
ஐபிஎல் தொடரில் தலா 5 கோப்பைகளை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் வெற்றிகரமான அணிகளாக திகழ்கிறது. இந்த இரு அணிகளுக்கும் உலகம் முழுவம் ஏராளமான ரசிகர்களும் இருந்து வருகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் சிறந்த அணிகளாக இவை கருதப்படுகின்றன.
அதே நேரம் ஐபிஎல் தொடரின் முக்கிய அணிகளில் ஒன்றாக திகழும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ஆண்டுகள் ஆடியும், ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத நிலையில், கடந்த ஆண்டு அதிரடியாக விளையாடி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. மேலும், பெங்களூரு அணியின் ரசிகர்கள் பலம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இணையாக வலிமையாக உள்ளது.

கோப்பையை வென்ற பின்னர் அணியின் வெற்றியை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு அணியின் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அணி நிர்வாகம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, அந்த அணியின் உரிமையாளரான இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிர்வாகம் அணி விற்பனை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.16,834 கோடிக்கு அந்த அணி விற்பனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.






