
இந்தியா - நியூசிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று (ஜனவரி 21) மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் ரன் விவரம்:
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 10 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். இருப்பினும் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 35 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிராக அதிவேக அரை சதம் அடித்த ரோகித் சர்மா, கே.எல். ராகுல் சாதனையை அபிஷேக் ஷர்மா முறியடித்தார். அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 25 பந்துகளுக்கு கீழ் 8 முறை அரை சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையையும் அபிஷேக் ஷர்மா படைத்தார்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அபிஷேக் சர்மாவுக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக ரிங்கு சிங் 20 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் டெவன் கான்வே ரன் எதுவும் எடுக்காமலும், ராபின்சன் 21 ரன்னிலும் அவுட் ஆகினர்.
பின்னர் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த பிலிப்ஸ் எதிர்ப்பாராத விதமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் 6 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ஆட்டம் கைநழுவி சென்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில் அவரது விக்கெட் போனது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.
அதனை தொடர்ந்து வந்த மார்க் 39 ரன்களிலும் டேரி மிட்செல் 28 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா பந்துவீச்சாளர்கள் தரப்பில் வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் வகித்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நாளை (ஜனவரி 23) ராய்ப்பூரில் நடைபெற உள்ளது.
முதல் T20 போட்டியில் நியூசிலாந்து அணி தோற்றதால், 2வது போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் களமிறங்கும். இந்திய அணியும் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள உற்சாகத்தில் களமிறங்கி, தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.








