5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த உலகக்கோப்பையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் வர்ணனையாளர் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஜைனப் அப்பாஸ் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் வர்ணனையாளர் குழுவில் இடம்பெற்றிருந்தார். இவரின் முந்தைய சமூக வலைதள பதிவில் மத ரீதியான சில கருத்துக்கள் இருந்ததாகவும், இதனால் அவர் மீது இந்துத்துவ அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது.
இதனால் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் பாகிஸ்தானுக்கு திரும்பிச்சென்றுள்ளார். இந்த தகவலை குறிப்பிட்டு அவர் உலகக் கோப்பை கிரிக்கெட் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டதாகவும், இந்தியாவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதாகவும் பாகிஸ்தான் செய்தி சேனல் செய்தி வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக ஜைனப் அப்பாஸ் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. ஆனால், இது குறித்து ஜைனப் அப்பாஸ் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.