
நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஜன. 11ம் தேதி குஜராத் மாநிலம், வதோதராவில் இந்தியாவுக்கு எதிராக முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
முதல் இன்னிங்சில் ஆடிய நியூசிலாந்து அணி 300 ரன்கள் குவித்தது. 301 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 6 பந்துகளை மீதம் வைத்து 49வது ஓவரில் இலக்கை எட்டி, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், சேசிங்கின் இறுதிக் கட்ட ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா, பேட்டிங்கில் அதிரடியாக செயல்பட்டு 23 பந்துகளில், 29 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

விராட் கோலி (93), ரவீந்திர ஜடேஜா (4), ஸ்ரேயஸ் ஐயர் (49) ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், 6-வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலுடன் இணைந்து ஹர்ஷித் ராணா 37 ரன்கள் சேர்த்து அதிரடியாக ஆடினார். முன்னதாக பந்துவீச்சில் முக்கியமான கட்டத்தில் 2 விக்கெட்களை கைப்பற்றி ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கிய புள்ளியாக இருந்தார்.
இந்நிலையில், போட்டி முடிவடைந்த பின் பேசிய பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா. “இந்திய அணி நிர்வாகம் என்னை ஒரு ஆல்ரவுண்டராக வளர்க்க விரும்புகிறது. இதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். வலை பயிற்சியின் போது பேட்டிங்கிலும் அதிக கவனம் செலுத்துகிறேன். இதில் என் மீதான முழு நம்பிக்கையும் அடங்கி உள்ளது. ஆட்டத்தின்போது கே.எல்.ராகுல் மிகவும் உதவியாக இருந்தார். இதனாலேயே போட்டியில் முழு கவனத்தையும் செலுத்தி என்னால் ரன்கள் சேர்க்க முடிந்தது" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான், 8வது இடத்தில் ஆல்ரவுண்டராக பேட்டிங் செய்ய வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. வலைப்பயிற்சியின் போது பேட்டிங்கிற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க முடியுமோ அவ்வளவு நேரம் ஒதுக்கி சிறப்பு கவனம் செலுத்துகிறேன். தேவைப்படும் போதெல்லாம் கீழ் வரிசையில் களமிறங்கி அணிக்காக 30 முதல் 40 ரன்கள் எடுக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். அதை என்னால் செய்ய முடியும் என்று அணி நிர்வாகமும் என்னை நம்புகிறது.
விராட் கோலி தொடர்ந்து களத்தில் இருந்திருந்தால் ஆட்டம் விரைவாக முடிந்துவிடும் என நினைத்தேன். அவர், கடைசி வரையிலும் களத்தில் இருந்திருந்தால் 5 முதல் 6 ஓவர்கள் மீதம் வைத்து ஆட்டத்தை முடித்திருப்போம். ஆனால், ஆட்டம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என தோன்றியது. அதை கணிக்கவும் முடியாது. பந்துவீச்சில் தொடக்கத்தில் நாங்கள் விக்கெட்களை வீழ்த்தாவிட்டாலும் ரன்களை அதிகம் விட்டுக்கொடுக்காதது நல்லதாக அமைந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் வெவ்வேறு கட்டங்கள் உள்ளன. ஆடுகளம் மெதுவாக இருப்பதாக உணர்ந்தேன், அதிக பவுன்ஸ் கூட இல்லை” என கூறினார்.

ஏற்கனவே ஆல்ரவுண்டர்களை இந்திய அணியில் எந்த இடத்தில் ஆடவைக்கலாம் என பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. மேலும், கெளதம் கம்பீரின் ஆதரவு ஹர்ஷித் ராணாவுக்கு அதிகம் உள்ளதாக சர்ச்சைகள் சூழ்ந்தவண்ணம் உள்ள நிலையில், ஆல்ரவுண்டர் குறித்த ஹர்ஷித் ராணாவின் பேச்சு மேலும் இந்த சந்தேகங்களை வலுவடைய செய்துள்ளது.
தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு சர்ச்சைகள் சூழ்ந்துகொண்டுள்ள நிலையில், ஆல்ரவுண்டர் குறித்த இடம் மேலும் கேள்விக்குள்ளாகியுள்ளதா? அல்லது மாற்று வீரர்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா என கேள்வி எழுந்துள்ளது.






