யூரோ கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காலிறுதிக்கு ஸ்பெயின், ஜெர்மனி, போர்த்துக்கல், பிரான்ஸ், இங்கிலாந்து,ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, துருக்கி ஆகிய அணிகள் முன்னேறின. தொடர்ந்து நேற்று நடந்த மூன்றாவது காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி ஸ்விட்சர்லாந்து அணியை சந்தித்தது.
இதில் ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர் எம்போலா கோலடித்து அசத்தினார். இதற்கு 80-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி பதில் கோல் அடித்தது. இங்கிலாந்து வீரர் சாகா அந்த அணிக்காக ஒரு அசத்தல் கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டுவந்தார். தொடர்ந்து 90 நிமிடங்கள் முடிந்தும் 1-1 என்ற நிலை இருந்தததால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது.
இதில் இரண்டு அணிகளும் கூடுதல் கோல் அடிக்காத நிலையில், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்க்கு சென்றது. இதில் இங்கிலாந்து அணி தனது 5 வாய்ப்பையும் கோலாக்கியது. ஆனால் ஸ்விட்சர்லாந்து வீரர் அகாஞ்சி தனது வாய்ப்பில் கோலாக்க தவறியதால் இங்கிலாந்து அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதி போட்டியில் துருக்கி அணி நெதர்லாந்து அணியை சந்தித்தது. இதில் ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் துருக்கி அணி கோல் அடித்தது. பின்னர் இரண்டாம் பாதியில் (ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில்) நெதர்லாந்து அணி பதில் கோல் அடித்தது. அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் துருக்கி அணியின் தடுப்பாட்டக்காரர் காலில் பட்டு அந்த கோல் சுய கோலாக மாற ஆட்டத்தின் 2-1 என்ற கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது.
இதற்கு துருக்கி அணியால் இறுதிவரை பதில் கோல் அடிக்க முடியாத நிலையில், நெதர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. தொடர்ந்து முதலாவது அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணி பிரான்ஸ் அணியையும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து அணி இங்கிலாந்து அணியையும் சந்திக்கவுள்ளது.