தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நார்வே மற்றும் ஆர்மேனியா நாடுகளில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டிகளில் முன்னணி இடங்களை வென்ற தமிழ்நாடு செஸ் வீரர்கள் டி.குகேஷ், அரவிந்த் சிதம்பரம், ர.பிரக்ஞானந்தா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நார்வே செஸ் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த நடப்பு இளம் உலக சாம்பியனும், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றவருமான டி. குகேஷ், ஸ்டீபன் அவாக்யன் நினைவு செஸ் போட்டியில் முதலிடம் பிடித்த அரவிந்த் சிதம்பரம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த ர.பிரக்ஞானந்தா ஆகியோருக்கு இன்று (12.6.2025) வாழ்த்து தெரிவித்தார்.
அரவிந்த் சிதம்பரம், ஸ்டீபன் அவாக்யன் நினைவு செஸ் போட்டியில் முதல் இடத்தை பிடித்ததன் மூலம் தற்போது FIDE உலக தரவரிசை பட்டியலில் முதல் 10-தர இடங்களுக்குள் நுழைந்துள்ளார். அரவிந்த் சிதம்பரம் சென்னையில் கடந்த ஆண்டு SDAT யின் மூலம் நடத்தப்பட்ட சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் மாஸ்டர் பிரிவில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.குகேஷ் மற்றும் ர.பிரக்ஞானந்தா இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான Elite திட்டத்தின்கீழ் பயன் பெற்று வருகின்றனர்.
சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் தங்களை மேலும் தயார்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் எலைட் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 30.00 லட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றது, விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு தேவையான அதிநவீன உபகரணங்களை வாங்கிக் பயன்படுத்தவும், வெளிநாடுகளுக்கு சென்று சிறந்த பயிற்சியாளர்களிடம் பயிற்சி மேற்கொள்ளவும், தொடர்ந்து சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் எலைட் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகின்றது.
நார்வே செஸ் போட்டி, ஸ்டீபன் அவாக்யன் நினைவு செஸ் போட்டி ஆகியவற்றில் முன்னணி இடங்களை வென்றதன் மூலம் உலக டாப் 10 தரவரிசையில் இருக்கும் நான்கு இந்திய வீரர்களில் மூன்று பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது விளையாட்டில் உலக அளவில் முன்னணி இடமாக தமிழ்நாட்டினை உருவாக்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சிகளுக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது : -
Chess Grandmasters தம்பிகள் டி.குகேஷ், அரவிந்த் சிதம்பரம், ர.பிரக்ஞானந்தா ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்று உலகெங்கும் Chess விளையாட்டில் வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர்.
இவர்களின் வெற்றி பயணத்தின் மேலும் ஒரு மைல்கல்லாக, அண்மையில் நடைபெற்ற #norwaychess2025-ல் தம்பி குகேஷ் மூன்றாம் இடத்தை பிடித்திருந்தார்.
அதே போல, StepanAvagyan நினைவு செஸ் போட்டியில் தம்பி அரவிந்த் சிதம்பரம் முதலிடத்தை வென்று , உலக தரவரிசைப்பட்டியலிலும் Top10-க்குள் இடம்பிடித்துள்ளார்.
அதே போல, Stepan Avagyan நினைவு செஸ் போட்டியில் தம்பி பிரக்ஞானந்தா 2-ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச செஸ் போட்டிகளில் Top 10 Ranking-ல் உள்ள 4 இந்தியர்களில், குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் அரவிந்த் சிதம்பரம் என மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதிலும், குறிப்பாக, தம்பிகள் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா நம்முடைய SDAT-இன் ELITE திட்ட வீரர்கள் என்பதிலும் கூடுதல் பெருமை கொள்கிறோம்.
தம்பிகள் மூவரையும் இன்று நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம். இவர்கள் இன்னும் பல சர்வதேச Chess போட்டிகளில் சாதனைகளை குவிக்க தமிழ்நாடு அரசும், நம் விளையாட்டு மேம்பாட்டுத்துறையும் உறுதுணையாக இருக்கும்.