
டெஸ்ட் அரங்கில் பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், ஆஷிஷ் தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களும், இங்கிலாந்து அணி 325 ரன்களும் குவித்தது.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி வெற்றிபெற 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனால் முக்கியமான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வுசெய்ய, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஸின் 118 ரன்கள் உதவியோடு 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சில் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் இறுதிக்கட்ட அதிரடியான 80 ரன்கள் மூலம் 237 ரன்கள் குவித்தது.
பின்னர் 26 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.
இதனை துரத்தி ஆடிய இங்கிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததும், ஒரு முனையில் ஹாரி ப்ரூக் சிறப்பாக ஆடி 75 ரன்கள் குவிக்க, இறுதியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி திரில் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து திரும்ப வந்துள்ளது.






