
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு அதிக அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், சர்வதேச அணிகளின் வீரர்கள் கூட ஐபிஎல் தொடரில் விளையாட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில், வங்கதேச வீரர்களான ஷகிப் அல் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் கேகேஆர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

ஆனால், அயர்லாந்துக்கு எதிரான சர்வதேச போட்டி இருந்ததால் அவர்கள் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தால் திரும்ப அழைக்கப்பட்டனர். அதே போல டெல்லி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட முஷ்தபிகுர் ரஹ்மானும் திரும்ப அழைக்கப்பட்டனர். மேலும், டஸ்கின் அஹமதுவை மாற்று வீரராக சேர்க்க ஐபிஎல் அணிகள் முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்த வீரர்களுக்கு 65,000 டாலர் (ரூ.53,26,542) இழப்பீடு கொடுக்கப்பட்டதென வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஜலால் யூனுஸ், " ஐபிஎல் போட்டிகளில் ஆடாததற்கு வங்கதேச வீரர்கள் இழப்பீடு கேட்கவில்லை. ஆனால் எங்களால் முடிந்ததை செய்துள்ளோம். நாட்டின் அணிக்காக விளையாடுவது என்பது நிபந்தனைகளற்ற ஒன்றாகவே பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.








