துள்ளது.
“இது பேராலயத்தில் முதன்முறையாக வைக்கப்பட்டுள்ளது. மக்கள் தாமாகவே இதை விரும்பி கேட்டனர்,” என்று பேராலய அதிகாரி கேனன் மனுவேல் கொரால் கூறியுள்ளார்.
மெக்சிகோ ரசிகர்கள் மட்டுமின்றி, கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளின் ரசிகர்களும் தங்களது அணிகளின் வெற்றிக்காக இங்கு வந்து பிரார்த்தனை செய்து வருவதாக கூறிய அவர்,

உலகக் கோப்பை தொடர் முடியும் வரை இந்த சிலை பேராலய வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் காட்சிக்கு வைக்கப்படும். மெக்சிகோ அணியின் செயல்பாடு எப்படியிருந்தாலும் இந்த நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நிற ஜெர்சியும் பச்சை நிற ஷார்ட்ஸும் அணிந்திருந்த குழந்தை இயேசு சிலையுடன் அர்ஜென்டினா, கொலம்பியா, ஸ்பெயின், மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், தங்கள் அணியின் வெற்றிக்காக வேண்டுதலும் செய்தனர்.
எனினும், இந்த நடைமுறையை அனைவரும் வரவேற்கவில்லை. “ஒரு கத்தோலிக்கராக, குழந்தை இயேசு கால்பந்து உடையில் இருப்பதைப் பார்க்க எனக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இதை நான் முழுமையாக ஏற்கவில்லை,” என்று மெக்சிகோ ரசிகர் எலியாசர் மார்டினஸ் தெரிவித்துள்ளார்.
இது உலக நாடுகளிடையே கால்பந்தாட்டத்தின் மீது ஒவ்வொரு நாட்டு ரசிகர்களும் வைத்திருக்கும் அன்பையும், தங்கள் நாட்டின் மீது வைத்திருக்கும் அன்பையும் வெளிப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.






