5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. அதன்படி இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில், பலம்வாய்ந்த பாகிஸ்தான் அணியே கோப்பையை வெல்லும் என அந்நாட்டு முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "எங்கள் காலத்தில் நாங்கள் இந்திய அணியுடன் அடிக்கடி விளையாடினாலும் வெற்றி -தோல்வி எங்களை பெரிதாக பாதித்ததில்லை.
ஆனால், உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் அழுத்தம் பலமடங்கு அதிகரிக்கிறது. இதனால் நாங்கள் அவர்களிடம் தோல்வியைத் தழுவினோம். ஆனால், இப்போதிருக்கும் பாகிஸ்தான் வீரர்கள் அந்த மன அழுத்தத்தை சமாளித்து, வெற்றியை பதிவு செய்துள்ளார்கள்.
அந்த அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். எனவே இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் அது இந்தியாவில் நடந்தாலும், பாகிஸ்தானில் நடந்தாலும் அதை பற்றி கவலைப்படமாட்டார்கள். இந்த உலகக் கோப்பையை பலம்வாய்ந்த பாகிஸ்தான் அணி வெல்லும்" என்று கூறியுள்ளார்.